எ.வ.வேலுவுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கக் கூடாது.. இடைக்கால உத்தரவை நீட்டித்தது ஐகோர்ட்!
சென்னை: நெடுஞ்சாலைத்துறை முறைகேடு வழக்கில் திமுக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு மீது கடும் நடவடிக்கை எடுக்கக் கூடாது என்று பிறப்பித்த இடைக்கால உத்தரவை சென்னை உயர் நீதிமன்றம் நீட்டித்துள்ளது.
கரூர், திருப்பூர் பகுதிகளில் நெடுஞ்சாலை துறையில் முறைகேடு நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. பல்வேறு சாலைப் பணிகளை மேற்கொள்வதற்காகத் தமிழக அரசு நிதி ஒதுக்கீடு செய்திருந்தது. ஆனால், இந்தத் திட்டத்தின் கீழ் எந்தவிதமான பணிகளையும் முழுமையாக மேற்கொள்ளாமல், தனியார்களுக்கு சட்டவிரோதமாகத் தொகைகள் விடுவிக்கப்பட்டதாக அறப்போர் இயக்கம் சார்பில் லஞ்ச ஒழிப்புத் துறையிடம் புகார் ஒன்று அளிக்கப்பட்டது.

இந்தப் புகாரின் அடிப்படையில், முன்னாள் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு மற்றும் நெடுஞ்சாலைத்துறை உயர் அதிகாரிகள், ஒப்பந்ததாரர்கள் ஆகியோருக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினர்.
இந்நிலையில் தன் மீது போடப்பட்ட எஃப்.ஐ.ஆர்-ஐ ரத்து செய்யக் கோரியும், தனக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட லுக் அவுட் நோட்டீஸை ரத்து செய்யக் கோரியும் எ.வ. வேலு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்த போது எ.வ. வேலு சார்பில் மூத்த வழக்கறிஞர் பி.வில்சன் ஆஜராகி, "எ.வ. வேலு விசாரணைக்கு ஒத்துழைத்து வருகிறார். அவருக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்க வேண்டிய அவசியம் இல்லை. அதை ரத்து செய்ய வேண்டும்" என்று வாதங்களை முன் வைத்தார்.
இதைக் கேட்ட நீதிபதி இளந்திரையன், எ.வ.வேலுவுக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட லுக் அவுட் நோட்டீஸை ரத்து செய்து உத்தரவிட்டார். மேலும் அவர் வெளிநாடு செல்ல விரும்பினால் கீழமை நீதிமன்றத்தின் அனுமதியை பெற வேண்டும் என்று நிபந்தனையும் விதித்தார்.
அப்போது எ.வ. வேலுவுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கக் கூடாது என்று பிறப்பிக்கப்பட்ட இடைக்கால உத்தரவையும் நீட்டித்து வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 14 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.
இந்நிலையில் இந்த வழக்கை ரத்து செய்யக் கோரும் எ.வ.வேலு மனுவுக்கு எதிர்ப்பு தெரிவித்து அறப்போர் இயக்கம் சார்பில் இடையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு இன்று நீதிபதி லட்சுமி நாராயணன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது பதில் மனு தாக்கல் செய்ய அரசு தரப்பில் கால அவகாசம் கேட்கப்பட்டது.
இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, பதில் மனு தாக்கல் செய்ய ஆகஸ்ட் 21 ஆம் தேதி வரை அவகாசம் வழங்கி உத்தரவு பிறப்பித்தார். அதுவரை எ.வ.வேலுவுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கக் கூடாது என்ற இடைக்கால உத்தரவையும் நீட்டித்து உத்தரவிட்டார்.


Click it and Unblock the Notifications
