ஆளுநருக்கு வேலை இல்லை.. அதனால் அடிக்கடி டெல்லி போகிறார்.. ஒரே வரியில் முடித்த உதயநிதி ஸ்டாலின்!
சென்னை: டெல்லி சென்றுள்ள தமிழக ஆளுநர் ஆர் என் ரவி இன்று மத்திய அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசினார். இதற்கிடையே ஆளுநரின் டெல்லி பயணத்தை விமர்சித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், "ஆளுநருக்கு எந்த வேலையும் இல்லை. அதனால்தான் அவர் அடிக்கடி டெல்லி சென்று வருகிறார்" என்றார்.
தமிழகத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் அரசுக்கும் இடையே பல்வேறு விவகாரங்களில் கருத்து மோதல் நிலவுகிறது. தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பப்பட்ட பல மசோதக்களை ஆளுநர் கிடப்பில் போட்டுள்ளதால் இது தொடர்பாக அரசுக்கும் ஆளுநருக்கும் இடையே கடும் மோதல் போக்கு நீடித்து வருகிறது. அண்மையில் செந்தில் பாலாஜி விவகாரத்தில் தமிழக அரசு எடுத்த நிலைப்பாட்டுக்கு நேர் எதிரான நிலைப்பாட்டை எடுத்த ஆளுநர் ஆர்.என்.ரவி, செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்குவதாக அறிவித்தார்.

ஆளுநருக்கு இப்படி ஒரு அதிகாரம் இல்லை என்று கூறிய தமிழக அரசு வழக்கு தொடர இருப்பதாக கூறியது. ஆளுநர் தனது உத்தரவை சில மணி நேரங்களில் நிறுத்தி வைத்தார். உள்துறை அமைச்சகத்தின் அறிவுறுத்தலின் பேரில் உத்தரவு நிறுத்தி வைக்கப்பட்டு இருப்பதாக ஆளுநர் கூறியிருந்தார். இப்படி தமிழக அரசுக்கும் ஆளுநருக்கும் இடையே தொடர்ந்து மோதல் போக்கு நீடித்து வரும் நிலையில், ஆளுநர் ஆர்.என்.ரவி நேற்று டெல்லி புறப்பட்டு சென்றார்.
டெல்லியில் இன்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசினார். வரும் 13 ஆம் தேதி வரை டெல்லியில் முகாமிடும் ஆளுநர், பல்வேறு விவகாரங்கள் குறித்து முக்கிய ஆலோசனை மேற்கொள்வார் என்று தெரிகிறது. இதனிடையே, ஆளுநரின் டெல்லி பயணம் குறித்து கருத்து தெரிவித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், ஆளுநருக்கு வேறு வேலை இல்லாததால் டெல்லி செல்வதாக பதிலளித்தார்.

திருச்சியில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியதாவது:- கர்நாடகாவில் இருந்து தமிழகத்திற்கு தேவையான காவிரி நீரை பெற்றுத்தர முதல்வர் மு.க ஸ்டாலின் உரிய நடவடிக்கை எடுப்பார். தமிழக ஆளுநர் டெல்லி பயணம் குறித்து கேட்கிறீர்கள்.. ஆளுநருக்கு எந்த வேலையும் இல்லை. அதனால்தான் அவர் அடிக்கடி டெல்லி சென்று வருகிறார்.
செந்தில் பாலாஜி கைது செய்த பிறகு திமுக அமைச்சர்கள் பயத்தில் இருப்பதாக எடப்பாடி கூறியிருக்கிறார். நாங்கள் எவருக்கும் பயப்படவில்லை. எடப்பாடி பழனிசாமி அப்படித்தான் பேசுவார். யார் யாருக்கு அடிமையாக இருக்கிறார்கள் என்பது மக்களுக்கு நன்கு தெரியும். அதிமுகதான் பாஜகவிற்கு அடிமையாக இருக்கிறது. இவ்வாறு உதயநிதி ஸ்டாலின் பேசினார்.












Click it and Unblock the Notifications