குட்கா முறைகேடு! சி. விஜயபாஸ்கர், ஜார்ஜ் உள்பட 4 பேரும் அக்.14 இல் ஆஜராக சிறப்பு நீதிமன்றம் உத்தரவு
சென்னை: குட்கா முறைகேடு வழக்கில் கூடுதல் குற்றப்பத்திரிகை நகல் பெறுவதற்காக அக்டோபர் 14ம் தேதி நேரில் ஆஜராகும்படி, முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர் , பி.வி.ரமணா, முன்னாள் டி.ஜி.பி, டி.கே.ராஜேந்திரன், சென்னை காவல்துறை முன்னாள் ஆணையர் ஜார்ஜ் உள்ளிட்டோருக்கு சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் தடையை மீறி குட்கா பொருள்கள் விற்றதாகக் கூறி தாக்கல் செய்யப்பட்ட குட்கா முறைகேடு வழக்கில், அதிமுக முன்னாள் அமைச்சர்கள் பி.வி.ரமணா என்ற பி.வெங்கடரமணா, டாக்டர் சி.விஜயபாஸ்கர் சென்னை காவல்துறையின் முன்னாள் ஆணையர் எஸ்.ஜார்ஜ், தமிழக முன்னாள் டிஜிபி டி.கே.ராஜேந்திரன் உள்பட 21 பேர் மீது கூடுதல் குற்றபத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

சென்னை எம்.பி, எம்.எல்.ஏ மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்ற நீதிபதி சி. சஞ்சய் பாபா முன் கடந்த 9 தேதி விசாரணைக்கு வந்த போது, முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், பி.வி. ரமணா, ஓய்வு பெற டி.ஜி.பிகள் டி.கே.ராஜேந்திரன், ஜார்ஜ் உள்ளிட்டோர் நேரில் ஆஜராகி இருந்தனர்.
இந்த வழக்கு சிறப்பு நீதிமன்ற நீதிபதி சி.சஞ்சய் பாபா முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, சிபிஐ தரப்பில், குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு வழங்குவதற்காக, சுமார் 250 பக்க கூடுதல் குற்றபத்திரிகை, ஆவணங்கள் என சுமார் 20 ஆயிரம் பக்கங்களை கொண்ட நகல்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இதையடுத்து, விசாரணையை அக்டோபர் 14ம் தேதிக்கு தள்ளிவைத்த நீதிபதி, கூடுதல் குற்றபத்திரிகை பெற்றுக் கொள்வதற்காக குற்றம்சாட்டப்பட்ட அனைவரும் அன்றைய தினம் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications