“முதல்வர் ஸ்டாலினின் தோல்வி மனதை பிசைகிறது”.. இயக்குநர் மாரி செல்வராஜ் வருத்தம்
சென்னை: முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களின் தோல்வி மனதைப் பிசைகிறது என இயக்குநர் மாரி செல்வராஜ் வேதனை தெரிவித்துள்ளார். திமுக ஆட்சியை இழந்துள்ள நிலையில் கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்ட முதல்வர் ஸ்டாலினும் தோல்வி அடைந்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தவெக 107 தொகுதிகளை வசப்படுத்தி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. திமுக கூட்டணி 74 தொகுதிகளிலும், மூன்றாம் இடத்தில் உள்ள அதிமுக கூட்டணி 53 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. மிகப்பெரிய திருப்பமாக,கொளத்தூர் தொகுதியில் முதல்வர் ஸ்டாலின் தோல்வி அடைந்துள்ளார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட தவெக வேட்பாளர் வி.எஸ்.பாபு வெற்றி பெற்றுள்ளார்.

திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் கட்சி 5 தொகுதிகளிலும், விசிக 2 தொகுதிகளிலும், தேமுதிக 1 தொகுதியிலும், கம்யூனிஸ்ட் கட்சிகள் தலா 2 சீட்களிலும் வெற்றி பெற்றுள்ளன. அதிமுக தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்றுள்ள அதிமுக 47 தொகுதிகளிலும், பாமக 4 தொகுதிகளிலும், பாஜக 1 தொகுதியிலும், அமமுக 1 தொகுதியிலும் வெற்றி பெற்றுள்ளன.
முதல்வர் ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் அடைந்துள்ள தோல்வி திமுகவினருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. முதலமைச்சரே தனது தொகுதியில் தோல்வியடைந்தது பெரும் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது. இந்நிலையில் முதல்வர் ஸ்டாலினின் தோல்வி குறித்து வேதனை தெரிவித்துள்ளார் இயக்குநர் மாரி செல்வராஜ்.
இதுகுறித்து மாரி செல்வராஜ் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "இந்த தேர்தல் முடிவுகள் நிறைய அதிர்ச்சிகளையும் ஆச்சர்யங்களையும் சில நம்பிக்கைகளையும் எனக்கு கொடுத்திருப்பதை போல பெருவலியையும் கொடுத்திருக்கிறது. முதல்வர் ஸ்டாலின் அவர்களின் தோல்வி மனதை பிசைகிறது. அரசியலின் அடிப்படையான சித்தாந்தம், கொள்கை கோட்பாடுகளை தாண்டி மக்கள் திரள் , மக்கள் பிரியம் , மக்கள் விருப்பம் என்பதுதான் தேர்தல் அரசியலை தீர்மானிக்கும் சக்தியாக வெடித்திருப்பதை உணர்ந்துகொள்ள முடிகிறது.
தான் கலந்துகொண்ட முதல் தேர்தலிலே அப்படியொரு பிரியத்தையும் எதிர்பார்ப்பையும் தவெக தலைவர் விஜய் அவர்களுக்கு மக்கள் வழங்கியிருக்கிறார்கள். அதன்படி தமிழ்நாட்டில் புதிய அரசை நிறுவ இருக்கும் விஜய்க்கும் தமிழக வெற்றிக் கழகத்திற்கும் என் வாழ்த்துகளை தெரிவித்துகொள்கிறேன். மக்கள் பணி சிறக்கட்டும்" எனத் தெரிவித்துள்ளார்.













Click it and Unblock the Notifications