கட்சிக்காரருக்கு அரசு வழக்கறிஞர் பதவி.. தவெக MLA வழக்கில் அவர் எப்படி செயல்படுவார்? ஐகோர்ட்டில் மனு!
சென்னை: எம்.பி- எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான வழக்குகளில் அரசியல் கட்சியை சாராதவர்களை அரசு சிறப்பு வழக்கறிஞர்களாக நியமிக்க வேண்டும் எனக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் முதலமைச்சர் விஜய் தலைமையில் தவெக அரசு பொறுப்பேற்றுள்ள நிலையில், அரசு வழக்கறிஞர்கள் நியமனம் செய்யப்பட்டு வருகின்றனர். தமிழ்நாடு முழுவதும், தவெக கட்சியைச் சேர்ந்தவர்கள் பலர், அரசு வழக்கறிஞர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், கட்சி சார்ந்தவர்களை அரசு வழக்கறிஞர்களாக நியமிக்கக்கூடாது என வலியுறுத்தி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம், சோமநாதபுரத்தைச் சேர்ந்தவர் வழக்கறிஞர் பிரமோத்குமார். இவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில், எம்.பி, எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான வழக்குகளில் அரசியல் கட்சியை சாராதவர்களை அரசு சிறப்பு வழக்கறிஞர்களாக நியமிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
அவர் தாக்கல் செய்துள்ள மனுவில், "தமிழ்நாட்டில் தற்காலிக அடிப்படையில், அனைத்து மாவட்டங்களிலும் உள்ள அமர்வு நீதிமன்றங்களில் அரசுத் தரப்பில் ஆஜராவதற்காக அரசு வழக்கறிஞர்களை தமிழ்நாடு அரசு நியமித்துள்ளது.
இதில், மதுரை மாவட்ட அமர்வு நீதிமன்றத்திற்கு அரசு வழக்கறிஞராக பாண்டி என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். வழக்கறிஞர் பாண்டி, மதுரை கிழக்கு தொகுதி தமிழக வெற்றிக் கழகத்தின் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.கார்த்திகேயனின் நெருங்கிய உறவினர் ஆவார். மேலும், பாண்டியும் தமிழக வெற்றிக் கழகத்தில் உறுப்பினராக உள்ளார்.
த.வெ.க எம்.எல்.ஏ கார்த்திகேயனுக்கு எதிராக திருமங்கலம் நீதிமன்றம், மதுரை மாவட்ட அமர்வு நீதிமன்றம் மற்றும் எம்.பி - எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான சிறப்பு நீதிமன்றங்களில் 3 குற்ற வழக்குகள் இதுவரை நிலுவையில் உள்ளன. குற்றஞ்சாட்டப்பட்டவரின் உறவினராக உள்ள வழக்கறிஞர் பாண்டி அரசு சிறப்பு வழக்கறிஞராக தனது கடமையை நிறைவேற்ற முடியாது.
தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் ஆளுங்கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்களின் உறவினர்களும், த.வெ.கவினரும் அரசு வழக்கறிஞர்களாக நியமிக்கப்படுவதால் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு எதிரான குற்ற வழக்குகளில் அவர்கள் தாக்கத்தை ஏற்படுத்தி, நீதி வழங்குவதில் பாதிப்பை ஏற்படுத்த நேரிடலாம்.
ஒருதலைப்பட்சமான இந்த நியமனங்களால் பொதுமக்கள் மத்தியில் நீதித்துறை மீதான நம்பிக்கை குலைந்து விடும். எம்.பி - எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான வழக்குகளில், நேர்மையான, சுதந்திரமான, அரசியல் சார்பில்லாதவர்களையே அரசு வழக்கறிஞர்களாக நியமிக்க வேண்டும்.
தமிழ்நாடு முழுவதும் இந்நாள், முன்னாள் எம்.பி - எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான வழக்குகளில், சுதந்திரமான, அரசியல் சாராத, சம்பந்தப்பட்ட மக்கள் பிரதிநிதிகளின் உறவினர்கள் அல்லாதவர்களை அரசு சிறப்பு வழக்கறிஞர்களாக நியமிக்க தமிழ்நாடு அரசிற்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட வேண்டும்.
மேலும், மதுரை கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கார்த்திகேயனுக்கு எதிரான வழக்கை சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்ற வேண்டும்" என்று கோரியுள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications
