தமிழ்நாட்டை நோக்கி வலுபெறும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் - 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்
சென்னை: வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் தமிழ்நாட்டில் பரவலாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழ்நாட்டில் 4 மாவட்டங்களுக்கு சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று அதிகனமழைக்கான ரெட் அலர்ட் விடுத்துள்ளது. மேலும் 11 மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான எச்சரிக்கை விடுத்து அறிவிக்கப்பட்டுள்ளது.
தென்மேற்கு வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மையம் காரணமாக தமிழ்நாட்டில் பெரும்பாலான பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இந்த காற்றழுத்தத் தாழ்வு மையம், ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக உருலவாக வாய்ப்புள்ளதால் தமிழ்நாட்டின் 14 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்வதற்கான ஆரஞ்ச் அலர்ட் விடுத்து வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை கொடுத்துள்ளது.

4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்
சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் கள்ளக்குறிச்சி, தஞ்சாவூர், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், கோவை, திருப்பூர், நீலகிரி சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. மழை முன்னெச்சரிக்கை காரணமாக 19 மாவட்டங்களில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகர், புறநகர் பகுதிகளில் மழை கொட்டியுள்ளது.
இந்நிலையில் வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வு மையம், இன்று மாலை ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக உருவாக வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை ஆகிய 4 மாவட்டங்களுக்கு அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுத்து வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட 11 மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. புதுச்சேரி, காரைக்காலுக்கு ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. சென்னையில் இன்று காலை முதல் பல பகுதிகளில் கனமழை பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனால் அடுத்த 12 மணி நேரத்திற்கு மழையின் தாக்கம் தீவிரமாக இருக்கும். காற்றழுத்த தாழ்வு மையம், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று பிற்பகலுக்கு பிறகு கரையை நோக்கி நகரும். வலுப்பெற்ற பிறகு தமிழ்நாட்டின் வட கடலோர மாவட்டங்களை நகரும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அது வலுபெற்று நகரத்தொடங்கிய பிறகு தான் புயலாக மாற வாய்ப்புள்ளது என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
மீனவர்களுக்கு வார்னிங்
காற்றழுத்த தாழ்வு பகுதி மேலும் வலுவடைய அதிக வாய்ப்புள்ளது. ஆழ் கடலில் மீன் பிடிப்பில் உள்ள மீனவர்கள், கரை திரும்பவும், மறுஉத்தரவு வரும் வரை மீன் பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தமிழ்நாடு, ஆந்திரா கடல் பகுதிகளில் காற்றின் வேகம் மணிக்கு 50-60 கி.மீ வேகத்தில் இருக்க வாய்ப்புள்ளதாகவும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications