முதல்வர் ஸ்டாலினுக்கு சீன மொழியில் பிறந்தநாள் வாழ்த்து.. மீண்டும் சீண்டிய தமிழக பாஜக!
சென்னை: முதல்வர் மு.க ஸ்டாலினுக்கு அவருக்கு பிடித்தமான சீன மொழியில் பிறந்த நாள் வாழ்த்து தெரிவிக்கிறோம் என்று தமிழக பாஜக தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளது. குலசேகரன்பட்டினம் ராக்கெட் ஏவுதளம் தொடர்பான திமுக அமைச்சர் வெளியிட்ட பத்திரிகை விளம்பரத்தில் சீனக்கொடியுடன் கூடிய ராக்கெட் இடம் பெற்றிருந்ததை வைத்து மீண்டும் பாஜக சீண்டியுள்ளது.
தமிழ்நாடு முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் இன்று தனது 71வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். தனது பிறந்தநாளை ஒட்டி முதல்வர் ஸ்டாலின் சென்னை மெரினா கடற்கரை அருகே உள்ள அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து, வேப்பேரியில் உள்ள பெரியார் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார்.

சீன மொழியில் வாழ்த்து: பிறந்த நாளை முன்னிட்டு முதல்வர் முக ஸ்டாலினுக்கு பிரதமர் மோடி, ராகுல் காந்தி உள்பட தேசிய அளவிலான அரசியல் தலைவர்கள் முதல் உள்ளூர் தலைவர்கள் வரை பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையும் முதல்வர் முக ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்து இருந்தார். இந்த நிலையில், தான் முதல்வர் முக ஸ்டாலினுக்கு தமிழக பாஜக தனது எக்ஸ் தளத்தில் சீன மொழியான மண்டிரினில் வாழ்த்து கூறியது.. அரசியல் ரீதியாக சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக பாஜக தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், தமிழக பாஜக சார்பாக முதல்வர் முக ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்துக்கொள்கிறேன். முதல்வருக்கு பிடித்தமான மொழியில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம். அவர் நல்ல உடல் நலத்துடன் நீண்ட காலம் வாழ வாழ்த்துகிறோம்" என்று பதிவிட்டுள்ளது.
திமுகவிற்கு நாட்டுப்பற்று இல்லை: கடந்த 28 ஆம் தேதி தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். இந்த நிகழ்ச்சி தொடர்பாக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் முன்னணி தமிழ் நாளிதழ்களுக்கு விளம்பரம் ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதில், இடம் பெற்றிருந்த ராக்கெட் படத்தில் சீன கொடி இருந்தது. இது பெரும் விமர்சனத்திற்கு உள்ளானது.
பிரதமர் மோடியே தனது பேச்சின் போது, இந்த விவகாரத்தை கையில் எடுத்து பேசினார். பிரதமர் மோடி கூறுகையில், திமுக கொடுத்த பத்திரிகை விளம்பரத்தில் சீன கொடியுடன் ராக்கெட் படத்தை போட்டு இருக்கிறார்கள். அந்த அளவிற்குதான் திமுகவிற்கு இந்தியா மீது நாட்டுப்பற்று உள்ளது" என்று சாடியிருந்தார். எனினும், மறுநாளே அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் இது குறித்து விளக்கம் அளித்தார்.
தெரியாமல் நடந்த தவறு: அனிதா ராதாகிருஷ்ணன் கூறுகையில், "விளம்பரத்தில் சீன கொடி இடம்பெற்றது தெரியாமல் நடந்த தவறு. இதில் எந்த நோக்கமும் கிடையாது. இந்த விளம்பரத்தை தயார் செய்த நபர் இதுபோன்ற தவறுகளை செய்துவிட்டார்; நாங்களும் அதனை கவனிக்கவில்லை. மற்றபடி எங்களுக்கு எந்த உள்நோக்கமும் இல்லை.
இந்தியா குறித்த பற்றுதான் எங்கள் மனதில் இருக்கிறது" என்று விளக்கம் அளித்து சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தார். எனினும், இந்த விவகாரத்தை விடாமல் கையில் வைத்துக்கொண்டு தமிழக பாஜக மீண்டும் முதல்வர் மு.க ஸ்டாலினுக்கு சீன மொழியில் வாழ்த்துக்கூறி சீண்டியுள்ளது.












Click it and Unblock the Notifications