திருச்செந்தூர், ராமேஸ்வரம்.. அசம்பாவிதங்கள்.. ஆலயங்களை விட்டு அறநிலையத் துறை வெளியேறணும்-அண்ணாமலை
சென்னை: திருச்செந்தூர் முருகன் கோவிலில் பக்தர் ஒருவர் உயிரிழந்த நிலையில் ராமேஸ்வரம் கோவிலிலும் வடமாநில பக்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். கூட்ட நெரிசலைச் சமாளிக்கும் வகையில் அடிப்படை வசதிகளைக் கூடச் செய்யாமல், கோவில் உண்டியல் பணத்தைக் கொள்ளையடிப்பதில் மட்டும் திமுக அரசு குறியாக இருக்கிறது என்றும், தமிழக ஆலயங்களை விட்டு, உடனடியாக அறநிலையத் துறை வெளியேற வேண்டும் என்றும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு ஏராளமான பக்தர்கள் வருகை தருகிறார்கள். கடந்த ஞாயிற்றுக்கிழமை சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை சேர்ந்த ஓம்குமார் என்ற பக்தரும் குடும்பத்தினருடன் சாமி கும்பிட திருச்செந்தூர் கோயிலுக்கு வந்தார். அப்போது கூட்ட நெரிசல் காரணமாக அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதில் மருத்துவமனைக்கு செல்லும் வழியில் அவர் உயிரிழந்தார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

2 பக்தர்கள் உயிரிழப்பு
இதனை தொடர்ந்து உயிரிழந்த காரைக்குடி நபருக்கு ஏற்கனவே மூச்சுத்திணறல் போன்ற பிரச்சினைகள் இருந்ததாகவும், இதன் காரணமாகவே அவர் உயிரிழந்து இருப்பதாகவும், அவரது குடும்பத்தினர் ஒருவரே அப்படி கூறியதாகவும் அமைச்சர் சேகர் பாபு கூறினார். கோயிலுக்கு சாமி கும்பிட சென்ற போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பக்தர் உயிரிழந்த சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்தது.
இந்த சம்பவம் நடைபெற்ற மறுநாளே ராமநாதபுரம் ராமநாதசாமி கோயிலில் தரிசனம் செய்ய வரிசையில் நின்று இருந்த ராஜஸ்தானை சேர்ந்த ராஜ்தாஸ் என்ற பக்தர் உயிரிழந்தார். ரூ.50 டிக்கெட் பெற்று வரிசையில் நின்று கொண்டு இருந்த 59 வயதான ராஜ்தாஸ் மயங்கி விழுந்து உயிரிழந்தார். தமிழகத்தில் இந்துசமய அற நிலையத்துறையால் நிர்வகிக்கப்படும் கோயில்களில் அடுத்தடுத்து பக்தர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
என்ன சொல்லப் போகிறார் சேகர்பாபு
இந்த நிலையில், இந்த விவகாரத்தை பாஜக கையில் எடுத்துள்ளது. தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இது தொடர்பாக தனது எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது:- நேற்றைய தினம் திருச்செந்தூர் கோவிலில், கூட்ட நெரிசலில் மூச்சுத் திணறி, காரைக்குடியைச் சேர்ந்த ஓம்குமார் என்ற பக்தர் உயிரிழந்த நிலையில், இன்று ராமேஸ்வரம் கோவிலில் வட மாநிலத்தைச் சேர்ந்த பக்தர் ஒருவர் உயிரிழந்திருக்கிறார்.
நேற்று திருச்செந்தூர் கோவிலில் உயிரிழந்த பக்தருக்கு ஏற்கனவே உடல் நிலை சரியில்லை என்று சமாளித்த இந்து அறநிலையத்துறை அமைச்சர் திரு. சேகர்பாபு, இன்று என்ன கதை வைத்திருக்கிறார்?
அறநிலையத்துறை உடனே வெளியேறணும்
கூட்ட நெரிசலைச் சமாளிக்கும் வகையில் அடிப்படை வசதிகளைக் கூடச் செய்யாமல், கோவில் உண்டியல் பணத்தைக் கொள்ளையடிப்பதில் மட்டும் குறியாக இருக்கிறது திமுக அரசு. மேலும், பக்தர்கள் அதிகம் வரும் கோவில்களில் நிரந்தர ஆம்புலன்ஸ் வசதி ஏற்படுத்த வேண்டும் என்பது பல நாள் கோரிக்கையாக இருக்கிறது. ஆனால், எந்தப் பணிகளும் செய்யாத அறநிலையத்துறைக்கு வாகனங்கள் வாங்கி அலங்கரித்துக் கொண்டிருக்கிறார் அமைச்சர்.
குறிப்பாக, திருச்செந்தூர் கோவிலில் பக்தர்களை, குடிநீர் வசதி, கழிப்பறை வசதிகள் கூட ஏற்படுத்திக் கொடுக்காமல், வெளியே செல்லவும் அனுமதிக்காமல் அடைத்து வைத்து விட்டு திருப்பதி கோவிலில் 24 மணி நேரம் நிற்பான் என்று திமிராகப் பேசிய அமைச்சர் சேகர்பாபு தான், இந்த இரண்டு பக்தர்களின் உயிரிழப்புக்குப் பொறுப்பேற்க வேண்டும். தமிழக ஆலயங்களை விட்டு, உடனடியாக அறநிலையத் துறை வெளியேற வேண்டும்.












Click it and Unblock the Notifications