ஸ்வீட் பாக்ஸ்க்கு ஆசைப்பட்டு அட்ரஸை போட்ட மதுரை வீரமணி.. குவியும் ஆர்டர்.. வித்தியாசமான பழிவாங்கல்
சென்னை: இன்ஸ்டாகிராமில் பிரபலமானவர் மதுரையைச் சேர்ந்த வீரமணி. இவருக்குக் கடந்த சில நாட்களாகவே ஆன்லைனில் 'கேஷ் ஆன் டெலிவரி' (Cash on Delivery) முறையில் தொடர்ச்சியாக ஏராளமான ஆர்டர்கள் வந்த வண்ணம் உள்ளன.
இதனால், ஒரே நேரத்தில் பல டெலிவரி ஊழியர்கள் இவரது வீட்டிற்கு வந்து பில்லைக் கொடுத்துப் பொருளை வாங்குமாறு கேட்கின்றனர். இதில் அதிர்ச்சியும் பயமும் அடைந்த அவர், "என்னடா இது பெரிய சோதனையா இருக்கு!" என்று நொந்துபோய் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.

சமீபத்தில் இலவசமாக ஸ்வீட் பாக்ஸ் ஒன்று கிடைக்கும் என்ற ஆசையில், தனது வீட்டு முகவரியை (Address) சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அவ்வளவுதான்... நெட்டிசன்கள் சிலர் இவர் மீது காழ்ப்புணர்ச்சியைக் காட்டும் வகையில், அவரது முகவரிக்குக் கண்டபடி ஆன்லைனில் ஆர்டர்களைப் போட்டுப் பழிவாங்கி வருகின்றனர்.
இது குறித்து வீடியோவில் வீரமணி கதறியவாறு கூறியிருப்பதாவது:
"அடேய் விளங்காதவங்களா... உங்க கை, கால்களில் விழுந்து கும்பிடுகிறேன்டா. தயவுசெய்து ஆர்டர் போடுவதை நிறுத்துங்கடா. என்னால் போனைக்கூட பார்க்க முடியலைடா. போனை ஆஃப் பண்ணி வைத்தாலும் பிரச்சனை, ஆன் பண்ணினாலும் பிரச்சனை... என்னால் தாங்க முடியலைடா! எவ்வளவுடா ஆர்டர் போடுவீங்க? இதையெல்லாம் எப்போடா போட்டீங்க, எங்கிருந்துடா போடுறீங்க?
ஒரு ஸ்வீட் பாக்ஸுக்கு ஆசைப்பட்டு முகவரியைக் கொடுத்துவிட்டு படாதபாடு படுகிறேன்டா. இனிமேல் நான் உங்ககிட்ட எதுவுமே கேட்க விரும்பலடா. தயவுசெய்து ஆர்டர் போடுவதை மட்டும் நிறுத்துங்கடா, அது போதும். உங்களுக்குக் கோடான கோடி நன்றி, புண்ணியமா போகும். நீங்களாம் நல்லா இருப்பீங்களாடா? மெண்டல், கிறுக்குப் பயலுகளா... எனக்கு பிபி (Blood Pressure) ஏறுதுடா, பிரஷர் மாத்திரை வேற சாப்பிட்டுக் கொண்டிருக்கிறேன்டா!"
வீரமணி இப்படி புலம்புவதில் நியாயம் இல்லாமல் இல்லை. ஏனெனில், ஒரே நேரத்தில் ஏராளமான பொருட்கள் கேஷ் ஆன் டெலிவரி முறையில் வந்துகொண்டே இருக்கின்றன. அதில் ஒருவர் ₹1,69,000 மதிப்பிலான தொலைக்காட்சியை ஆர்டர் செய்துள்ளார்; மற்றொருவர் பீரங்கி வரை ஆர்டர் செய்துள்ளார்.
ஒரு கட்டத்தில், வீட்டிற்கு வந்த அமேசான் டெலிவரி ஊழியரிடமே அவர் கதறியுள்ளார். "ஒருவரைப் பழிவாங்க இப்படி கூடவா செய்வார்கள்?" என்று இந்த வீடியோவைப் பார்த்த பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
ஸ்வீட் பாக்ஸ் ஒன்னுக்கு ஆசைப்பட்டு அட்ரஸ்ஸ போஸ்ட் பண்ணிட்டார் போல. CODல என்னன்ன ஆர்டர் போட்டுவுட்ருக்கானுங்க பாருங்கஅதுவும் லாஸ்ட் ஆர்டர் தான் ஹைலைட்டு 😂😁 https://t.co/SfOB8ABxYy
— வாத்தி (@DrVaathi) October 8, 2026
அதேவேளையில், இதைப் பார்த்த நெட்டிசன் ஒருவர், "ஆரம்பத்தில் இதைப் பார்க்கும்போது சிரிப்பாகத்தான் இருந்தது. ஆனால், இவரது எல்லா வீடியோக்களிலும் இதுதான் நடக்கிறது. இதனால் பல டெலிவரி ஊழியர்கள்தான் கஷ்டப்படுகிறார்கள். இவர் வேண்டுமென்றே தனது முகவரியை வீடியோவில் காட்டி, எங்கோ இருக்கும் நபர்கள் கேஷ் ஆன் டெலிவரியில் ஆர்டர் போட்டு ஜாலி செய்வதாகக் காட்டி வீடியோ போடுகிறார்" என்று விமர்சித்துள்ளார்.
எது எப்படியோ, ஒரே நேரத்தில் வந்துகொண்டே இருக்கும் ஆன்லைன் ஆர்டர்களால் வீரமணி முற்றிலும் வெறுத்துப்போயுள்ளார்.




Click it and Unblock the Notifications
