"குடும்பத்திற்கு முக்கியத்தும் கொடுத்தால் இதுதான் பிரச்னை" ஆளுநர் ரவி சொல்ல.. கவனித்த பார்வையாளர்கள்
சென்னை: தலைநகர் சென்னையில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய ஆளுநர் ரவி, கார்ல் மார்க்ஸை குறிப்பிட்ட பேசிய பேச்சு இப்போது விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
தலைநகர் சென்னையில் பாஜகவின் தீனதாயாள் உபாத்யா குறித்த புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட தமிழ்நாடு ஆளுநர் ரவி புத்தகத்தை வெளியிட்டார்,

அதன் பின்னர் பேசிய ஆளுநர் ரவி பல முக்கிய விஷயங்கள் குறித்தும் பேசினார். முதலில் கிருஷ்ணகிரி பட்டாசு விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கலைத் தெரிவித்துக் கொண்ட அவர், இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் விரைவில் குணமாக வேண்டும் என்று பிரார்த்தனை செய்வதாகக் குறிப்பிட்டார்.
ஆளுநர் ரவி: தொடர்ந்து பேசிய ஆளுநர் ரவி, "இந்தியாவில் ஆங்கிலேயர்கள் நம்மை விட்டுச் சென்ற போது, இங்கே இருந்த ஜாதிகள் மற்றும் பழங்குடிகளின் எண்ணிக்கையை எடுத்துப் பார்த்தால்.. இப்போது அவை பல மடங்கு அதிகரித்துள்ளது. கடந்த 1956ஆம் ஆண்டில் மெட்ராஸ் பிரிக்கப்படும் முன்பு அனைவரும் இங்கே ஒன்றாகவே இருக்கிறார்கள். ஆங்கிலேயர்களின் சதியின் காரணமாகவே இந்த பிரிவினை உருவானது. இதன் பின்னரே பல நூற்றாண்டுகளாக வாழ்ந்த இடத்திலேயே புலம் பெயர்ந்தவர்கள் என்று அழைக்கும் நிலை எல்லாம் உருவானது.
இங்கு ஹைட்ரஜன் மற்றும் ஆக்சிஜன் ஆகியவை ஒன்றாக இணைந்தால் மட்டும் நீர் என்பது உருவாகும். நாமும் இப்படி தான் மற்றவர்களைப் பார்க்க வேண்டும். உலகில் ஒவ்வொருவரையும் தனித்தனியாகப் பார்க்கும் நமது பார்வையால் தான் பிரச்சினை வருகிறது. ஆனால், நாம் வளர்ச்சியடைய அனைவரும் தேவை என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.
கார்ல் மார்க்ஸ்: கார்ல் மார்க்ஸ் கூட தனிமனித வளர்ச்சியில் தான் மிகப் பெரிய நம்பிக்கையை வைத்திருந்தார். அவர் குடும்பமாக இருப்பதிலும் சமூகமாக இருப்பதிலும் நம்பிக்கை இல்லாமலேயே இருந்தார்,. தனிமனித வளர்ச்சியை குடும்பம் என்பது தடுக்கும் என்பதை அவர் முழுமையாக நம்பினார். குடும்பம் பார்க்க அழகாக இருக்கும். இருப்பினும், அது வாழ்க்கைக்கு உகந்தது இல்லை.
கார்ல் மார்க்ஸ் போன்ற தலை சிறந்த அறிஞர்கள் நமக்கு ஏற்படும் அனைத்து வகை உணர்ச்சிகளையும் வேதியில் மாற்றம் என்றே குறிப்பிட்டார்கள். அவர்கள் சொன்னது தான் இன்று வரை பிரதிபலிக்கிறது. டார்வின் என்ற அறிஞர் குரங்கிலிருந்து தான் மனிதர்கள் வந்தார்கள் என்பதைத் தெரிவித்தார். இதைத் தான் நாம் டார்வின் கோட்பாடு என்று பள்ளி கல்லூரிகளில் படித்திருப்போம். இருப்பினும், அதை அனைவரும் நம்புவதில்லை. முதலாளித்துவத்தின் தார்மீகத்தை டார்வின் நியாயப்படுத்தினார்.
சொல்லப்போனால், அனைத்து இந்தியர்களும் ஒரு மரத்தின் ஆயிரக்கணக்கான இலைகள் தான். இங்கு இருக்கும் நாம் அனைவரும் ஒரே குடும்பம் தான்.. எனவே, மரத்தில் இருக்கும் இலைகள், பிரிந்து சென்றால் அவைகள் எங்கு இருக்கிறது என்றே தெரியாமல் போய்விடும். எனவே, மக்கள் அனைவரும் ஒன்றாகவே இருக்க வேண்டும். நீங்கள் கடற்கரைக்குச் சென்றால், அங்கே லட்சக்கணக்கான அலைகளை நாம் பார்க்கலாம்... அதுபோல லட்சக்கணக்கான அலைகள் ஒன்றாகச் சேர்ந்தது தான் இந்தியப் பெருங்கடல்.
இந்தியா: நமது இந்திய ராணுவத்திலும், பொருளாதாரத்திலும் மட்டும் வலிமையாக இருந்தால் அது போதவே போதாது.. நாம் அனைவரும் ஒரே குடும்பமாக இருக்க வேண்டும்.. இப்போது புதிது புதிதாக ஏதேதோ அடையாளங்களைச் சொல்கிறார்கள். ஆனால், அப்போதெல்லாம் திராவிடம், ஆரியம் என்று தனித்தனியாக எதுவும் இல்லை. ஆனால், இப்போது தான் இவை எல்லாம் சொல்கிறார்கள். இது பிரிவினையைத் தான் ஏற்படுத்துகிறது" என்று அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications