பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை அரை நாள் விடுமுறை.. தீபாவளிக்கு திடீர் சர்ப்ரைஸ் கொடுத்த தமிழக அரசு
சென்னை: தீபாவளி பண்டிகையை ஒட்டி தமிழகம் முழுவதும் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை புதன்கிழமை அரை நாள் விடுமுறை அளித்து தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஏற்கனவே வரும் நவம்பர் 1 ஆம் தேதி வெள்ளிக்கிழமை அரசு விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில், தற்போது இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தீபாவளி பண்டிகை வரும் 31 ஆம் தேதி வியாழக்கிழமை கொண்டாடப்படுகிறது. தீபாவளி பண்டிகையை சொந்த ஊர் சென்று கொண்டாடும் மக்களின் வசதிக்காக வெள்ளிக்கிழமை விடுமுறை நாளாக தமிழக அரசு அறிவித்தது. தொடர்ந்து 4 நாள் விடுமுறை கிடைக்கும் என்பதால் மக்களின் வசதியை கருத்தில் கொண்டு இந்த அறிவிப்பை தமிழக அரசு அறிவித்தது.

நாளை அரைநாள் விடுமுறை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு இன்றே சிறப்பு பஸ்களும் ரயில்களும் இயக்கப்பட்டு வருகின்றன. நாளை சொந்த ஊர் செல்லும் பயணிகள் பலரும் ஆயத்தமாகி வரும் நிலையில், பெற்றோர்களின் வசதியை கருத்தில் கொண்டு நாளை புதன்கிழமை அரை நாள் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
நாளை பிற்பகலுக்கு மேல் அனைத்து கல்வி நிலையங்களுக்கும் விடுமுறை விடப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. சொந்த ஊர் செல்லும் பயணிகள் விரைவாக சிரமம் இன்றி புறப்பட ஏதுவாகவும் தீபாவளி பண்டிகையை சிறப்பாக கொண்டாடும் வகையிலும் இந்த அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
தீபாவளி பண்டிகை: தீப ஒளி திருநாள் என்று அழைக்கப்படும் தீபாவளி பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. மக்கள் புத்தாடை அணிந்து பட்டாசுகள் வெடித்து இனிப்புகள் பரிமாறி தங்கள் மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்வார்கள். தீபாவளி பண்டிகையை சென்னை உள்ளிட்ட வெளியூர்களில் வசிக்கும் மக்கள் சொந்த ஊர்களுக்கு சென்று கொண்டாடுவது வழக்கம்.
வெளியூர்களில் தங்கி படிக்கும் மாணவர்கள் மற்றும் வேலை பார்ப்பவர்கள் என்று பலதரப்பட்டவர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்று தீபாவளி பண்டிகையை கொண்டாடுவார்கள். இதனால், பேருந்து, ரயில்களில் பயணிகள் கூட்டம் அலைமோத தொடங்கியுள்ளது. பயணிகளின் வசதியை கருத்தில் கொண்டு சிறப்பு பேருந்துகளும் ரயில்களும் இயக்கப்பட்டு வருகின்றன.
வெள்ளிக்கிழமையும் விடுமுறை: தீபாவளி பண்டிகை வியாழக்கிழமை ஆகும். அதன்பிறகு வெள்ளிக்கிழமை வேலை நாளாக இருந்தது. சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வழக்கமான விடுமுறை என்பதால் வெள்ளிக்கிழமை ஒரு நாள் விடுமுறை அளித்தால் 4 நாட்கள் தொடர் விடுமுறை கிடைக்கும் நிலை இருந்தது. இதனால், பெற்றோர்களும் அரசு ஊழியர்களும் வெள்ளிக்கிழமை விடுமுறை நாளாக அறிவிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்தனர். மக்களின் கோரிக்கையை ஏற்று நவம்பர் 1 ஆம் தேதி விடுமுறை தினமாக தமிழக அரசு அறிவித்தது. கடந்த 19 ஆம் தேதி இதற்கான அறிவிப்பு வெளியானது.
தமிழக அரசு அறிவிப்பு: இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டு இருந்த அறிக்கையில், "தீபாவளியை வரும் 31-ந் தேதியன்று கொண்டாடும் பொருட்டு தமது சொந்த ஊர்களுக்கு சென்று திரும்பும் மாணவர்கள், அவர்களின் பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் நலனைக் கருத்தில் கொண்டு நவம்பர் 1-ந் தேதியன்று ஒரு நாள் மட்டும், தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது.
9 ஆம் தேதி பள்ளி செயல்படும்: அந்த விடுமுறையை ஈடு செய்யும் வகையில் 9.11.2024 அன்றைய நாளை (சனிக்கிழமை) பணி நாளாக அறிவித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது" என்று கூறப்பட்டு இருந்தது. தற்போது சொந்த ஊர் செல்லும் மக்கள் கிளம்ப வசதியாக நாளை பிற்பகலுக்கு மேல் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications