நிலத்தின் வழிகாட்டி மதிப்பு மாறப்போகிறது.. வீடு நிலம் வாங்குவோருக்கு குட்நியூஸ்? அமைச்சர் தகவல்
சென்னை: தமிழக சட்டப்பேரவையில் வணிக வரி மற்றும் பதிவுத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் திங்கள்கிழமை நடந்தது. இதில் உறுப்பினர்களின் கேள்விகளுக்கு வணிக வரி மற்றும் பதிவுத் துறை அமைச்சர் பி.மூர்த்தி பேசும் போது, வழிகாட்டி மதிப்பு சீரமைக்கப்பட்டு விரைவில் நடைமுறைப்படுத்தப்படும் என்றார்.
தமிழ்நாட்டில் தற்போது பத்திரப்பதிவு கட்டணம் முன்பு இருந்ததை விட குறைக்கப்பட்டுள்ளது. அதேநேரம் வழிகாட்டி மதிப்பு அதிகமாக உள்ள காரணத்தால், ஒட்டுமொத்தமாக கணக்கிடும் போது, அரசு அறிவித்த பத்திரப்பதிவு கட்டண குறைப்பால் மக்களுக்கு இழப்பு தான் அதிகமாக உள்ளது.

இந்நிலையில் வழிகாட்டி மதிப்பை சீர் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. அதன்படி வழிகாட்டி மதிப்பை சீரமைத்தால், கண்டிப்பாக இப்போது உள்ளதைவிட பத்திரப்பதிவுக்கான கட்டணம் உயரும் என்றே ரியல் எஸ்டேட் நிபுணர்கள் கூறுகிறார்கள்,
திங்கள்கிழமையான நேற்று தமிழக சட்டப்பேரவையில் வணிக வரி மற்றும் பதிவுத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடந்தது. அந்த விவாதத்தில் உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து பேசிய அமைச்சர் பி மூர்த்தி, "மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியாக தமிழ்நாட்டின் பதிவுத் துறை உள்ளது. 70 வயதைக் கடந்தவர்கள் பத்திரம் பதிவு செய்ய வந்தால், அவர்களை காத்திருக்க வைக்காமல், உடனடியாக பத்திரப் பதிவை மேற்கொள்ளும் திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இதனை மக்கள் வெகுவாக வரவேற்றுள்ளனர்.
கடந்த ஆட்சிக் காலத்தில் வழிகாட்டி மதிப்பு குறைக்கப்பட்டது. அதேநேரம் பதிவுக் கட்டணம் அதிகரிக்கப்பட்டது. இதனால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டது. மேலும், வெளிச்சந்தை மதிப்பு வழிகாட்டி மதிப்பை பிரதிபலிக்கவில்லை, வங்கிகளில் கடன் பெற முடியாமல் நடுத்தர மக்கள் அவதிப்பட்டனர். இதனால் இதில் மாற்றம் கொண்டு வர வேண்டும் என்று பல்வேறு தரப்பிலும் கோரிக்கைகள் வந்தன. அதனடிப்படையில்தான் வழிகாட்டி மதிப்பு உயர்த்தப்பட்டு, பதிவுக் கட்டணம் குறைக்கப்பட்டிருக்கிறது.
எனினும், தமிழ்நாட்டில் சீரான வழிகாட்டி மதிப்பை உருவாக்குவதற்காக சிறப்பு உயர்நிலைக் குழு அமைக்கப்பட்டிருக்கிறது. இந்தக் குழு அனைத்து மாவட்டங்களுக்கும் நேரில் சென்று ஆய்வு மேற்கொள்கிறது. அந்தக் குழு அளிக்கும் பரிந்துரைகளின் அடிப்படையில், வழிகாட்டி மதிப்பு சீரமைக்கப்பட்டு விரைவில் நடைமுறைப்படுத்தப்படும்.
ஆவணங்கள் பதிவில் இணையதள சேவை அதிகமாகி வருகிறது. தற்போது செயல்படுத்தப்படும் ஸ்டார் 2.0 திட்டத்துக்கான சர்வரின் வேகம் குறைவாக உள்ளது. எனவே, இணையதள வேகத்தை அதிகரிப்பதற்காக ஸ்டார் 3.0 திட்டம் ரூ.328 கோடியில் உருவாக்கப்படும். சென்னை, மதுரை, கோவையில் அதிக எண்ணிக்கையில் ஆவணங்கள் பதிவு செய்யப்படுவதால், அங்குள்ள சார் பதிவாளர் அலுவலகங்கள் முன்னணி அலுவலகங்களாக மேம்படுத்தப்படும்" என அமைச்சர் மூர்த்தி தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications