H Raja: ஹெச் ராஜா உடல் நலம் எப்படி இருக்கு? மருத்துவமனைக்கே நேரில் சென்று நலம் விசாரித்த முதல்வர் ஸ்டாலின்
சென்னை: பக்கவாத பாதிப்பு காரணமாக தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள ஹெச் ராஜா உடல்நிலை குறித்து அறிய முதல்வர் ஸ்டாலின் சென்னை அப்பல்லோ மருத்துவமனைக்கு விரைந்தார். அங்கு மருத்துவர்களிடம் ஹெச் ராஜா உடல்நிலை குறித்து விசாரித்தார். மேலும் அவருக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைகள் குறித்தும் ஸ்டாலின் கேட்டறிந்தார்.
பக்கவாத பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பாஜக மூத்த தலைவர் ஹெச் ராஜாவுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து மருத்துவர்கள் கண்காணிப்பில் ஹெச் ராஜா இருந்து வருகிறார். முன்னதாக நண்பர்களுடன் பேசக்கூடிய வகையில் நலமுடன் உள்ளார் என அப்பல்லோ மருத்துவமனை கூறியிருந்தது.

அப்பல்லோ மருத்துவமனையில் ஹெச் ராஜா
தமிழக பாஜக மூத்த தலைவர்களில் ஒருவர் ஹெச். ராஜா. பாஜக தேசியக் குழு உறுப்பினர் உறுப்பினராக உள்ள ஹெச். ராஜா நேற்று முன்தினம் சென்னை கிண்டியில் நடைபெற்ற தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி பங்கேறார்.
அப்போது ஹெச். ராஜாவுக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டது. அங்கு இருந்தவர்கள் ஹெச். ராஜாவை மீட்டும் அருகில் உள்ள மருத்துவமனையில் அவசர சிகிச்சை அளித்தனர். தொடர்ந்து சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் ஹெச். ராஜா அனுமதிக்கப்பட்டார். ஹெச். ராஜாவுக்கு அப்பல்லோ மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
அப்பல்லோ மருத்துவமனை அறிக்கை
மூளை ரத்தக்குழாயில் அடைப்பு ஏற்பட்டதால் ஹெச். ராஜாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இதனால் அவருக்கு என்ன ஆனதோ என அவரது ஆதரவாளர்கள் அதிர்ச்சியடைந்தனர். இந்த நிலையில் ஹெச் ராஜா உடல்நிலை குறித்து அப்பல்லோ மருத்துவமனை அறிக்கை ஒன்றினை வெளியிட்டது.
இதில் 'ஹெச் ராஜா பக்கவாத பாதிப்புடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் அவர் உரையாடும் அளவுக்கு நலமுடன் இருக்கிறார்' என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஹெச் ராஜா உடல்நிலை குறித்து பாஜக மூத்த தலைவர்கள் நலம் விசாரித்து வருகிறார்கள்.
நேரில் சென்று நலம் விசாரித்த ஸ்டாலின், உதயநிதி
அந்த வகையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் மற்றும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் ஹெச் ராஜா உடல்நிலை குறித்து இன்று நேரில் சென்று நலம் விசாரித்தனர். இன்று சென்னை அப்பல்லோ மருத்துவமனைக்கு சென்ற முதல்வர் ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலின் ஹெச் ராஜாவின் குடும்பத்தினரை சந்தித்து உடல்நிலை குறித்து கேட்டறிந்தனர்.
ஹெச் ராஜாவுக்கு என்ன மாதிரியான சிகிச்சை அளிக்கப்படுகிறது, தற்போது உடல்நிலை எப்படி உள்ளது என்று கேட்டறிந்ததாகவும் கூறப்படுகிறது. தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவர்களிடமும் ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் ஹெச் ராஜா உடல்நிலை குறித்து கேட்டறிந்துள்ளனர்.
டிடிவி தினகரன் ட்வீட்
முன்னதாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனும் ஹெச் ராஜா விரைவில் உடல்நிலை தேறி வீடு திரும்ப வேண்டும் என்று வேண்டியிருந்தார். அவர், “உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கும் பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவரும் அக்கட்சியின் தேசிய பொதுக்குழு உறுப்பினரும் அன்பு நண்பருமான திரு H. ராஜா அவர்கள் பூரண குணமடைந்து விரைவில் வீடுதிரும்ப வேண்டும் என எல்லாம்வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்” என்று கூறியிருந்தார்.












Click it and Unblock the Notifications