ஜிஎஸ்டி வரியில் மாற்றம்.. இன்று முதல் அமலாகிறது! எந்தெந்த பொருட்களின் விலை குறைகிறது? விவரம்
சென்னை: சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) விகிதம் 4 அடுக்குகளாக இருந்த நிலையில், தற்போது இரண்டு அடுக்குகளாக குறைக்கப்பட்டிருக்கிறது. இந்த மாற்றம் இன்று முதல் அமலுக்கு வருகிறது. இதனால் பல்வேறு பொருட்களின் விலை குறைகிறது.
கடந்த செப்டம்பர் 4ம் தேதி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில், ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. இதில் பல முக்கிய அறிவிப்புகள் வெளியாகியிருந்தன. குறிப்பாக 5%, 12%, 18%, மற்றும் 28% என நான்கு விகிதங்களாக விதிக்கப்பட்டு வந்த ஜிஎஸ்டி வரி இனி 5% மற்றும் 18% என இரண்டு விகிதங்களாக குறைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த மாற்றம் செப்டம்பர் 22ஆம் தேதி முதல், அதாவது இன்று முதல் நடைமுறைக்கு வருவதாகவும் அறிவிக்கப்பட்டிருந்தது.

அந்த வகையில் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களான ஹேர் ஆயில், ஷாம்பு, டூத் பேஸ்ட், சோப், டூத் பிரஸ், முகம் சவரம் செய்யும் கிரீம், வெண்ணெய், சீஸ், பொட்டலங்களில் அடைக்கப்பட்ட தின்பண்டங்கள், பாத்திரங்கள், குழந்தைகளுக்கான பாலூட்டும் பாட்டில்கள், நாப்கின்கள் மற்றும் டயப்பர்கள், தையல் இயந்திரம், அதன் பாகங்கள் உள்ளிட்டவைக்கு ஜிஎஸ்டி வரி குறைக்கப்பட்டு இருக்கிறது. அதேபோல சுகாதார மற்றும் ஆயுள் காப்பீட்டுக்கான ஜிஎஸ்டி வரி 18 சதவீதத்திலிருந்து பூஜ்ஜியமாக குறைக்கப்பட்டிருக்கிறது. மறுபுறம் தெர்மாமீட்டர், மருத்துவ தர ஆக்சிஜன் ,நோய் அறிதல் கிட், குளுக்கோமீட்டர், சோதனை அட்டைகள் உள்ளிட்ட மருத்துவ பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரி 5 சதவீதமாக குறைக்கப்பட்டு இருக்கிறது.
கல்வித்துறை பொறுத்தவரையில், வரைபடங்கள், விளக்கப்படங்கள், உலக உருண்டைகள், பென்சில்கள், ஷார்ப்பனர்கள், வண்ண பென்சில்கள், புத்தகங்கள் மற்றும் குறிப்பேடுகள், ரப்பர்கள் ஆகியவைக்கு ஜிஎஸ்டி 0% குறைக்கப்பட்டு இருக்கிறது.
வேளாண் பொருட்களை பொருத்தவரை டிராக்டர் டயர்கள் மற்றும் பாகங்கள் ஆகியவற்றிற்கு ஜிஎஸ்டி வரி 18 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாக குறைக்கப்பட்டிருக்கிறது. அதேபோல டிராக்டர்கள், பூச்சிக்கொல்லிகள், ஊட்டச்சத்து மருந்துகள், சொட்டு நீர் பாசன அமைப்புகள், தெளிப்பான்கள் உள்ளிட்டவற்றுக்கான ஜிஎஸ்டி வரி 12 சதவீதத்திலிருந்து 5% ஆக குறைக்கப்பட்டு இருக்கிறது.
மின்னணு பொருட்களை பொருத்தவரை மோட்டார் பொருத்தப்பட்ட மின்விசிறிகள், ஏசி இயந்திரங்கள் உள்ளிட்டவற்றிற்கு ஜிஎஸ்டி 28 சதவீதத்திலிருந்து 18 சதவீதமாக குறைக்கப்பட்டு இருக்கிறது. அதேபோல டிவி, மானிட்டர்கள், ப்ரொஜெக்டர்கள், செட்டாப் பாக்ஸ்கள் ஆகிவிட்டதற்கான ஜிஎஸ்டி வரையும் 28 இலிருந்து 18 சதவீதமாக குறைக்கப்பட்டு இருக்கிறது.
இந்த வரிமாற்றத்தால் அரசுக்கு ரூ. 93,000 கோடி வருவாய் இழப்பு ஏற்படும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. இந்த மாற்றம் காரணமாக மேற்குறிப்பிட்ட பொருட்களின் விலைகள் இன்று முதல் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications