பெண்ணுக்கு சென்னை பாதுகாப்பான நகரம்.. கவனம் ஈர்த்த ரிப்போர்ட்.. மீண்டும் தமிழ்நாடு போலீஸ் நம்பிக்கை
சென்னை: பெண்களுக்கு மிகவும் பாதுகாப்பான நகரமாக சென்னை உள்ளது என்று காவல்துறை ஆணையர் தெரிவித்துள்ளார்.
சில மாதங்களுக்கு முன்பு, "நம்பியோ" NUMBEO என்ற தனியார் நிறுவனம் உலகின் முக்கிய நகரங்களில் பாதுகாப்பு குறித்து ஆய்வு ஒன்று நடத்தியது.. பல செய்தி நிறுவனங்கள் வெளியிட்ட செய்திகளின் அடிப்படையிலும், வேலைக்கு செல்லும் பெண்களின் பாதுகாப்பான சூழ்நிலை அடிப்படையிலும் இந்த ஆய்வு நடத்தப்பட்டிருக்கிறது.

பாதுகாப்பு நகரங்கள்: இதில், பாதுகாப்பான நகரங்களில் உலகளவில், சென்னை 208வது இடத்தை பிடித்திருந்தது.. அதாவது, இந்தியாவிலேயே முதல் இடத்தை பிடித்திருந்தது சென்னை.
எப்போதுமே, "கிரைம் இண்டெக்ஸ்" லிஸ்ட்டில் முதலிடத்தை பிடிக்கும் நகரம், மிகவும் ஆபத்தானது என்று அர்த்தம். இந்த லிஸ்ட்டில் கடைசி இடத்தில் இருக்கும் நகரம்தான், மிகவும் பாதுகாப்பானது என்று அர்த்தம். அப்படி அளவீடு செய்யப்பட்ட 334 நகரங்களில் சென்னை 208வது இடத்தை பிடித்திருந்தது.. அதாவது பாதுகாப்பான நகரங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.
மாநகரங்கள்: இந்திய அளவிலேயே பாதுகாப்பான மாநகரங்கள் பட்டியலில் சென்னை முதலிடம் பிடித்ததற்கு, காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் அப்போதே தன்னுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தி பெருமிதம் தெரிவித்திருந்தார்.
இதுகுறித்து அவர் சொன்னபோது, "அவ்தார்" நிறுவனம் நடத்திய ஆய்விலும், 10 லட்சத்துக்கும் மேல், மக்கள் தொகை உள்ள நகரங்களின் வரிசையில் பெண்களுக்கு பாதுகாப்பான மாநகரம் என்று சென்னை அறிவிக்கப்பட்டிருந்தது. நாட்டிலேயே பாதுகாப்பான மாநகரங்கள் பட்டியலில் சென்னை மீண்டும் முதலிடம் பிடித்திருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. சென்னை மக்களின் பாதுகாப்பை மேம்படுத்துவதற்காக, தன்னையே காவல்துறை அர்ப்பணிக்கிறது" என்றார்.
பேட்டி: இந்நிலையில், சென்னை மாநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் செய்தியாளர்களிடம் பேசும்போது, "சென்னையில் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த விவகாரம் தொடர்பாக தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது. அது குறித்த விவரங்களை தற்போது வெளியிட இயலாது. வெடிகுண்டு மிரட்டல் தொடர்பாக தேவையில்லாமல் பதற்றம் அடைய வேண்டாம். வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை கண்டறிந்து கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை விரைவில் கைது செய்து விடுவோம். இது போன்ற வெடி குண்டு மிரட்டல்கள் தொடர்பான தகவல்கள் வந்தால் பெற்றோர்கள் பதற்றம் அடைய வேண்டியதில்லை. சென்னை பெருநகர காவல்துறையினர் சரியான முறையில் பாதுகாப்பு வழங்கி வருகின்றனர். பெண்களுக்கு மிகவும் பாதுகாப்பான நகரமாக சென்னை உள்ளது. இவ்வாறு கூறினார்.
அதுமட்டுமல்ல, பெண்கள் பாதுகாப்புக்காக தமிழக அரசு "காவல் உதவி செயலி" என்ற தற்காப்புப்பயிற்சி மற்றும் சைபர் குற்ற விழிப்புணர்வு, பள்ளி மற்றும் கல்லூரி மாணவிகளுக்கு காவல்துறை சார்பில் விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது..
சபாஷ் சென்னை: சைபர் குற்றங்களிலிருந்து பெண்கள் தங்களை தற்காத்துக் கொள்வதற்காக, இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. கடந்தவாரம்கூட, இது தொடர்பான பேரணியை, சென்னை காவல் ஆணையாளர் கொடியசைத்து துவக்கி வைத்திருந்தார். இந்நிலையில், பெண்களுக்கு பாதுகாப்பான நகரமாக சென்னை உள்ளதை மீண்டும் தெரிவித்துள்ளார் கமிஷனர்.


Click it and Unblock the Notifications
