தமிழ்நாட்டில் விழுந்த "முடிச்சு".. கண்ணை மூடிக்கொண்டதா "பூனை".. பாஜக குஷி.. திணறும் எடப்பாடி பழனிசாமி
சென்னை: திமுக கூட்டணி வலுவாக உள்ள நிலையில், அதிமுகவில் அதற்கான அறிகுறியே தென்படாமல் உள்ளது.. தேர்தலுக்கு இன்னும் டைம் இருப்பதால், மெல்ல மெல்ல கூட்டணி உருவாகக்கூடுமோ? அல்லது கூட்டணி அமைவதிலேயே, சிக்கல் ஏற்பட்டுவிடுமா?
தமிழக பாஜகவை பொறுத்தவரை, இதுவரை அதிமுகவுடன் சமசரம் என்ற பேச்சை எடுக்கவில்லை.. எடப்பாடி பழனிசாமியையும் சமாதானம் செய்யும் முயற்சியிலும் இறங்கவில்லை.. மாறாக, முக்கிய பிரமுகர்களை சந்திப்பது, கூட்டணியை வலுப்படுத்துவது போன்ற அஜெண்டாவையும், தமிழக பாஜக கையில் எடுத்திருக்கிறது.

கூட்டணி: ஏற்கனவே, அமமுக, ஓபிஎஸ், சசிகலா 3 பேருமே பாஜகவுக்கு ஆதரவாக உள்ள நிலையில், பாமக, தேமுதிகவை கண்டிப்பாக கூட்டணியில் பாஜக இணைத்து கொள்ளக்கூடும் என்கிறார்கள்..
மற்றொருபுறம், தமாகா வாசன், ஜான்பாண்டியன், ஏசி சண்முகம், பாரிவேந்தர், டாக்டர் கிருஷ்ணசாமி, போன்றோரெல்லாம் இதுவரை அமைதி காத்து வருவதே பாஜகவுக்கு பிளஸ் பாயிண்ட்டாக அமைந்துள்ளதாம். அப்படியானால், அமமுக + ஓபிஎஸ் + சசிகலா + தமாகா + பாரிவேந்தர் + ஜான்பாண்டியன் + பாமக + தேமுதிக + டாக்டர் கிருஷ்ணசாமி, இவைகளை வைத்து, பாஜக 3வது அணியை முன்னெடுத்ததாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்கிறார்கள்.
போட்டா போட்டி: அப்படியானால், எடப்பாடி பழனிசாமி யாருடன் கூட்டணி வைக்க போகிறார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.. மறைந்த முதல்வர் ஜெயலலிதா இருந்தவரை, அதிமுகவுடன் கூட்டணி வைக்க கடும் போட்டா போட்டியே நடக்கும்..
ஒன்றிரண்டு சீட் கிடைத்தால் போதும் என்று, அன்றைய தினம் வாசலில் காத்துக்கிடந்தவர்கள் எத்தனையோ பேர்... கூட்டணிக்கு தங்களை அம்மா அழைக்கமாட்டாரா? என்று தவமாய் தவமிருந்தவர்கள் எத்தனையோ பேர். தேசிய கட்சிகளான பாஜக, காங்கிரஸுக்கும் இதுதான் அன்றைய நிலைமையாக இருந்தது.
தேமுதிக, பாமக: ஆனால், இப்போதே இது அப்படியே உல்டா ஆகிவிட்டது.. கடந்த தேர்தலின்போதுகூட, அதிமுகவின் நிலைமை ஓரளவு சுமார் என்று சொல்லலாம். அமமுக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகள், அதிமுகவுடன் கூட்டணி வைக்க கடைசி வரை காத்திருந்ததை மறுக்க முடியாது. இந்த 2 வருட காலமாகவே, அதிமுகவின் பலம் சற்று இறங்குமுகமாகி உள்ளது.
இதற்கு என்ன காரணம்? ஒற்றை தலைமையாக இருக்குமோ? அல்லது கட்சி முழுவதும் பாஜகவின் கட்டுப்பாட்டுக்குள் போய்விட்டது போன்ற ஒரு தோற்றமாக இருக்குமோ? என்பது உறுதியாக தெரியவில்லை.
பிரேமலதா: கடந்த முறை பாமகவை கூட்டணிக்குள் கொண்டுவந்ததால்தான், திமுகவுக்கு இணையான போட்டியை அதிமுகவால் தர முடிந்தது. ஆனால், பாமக இப்போது அமைதி காத்து வருகிறது.. அன்புமணி ராமதாஸ், வாசன், பிரேமலதா, கிருஷ்ணசாமி, ஏ.சி.சண்முகம் போன்றவர்கள் அதிமுக தலைமையை விடவும், பாஜக தலைமை மீது கூடுதல் நெருக்கத்துடன் இருப்பதாக தெரிகிறது. இதுவரை அதிமுகவுக்கு வெளிப்படையாக ஆதரவு காட்டாமல் இருப்பதும், கூட்டணி சந்தேகத்தை அதிகமாக்கி வருகிறது.
பாஜகவுடன் கூட்டணியை முறித்தால், சிறுபான்மையினர் ஓட்டுக்கள் + திமுகவின் எதிர்ப்பு ஓட்டுக்கள் என இரண்டையுமே தன்பக்கம் திருப்ப முடியும் என்று எடப்பாடி பழனிசாமி கணக்கு போட்டார்.. ஆனால், ஓவைசி தவிர வேறு யாருடைய ஆதரவையும் பெரிதாக பெற முடியவில்லை.. திமுக கூட்டணியிலிருந்தும், ஒருத்தரையும் அதிமுக பக்கம் கொண்டுவர முடியவில்லை.
பாஜக வெற்றி: இது திமுகவுக்கு பிளஸ் பாயிண்ட்டாக இருக்கிறதோ இல்லையோ, தமிழக பாஜகவின் வெற்றியாக பார்க்கப்பட்டு வருகிறது. பாஜக இல்லாமல், அதிமுகவால் கூட்டணி வைக்க முடியாது என்ற நிலைமையும் இன்று களத்தில் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.
2 நாட்களுக்கு முன்பு, எடப்பாடி பழனிசாமியும், தமாகா தலைவர் ஜிகே வாசனும் கோவை விமான நிலையத்தில், எதிர்பாராமல் சந்தித்து கொண்டனர். கிட்டத்தட்ட ஒரு மணிநேரம் இவர்கள் பேசியதாக தெரிகிறது. இதில் பெருமளவு ஆதங்கத்தை கொட்டித்தீர்த்தது வாசன் தானாம்..
எடப்பாடி பழனிசாமி: "கூட்டணி பிரிவு நமக்கு நல்லதல்ல, திமுக எதிர்ப்பு அணிகள் நாம் அனைவரும் ஒன்றாக நிற்க வேண்டும்... அதிமுக, பாஜக, பாமக, தேமுதிக, புதிய தமிழகம் இப்படி எல்லாருமே ஒரே அணியாக நின்றால் எளிதில் வெற்றி பெற முடியும். இந்த வெற்றிதான், வரப்போகும் சட்டமன்ற தேர்தலுக்கு அடித்தளமாக இருக்கும் என்றெல்லாம் வாசன் சொன்னாராம். ஆனால், எடப்பாடி பழனிசாமி தரப்பில் பெரிய அளவில் எந்த ரியாக்ஷனும் காட்டப்படவில்லையாம்.
ஆக, தமிழகத்தின் பெரிய கட்சி, அதுவும், திமுகவைவிட, அதிக ஓட்டு வங்கியை வைத்திருக்கும் கட்சி என்று தெரிந்தும்கூட, அதிமுகவுடனான கூட்டணிக்கு, இதுவரை 'பச்சைக்கொடி' காட்டாமல் இருக்கிறார்கள் பல தலைவர்கள்..
இவர்கள் இல்லாமலேயே எடப்பாடியால் கூட்டணி அமைக்க முடியுமா? அதிமுகவில் பல சீனியர்களே, பாஜக ஆதரவாளர்களாக இருக்கும்போது, பாஜக அல்லாத கூட்டணி என்பது சாத்தியமா? வலுவான கூட்டணி திமுகவிடம் இருக்கும்போது, அதற்கு மாற்றான கூட்டணியை எடப்பாடியால் உருவாக்க முடியுமா? தெரியவில்லை.. பொறுத்திருந்து பார்ப்போம்..!!












Click it and Unblock the Notifications