குவைத் தீ விபத்து: தமிழர்கள் சிக்கி உள்ளனரா? உதவி எண்களை அறிவித்தது அயலகத் தமிழர் நலத்துறை!
சென்னை: குவைத் தீ விபத்து தொடர்பாக அயலகத் தமிழர் நலத்துறை உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்தியாவிற்குள் +91 1800 309 3793 வெளிநாடு எனில் +91 80 6900 9900, +91 80 6900 9901 எண்களில் தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
குவைத் நாட்டில் மங்காப் என்ற பகுதியில் அமைந்துள்ள குடியிருப்பில் இன்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் 53 பேர் உயிரிழந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவைச் சேர்ந்த கேரள தொழிலாளிகள் அதிகம் வசிக்கும் இடத்தில் ஏற்பட்ட இந்த தீ விபத்தில் தமிழர்கள் இருவரும் உயிரிழந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. தீ விபத்து ஏற்பட்ட கட்டடத்தில் ஏற்பட்ட மீட்புப் பணிகள் நடைபெற்றன. அதே சமயம் தீ விபத்தில் சிக்கி காயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கோர தீ விபத்தில் உயிரிழந்த 21 இந்தியர்களின் பெயர்களை குவைத் அரசாங்கம் வெளியிட்டுள்ளது. 40க்கும் மேற்பட்ட இந்தியர்கள் இறந்து போன தீ விபத்தில் இறந்த 21 பேரின் பெயர்களின் முதல் தொகுப்பை குவைத் அரசு வெளியிட்டுள்ளது.
இந்நிலையில் தமிழக அரசின் அயலகத் தமிழர் நலத்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், "குவைத் நாட்டின் மங்காப் என்ற இடத்தில் தொழிலாளர்கள் தங்கியிருந்த கட்டிடத்தில், இன்று அதிகாலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதன் காரணமாக சுமார் 49 நபர்கள் உயிரிழந்திருப்பதாகத் தகவல் வரப்பெற்றுள்ளது. அவர்களுள் எவரேனும் தமிழர் உள்ளனரா என்ற தகவல் சேகரிக்கப்பட்டு வருகிறது.

தீ விபத்திலிருந்து மீட்கப்பட்டவர்கள் மற்றும் விபத்தில் காயமடைந்தவர்கள் குவைத் நாட்டிலுள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இந்த தீ விபத்தில் தமிழர்கள் எவரேனும் பாதிக்கப்பட்டிருப்பின் அவர்தம் விவரங்களைப் பெற்று, அவர்களுக்குத் தேவையான மருத்துவ உதவிகளை வழங்க அயலகத் தமிழர் நலத்துறைக்கு உத்தரவிட்டுள்ளார்.
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவுறுத்தலின் படி அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை ஆணையரகம், குவைத் நாட்டிலுள்ள இந்தியத் தூதரகம் மற்றும் அங்குள்ள தமிழ் அமைப்புகளைத் தொடர்பு கொண்டு விபத்தில் சிக்கிய தமிழர்களுக்குத் தேவையான மருத்துவ உதவிகள் கிடைக்க நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
குவைத் தீ விபத்து தொடர்பான விவரங்களுக்கு அயலகத் தமிழர் நலத்துறையின் உதவி எண்களான +91 1800 309 3793 (இந்தியாவிற்குள்), வெளிநாடு எனில் +91 80 6900 9900, +91 80 6900 9901 என்ற இரு எண்களிலும் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications