சென்னை மாநகராட்சி கமிஷனர், போலீஸ் கமிஷனருக்கு பறந்த நோட்டீஸ்.. ஆக்கிரமிப்புகள் வழக்கில் அதிரடி
சென்னை: சென்னையில் சாலையோரங்களில் பொதுமக்கள் நடப்பதற்கு கட்டப்பட்டுள்ள நடைபாதைகளை பலர் கடைகள், உணவகங்கள் வைத்தும், வாடகை வாகனங்கள், ஆட்டோக்களை நிறுத்தியும் ஆக்கிரமித்துள்ளனர்.இந்த ஆக்கிரமிப்பை அகற்ற கோரிய, வழக்கில் சென்னை மாநகராட்சி கமிஷனர், போலீஸ் கமிஷனர் உள்ளிட்டோர் பதில் அளிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை ஐகோர்ட்டில், கிழக்கு தாம்பரத்தைச் சேர்ந்த பத்திரிகையாளர் வாராகி என்பவர் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில், சென்னையில் சாலையோரங்களில் பொதுமக்கள் நடப்பதற்காக பல இடங்களில் நடை பாதைகள் கட்டப்பட்டுள்ளன. இந்த நடைபாதைகளை பலர் கடைகள், உணவகங்கள் வைத்தும், வாடகை வாகனங்கள், ஆட்டோக்களை நிறுத்தியும் ஆக்கிரமித்து வருகிறார்கள். இதனால், பொதுமக்களால், சாலையோர நடைபாதைகளை பயன்படுத்த முடியாத நிலை இருக்கிறது. இதனால் நடைபாதையில் செல்ல வேண்டியவர்கள், வாகனங்கள் செல்லும் சாலையில் நடந்து செல்லும் நிலை ஏற்படுகிறது. சில சமயம் வாகனங்கள் மோதி இறந்துவிடுகிறார்கள்.

சென்னை கே.கே.நகரில் உள்ள இ.எஸ்.ஐ., மருத்துவமனை சாலையோரத்தில் நடைபாதைகள், அசோக் நகர் 4-வது அவென்யூ, வேளச்சேரி பள்ளிக்கரணை மெயின் ரோடு, தியாகராய நகர் ஹிந்தி பிரசார சபா சாலை, ஜி.என்.செட்டி ரோடு, கிழக்கு தாம்பரம் கணபதிபுரம் பகுதிகளில் சாலையோரங்களில் பொதுமக்கள் நடந்து செல்லும் பாதைகள் அனைத்தும் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கிறது.
இதுகுறித்து, சென்னை மாநகராட்சி அதிகாரிகளுக்கும், சென்னை போக்குவரத்து போலீஸ் அதிகாரிகளுக்கும் பலமுறை புகார் மனு அளித்தும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, சாலையோர நடைபாதைகளில் உள்ள கடைகள், வாகனங்கள் உள்ளிட்ட ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட வேண்டும்" இவ்வாறு அதில் கூறியிருந்தார்.
இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி டி.கிருஷ்ணகுமார், நீதிபதி பி.பி.பாலாஜி ஆகியோர் முன்பு புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் ஜானகிராமன் ஆஜராகி வாதிட்டார். இதையடுத்து, இந்த மனுவுக்கு சென்னை மாநகராட்சி கமிஷனர், சென்னை போலீஸ் கமிஷனர் ஆகியோர் 2 வாரத்துக்குள் விரிவான பதில் மனுவை தாக்கல் செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர்.












Click it and Unblock the Notifications