பகலில் அனல் காற்று.. சென்னையில் 108 டிகிரி பாரன்ஹீட்.. வெளுத்து வாங்கிய வெயில்!
சென்னை: சென்னையில் இன்று கடும் வெயில் வெளுத்து வாங்கியது. கூடவே அனல் காற்றும் சேர்ந்து கொண்டதால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
Recommended Video
சென்னையில் இன்று பகல் நேர வெப்ப நிலை தமிழகத்திலேயே அதிகபட்சமாக 108 டிகிரி பாரன்ஹீட்டாக பதிவானது. இதே அளவிலான வெப்ப நிலை திருத்தணியிலும் பதிவாகி அந்த பகுதி மக்களையும் வறுத்தெடுத்து விட்டது.

ஒரு பக்கம் கொரோனா தாண்டவமாடி வரும் நிலையில் மறுபக்கம் வெயில் வெளுத்து வாங்கி வருகிறது. கடந்த சில நாட்களாக பகலில் வெப்ப நிலை அதிகரித்து வருகிறது. இதற்குக் காரணம் வங்கக் கடலில் தலைவிரித்தாடிய ஆம்பன் புயலின் தாக்கம்தான்.
மொத்த ஈரப் பதத்தையும் புயல் வாரிச் சுருட்டிக் கொண்டு போய் விட்டதால் சென்னையில் கடும் வெயில் அடிக்கும் என்று வானிலை மையம் ஏற்கனவே எச்சரித்திருந்தது. அதற்கேற்ப கடந்த சில நாட்களாக வெயில் கடுமையாக உள்ளது. நேற்று 107 டிகிரி பாரன்ஹீட் வெப்ப நிலை பதிவான நிலையில் இன்று சென்னையில் தமிழகத்திலேயே அதிகபட்ச அளவாக 108 டிகிரி பாரன்ஹீட் வெயில் பதிவானது.
சென்னையில் கடும் வெயிலோடு அனல் காற்றும் அதிகமாக இருந்தது. இதற்குக் காரணம் தரைக் காற்று வெப்பமாக இருப்பதால் அனல் காற்றாக அது மாறியது. ஏற்கனவே ஊரடங்கோடு சேர்ந்து மக்கள் நடமாட்டம் அடியோடு குறைந்திருக்கிறது. இந்த நிலையில் அனல் காற்று காரணமாக மக்கள் வெளியில் நடமாட முடியாத அளவுக்கு வெயில் வறுத்தெடுத்தது.

சென்னை மட்டுமல்லாமல் பல்வேறு நகரங்களிலும் இன்றும் வெயில் சதத்தைத் தாண்டியது. தமிழகத்தில் இன்று நாகையில் 104, கரூர் பரமத்தியில் 102, கடலூர் 107, பரங்கிப்பேட்டை 107,. வேலூர் 107, சேலம் 102, மதுரை 102 என வெயில் பதிவானது.












Click it and Unblock the Notifications