எடப்பாடியின் "காதை கிழித்த" உதயநிதி முழக்கம்.. அதுவும் சேலத்தில் இருந்து அறிவாலயம் பறந்த வாழ்த்து..!
சேலம் திமுகவில் இருந்து உதயநிதிக்கு வாழ்த்து செய்தி அனுப்பப்பட்டுள்ளது
சென்னை: சேலம் மாவட்ட திமுகவில் இருந்து உதயநிதி ஸ்டாலினுக்கு வாழ்த்து செய்தி ஒன்று பறந்துள்ளது.. இது சேலம் அதிமுகவை கடுப்பாக்கி வருகிறது.
உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பதவியேற்றதற்கு முந்தைய நாள், ஆத்தூரில் அதிமுகவின் ஆர்ப்பாட்டம் நடந்தது.. இதில் கலந்து கொண்டு எடப்பாடி பழனிசாமி பேசியபோது, கடுமையாக திமுகவை சாடியிருந்தார்.
எப்போதுமே திமுகவை விமர்சிக்கும் எடப்பாடி அன்றைய தினம், உதயநிதி ஸ்டாலினையும் சேர்த்தே பெருமளவு விமர்சித்து பேசியிருந்தார்.

4 முதல்வர்கள்
"நாளைய தினம் முதல்வர் ஸ்டாலின் மகன் உதயநிதி ஸ்டாலினுக்கு முடிசூட்டு விழா நடைபெறவுள்ளது. உதயநிநி அமைச்சர் ஆகிவிட்டால் தமிழகத்தில் பாலாறும் தேனாறும் ஓடபோகிறதா?.. அதிமுகவில் யார் வேண்டுமானாலும் தலைமை ஏற்கலாம். ஆனால் திமுகவில் அப்படியா இருக்கிறது? அது ஒரு கார்ப்பரேட் கம்பெனி போல இருக்கு.. திமுக ஆட்சியில் இப்போது நடைபெற்று வரும் ஊழலுக்கு உதயநிதி தலைமை ஏற்பார். தமிழகத்தில் ஏற்கனவே, 4 முதல்வர்கள் இருக்கிறார்கள். ஒரு முதல்வருக்கே தாங்காதபோது, 4 முதல்வர்கள் என்றால் இந்த நாடு தாங்குமா? வாரிசு அரசியலுக்கு முடிவு கட்டுவோம்" என்று காட்டமாக கூறியிருந்தார்.

வெடிசத்தம்
பதவியேற்பு விழாவுக்கு எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பிதழ் வைக்கப்பட்டும்கூட, உதயநிதியை இப்படித்தான் விமர்சித்திருந்தார்.. பதவியேற்பு விழா முடிந்ததுமே, தமிழகம் முழுவதும் திமுகவினர் பட்டாசு வெடித்து, இனிப்புகளை தந்து மகிழ்ச்சியை தெரிவித்தனர்.. அந்தவகையில், ஆனால், கொங்கு மண்டலம் மட்டும், சத்தமேயில்லாமல் ஆரவாரம் இல்லாமல் இருப்பதாக கூறப்பட்டது.. அதிலும் சேலம் மாவட்டம் சைலண்ட்மோடில் இருப்பதாகவும், தர்மபுரி, கிருஷ்ணகிரியிலும் வெடிசத்தம் எதையுமே காணோமே என்றும் உடன்பிறப்புகள் கவலைப்பட்டனர்.

கலைஞர்
ஒருவேளை எடப்பாடியின் தொகுதி என்பதால் அல்லது அதிமுகவின் கோட்டை என்பதால் இவ்வாறு இருக்கும் என்று கருதுவதைவிட, சேலத்திற்கு அமைச்சர் இல்லை என்பதால்தான், விழாக்கோலம் காணப்படவில்லை என்றார்கள்.. உடன்பிறப்புகளின் இந்த மனக்குறை மூத்த தலைவர் செல்வ கணபதி காதில் விழுந்துவிட்டது போலும்.. உடனே சேலத்தையே திணறடித்துவிட்டார்.. மாவட்ட திமுக அலுவலகமான கலைஞர் மாளிகையில், சேலம் மேற்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டத்தை கூட்டிவிட்டார்..

வாழ்த்துக்கள்
மேற்கு மாவட்ட அவைத் தலைவர் தங்கமுத்து தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், சேலம் மேற்கு மாவட்ட திமுக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான டி.எம்.செல்வகணபதி கலந்து கொண்டு, சிறப்பித்தார். உதயநிதி அமைச்சராக பொறுப்பேற்றதை வரவேற்கும் வகையில் வாழ்த்து தெரிவித்து தீர்மானமும் இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டதுடன், கடந்த சட்டமன்ற தேர்தல் மற்றும் நாடாளுமன்ற தேர்தலில் திமுகவின் வெற்றிக்கு உழைத்த உதயநிதிக்கு அமைச்சர் பதவி வழங்கிய தமிழக முதல்வருக்கும் நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது..

பறந்த விஷ்
இளைஞரணி செயலாளர் + அமைச்சர் பணி இரண்டிலும் கவனம் செலுத்த உள்ளதால், தனக்கு உறுதியாக மாவட்ட செயலாளர்கள் செயல்படுவார்கள் என்று உதயநிதியே நம்பிக்கை தெரிவித்திருந்தார். அந்த நம்பிக்கைக்குதான், சேலத்தில் இருந்து, மா.செ. செல்வகணபதி மூலம் அதிரடி கிளம்பி உள்ளது.. செல்வகணபதி கூட்டிய இந்த கூட்டம், சேலம் திமுகவை இழுத்துள்ளதுடன், திமுக இளைஞரணி செயல்பாடுகளையும் அடுத்தடுத்த லெவலுக்கு கொண்டு செல்லவும் திட்டமிட்டுள்ளாராம்.. அதுமட்டுமல்ல, சேலம் மேற்கு திமுகவில் இருந்து உதயநிதிக்கு வாழ்த்து செய்தி அனுப்பப்பட்டிருப்பது மற்ற மாவட்டங்களின் கவனத்தையும் திரும்பி பார்க்க வைத்து வருகிறது.












Click it and Unblock the Notifications