பிரேக் எடுக்காமல்.. 9 மணி நேரமாக ரெயின் கோட்டோடு களத்தில் நின்ற முதல்வர்.. தீவிர நிவாரண பணி!
சென்னை: முதல்வர் ஸ்டாலின் நேற்று சென்னையில் 9 மணி நேரமாக விடமால் களப்பணிகளை செய்துள்ளார். மழை காரணமாக சாலைகளில் வெள்ளம் ஏற்பட்ட நிலையில் முதல்வர் ஸ்டாலின் நேரடியாக களப்பணிகளை மேற்கொண்டார்.
Recommended Video
தமிழ்நாட்டில் தீவிர கனமழை பெய்து வருகிறது. சென்னையில் கடந்த 2 நாட்களாக மழை பெய்து வருகிறது. சென்னையில் நேற்று முதல்நாள் 207 மிமீ மழை பெய்தது. 2015க்கு பின் சென்னையில் பெய்த மிக அதிக கனமழை இதுதான்.
இதனால் சென்னையில் பல பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. சாலைகளிலும், குடியிருப்பு பகுதிகளிலும் மழை நீர் கடல் போல தேங்கி இருக்கிறது.

முதல்வர் ஸ்டாலின்
இந்த நிலையில் சென்னையில் மழை, வெள்ளம் ஏற்பட்டவுடன் வெள்ளம் வடிவதற்கு முன்பாகவே முதல்வர் ஸ்டாலின் நேற்று பாதிக்கப்பட்ட பகுதிகளில் பார்வையிட்டார். ஹெலிகாப்டர் உதவியோடு பருந்து பார்வை பார்க்காமல் நேரடியாக களத்திற்கே ஜீப் மூலம் சென்று ரெயின் கோட் மாட்டிக்கொண்டு பார்வையிட்டார். எழும்பூரில் நேரில் சென்று வெள்ளம் அதிகம் பாதித்த இடங்களில் பார்வையிட்டார்.

மழை வெள்ளம்
பொதுவாக மழை, வெள்ளம் ஏற்பட்டால் வடசென்னை அதிகம் பாதிக்கப்படும். வடசென்னையில் இருக்கும் தாழ்வான பகுதிகளும், கடலோர பகுதிகளும் அதிகம் பாதிக்கும். அதேபோல் அங்கு உள்ள மீனவ குடும்பங்கள், குடிசை பகுதிகளும் அதிக அளவு வெள்ளம் காரணமாக பாதிக்கப்படும். இதனால் அந்த பகுதிகளில் முதல்வர் ஸ்டாலின் முதலில் பார்வையிட்டார்.

11 இடங்கள்
வடசென்னையில் மட்டும் 9 இடங்கள் உட்பட மொத்தம் 11 இடங்களில் முதல்வர் ஸ்டாலின் நேற்று பார்வையிட்டார். காலை 10.30 மணிக்கு இவர் களத்தில் ஆய்வுகளை நேற்று மேற்கொள்ள தொடங்கினார். தொடர்ந்து 9 மணி நேரம் வேறு விதமான அலுவல் பணிகள் எதற்கும் முதல்வர் ஸ்டாலின் பிரேக் எடுக்கவில்லை. இரவு 7.30 மணி வரை விடாமல் முதல்வர் ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார்.

பாதிப்பு
முழுக்க முழுக்க மழை பாதிப்பு, வெள்ள பாதிப்புகளில் மட்டுமே முதல்வர் நேற்று கவனம் செலுத்தினார். எழும்பூரிலும், வடசென்னையின் சில பகுதிகளிலும் முதல்வர் ஸ்டாலின் நிவாரண பொருட்களை வழங்கினார். போர்வை, பிஸ்கட், பிரேட் அடங்கிய உணவு பொருட்கள் பொட்டலம், மாஸ்க் ஆகியவற்றை மக்களுக்கு வழங்கினார். அதன்பின் மக்களை நேரடியாக சந்தித்து முதல்வர் ஸ்டாலின் நலம் விசாரித்தார்.

கண்காணிப்பு
அதன்பின் வடசென்னையின் பாபா நகர், ஜிகேஎம் நகர், ஜவஹர் நகர் உள்ளிட்ட பகுதிகளில் முதல்வர் ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார். அங்கு அரசு சார்பாக தயாரிக்கப்பட்டு இருந்த அன்னதான உணவுகளை முதல்வர் ஸ்டாலின் தனது கைப்பட மக்களுக்கு வழங்கினார். அதன்பின்பாக நேற்று மாநகராட்சி அலுவலகத்தில் முதல்வர் ஸ்டாலின் மழை, வெள்ளம் குறித்த ஆலோசனை மேற்கொண்டார்.

ஆலோசனை
ஏரி நிலவரங்கள், எந்தெந்த பகுதிகளில் தண்ணீர் இருக்கிறது, மழை இனி வரும் நாட்களில் எப்படி இருக்கும், புயல் மையம் கொண்டால் என்ன செய்வது என்பது குறித்து முதல்வர் ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். நேற்று 7.30 மணிக்கு பின் மாநகராட்சி அலுவலகத்திற்கு திரும்பிய முதல்வர் இந்த ஆய்வு பணிகளை மேற்கொண்டார். முதலில் மழையால் அதிகம் பாதிக்கப்பட்ட இடங்கள் மீது கவனம் செலுத்த வேண்டும் என்று அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவிட்டார்.

புயல்
புயல் மையம் கொள்ள வாய்ப்புள்ளதால் அதிகாரிகள் தயார் நிலையில் இருக்க வேண்டும். தாழ்வான பகுதிகளில் இருக்கும் மக்களை உடனடியாக வெளியேற்ற வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். இதையடுத்து சென்னையில் 15 மண்டலங்களுக்கு மழையை கண்காணிக்க 15 ஐஏஎஸ் அதிகாரிகளை முதல்வர் ஸ்டாலின் நியமனம் செய்து கண்காணிப்பு செய்ய உத்தரவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications