‛‛ஹெவி டிராபிக்’’.. சென்னை - திருச்சி நெடுஞ்சாலையில் 5 கிமீ அணிவகுத்த வாகனங்கள்.. கடும் வாக்குவாதம்
செங்கல்பட்டு: சென்னை - திருச்சி நெடுஞ்சாலையில் தற்போது கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. சுமார் 5 கிலோமீட்டர் தொலைவுக்கு வாகனங்கள் அணிவகுத்து நிற்பதால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.
நாளை பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதனால் சனி, ஞாயிறு மற்றும் நாளை என்று தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை விடப்பட்டுள்ளது. தொடர் விடுமுறையால் பலரும் வெள்ளிக்கிழமை முதல் சொந்த ஊர் சென்று வருகின்றனர்.

இந்நிலையில் தான் பக்ரீத் பண்டிகையை விடுமுறையையொட்டி இன்று சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வழக்கத்தை விட அதிக வாகனங்கள் சென்று வந்தன.
இந்நிலையில் தான் செங்கல்பட்டு மாவட்டம் பரனூர் சுங்கச்சாவடி அருகே திடீரென்று சங்கிலி தொடர் விபத்து ஏற்பட்டது. அதாவது திருவண்ணாமலையில் இருந்து கிளாம்பாக்கம் நோக்கி சென்ற அரசு பேருந்து முன்னால் சென்ற கார் மீது மோதியது. அதன்பிறகு அடுத்தடுத்து கார்கள் மோதின. மொத்தம் 4 கார்கள், ஒரு அரசு பேருந்து என 5 வாகனங்கள் விபத்தில் சிக்கின. இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக யாருக்கு பெரிய அளவில் பாதிப்பு ஏற்படவில்லை.
ஆனாலும் கூட இந்த விபத்தின் காரணமாக சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் விபத்தை ஏற்படுத்தியதாக கூறி அரசு பேருந்து ஓட்டுனரிடம் வாகன டிரைவர்கள் வாக்குவாதம் செய்தனர். இது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் வாகனங்கள் நகர முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் அணிவகுத்து நிற்க தொடங்கின.
சுமார் 5 கிலோமீட்டர் தொலைவுக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மகேந்திரா சிட்டியை கடந்து சிங்கம்பெருமாள் கோவில் வரை போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதுபற்றி அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து போக்குவரத்து நெரிசலை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது வாகனங்கள் மெல்ல மெல்ல நகர தொடங்கி உள்ளன.
சென்னை - திருச்சி நெடுஞ்சாலையில் இப்படி பெரிய அளவில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது முதல் முறையல்ல. பரனூர் சுங்கச்சாவடியால் அடிக்கடி இதுபோன்ற போக்குவரத்து நெரிசல் என்பது ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக வார இறுதி நாட்கள், தொடர் விடுமுறை தினங்களையொட்டி இந்த பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் என்பது ஏற்படும். இந்நிலையில் தான் இன்று விபத்து காரணமாக கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications
