சிறந்த அறப்பணி என புகழ்ந்த நீதிபதிகள்.. திமுக ஆட்சி அரசாணைக்கு தடை விதிக்க ஐகோர்ட் மறுப்பு
சென்னை: கோவில் உபரி நிதியில் இருந்து கல்லூரிகள் தொடங்க முடியாது. கோவில் நிதியை கோவில் அல்லாத பிற பணிகளுக்கு செலவிட முடியாது. உபரி நிதியை பயன்படுத்துவது தொடர்பான விதிகள் மீறப்பட்டுள்ளதாக மயிலாப்பூரைச் சேர்ந்த டி.ஆர்.ரமேஷ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், கோவில் நிதியில் கல்லூரி நடத்துவதை விட சிறந்த அறப்பணி வேறு எதுவும் இல்லை. கல்விக்காக கோவில் நிதியை செலவு செய்வது சிறந்தது என்று தி.மு.க., ஆட்சியில் பிறப்பிக்கப்பட்ட அரசாணைக்கு தடை விதிக்க விதிக்க மறுத்துவிட்டது.
தி.மு.க. ஆட்சிக்காலத்தில் மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் நிதியைக் கொண்டு சென்னை கொளத்தூரில் கலைக்கல்லூரி ஒன்று கட்டப்பட்டது. அதேபோல, திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோவில் நிதியில் திருச்செங்கோட்டிலும், பழனி தண்டாயுதபாணி கோவில் நிதியில், திண்டுக்கல் மாவட்டம் தொப்பம்பட்டியிலும், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் சார்பில் விளாத்திகுளத்திலும் கல்லூரிகள் தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன.

இதுதொடர்பாக தி.மு.க. ஆட்சியில் இந்து சமய அறநிலையத்துறை கடந்த 2021-ம் ஆண்டு டிசம்பர் 24-ந்தேதி அரசாணை பிறப்பித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. இந்த அரசாணை விதிகளுக்குப் புறம்பாக உள்ளதாக கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் மயிலாப்பூரைச் சேர்ந்த டி.ஆர்.ரமேஷ் என்பவர் பொதுநல வழக்கு தாக்கல் செய்தார்.
அவர் அந்த மனுவில் கூறுகையில், "கோவில் உபரி நிதியில் இருந்து கல்லூரிகள் தொடங்க முடியாது. கோவில் நிதியை கோவில் அல்லாத பிற பணிகளுக்கு செலவிட முடியாது. உபரி நிதியை பயன்படுத்துவது தொடர்பான விதிகள் இந்த அரசாணையில் மீறப்பட்டிருக்கிறது. அதனால், கல்லூரி தொடங்க அனுமதி வழங்கி பிறப்பித்த அறநிலையத்துறை செயலாளரின் உத்தரவை ரத்து செய்யவேண்டும். அந்த உத்தரவுக்கு தடை விதிக்கவேண்டும்" இவ்வாறு கூறியிருந்தார்.
இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், பி.மனோகரன் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்து அறநிலையத்துறை அமைச்சகம் சார்பில் ஆஜரான தமிழக அரசின் சிறப்பு பிளீடர் ஆர்.பரணிதரன், "கபாலீஸ்வரர் கோவில் நிதியில் கொளத்தூரில் கல்லூரி கட்டிடம் கட்டப்பட்டு, அங்கு கல்லூரி செயல்படுகிறது. அந்த கல்லூரியிலும், பழனி கோவில் நிதியின் மூலம் கட்டப்பட்ட தொப்பம்பட்டி கல்லூரியிலும் 3 பேட்ச் மாணவர்கள் படிப்பை முடித்து விட்டனர். திருச்செங்கோடு, தொப்பம்பட்டி, விளாத்திகுளம் ஆகிய பகுதியில் கல்லூரி கட்டிடம் கட்டப்படுகிறது. அதனால் வாடகை கட்டிடங்களில்தான் கல்லூரி செயல்படுகிறது. சைவ சித்தாந்த படிப்புகள் இந்த கல்லூரிகளில் கற்பிக்கப்படுகிறது" இவ்வாறு கூறினார்.
மனுதாரர் டி.ஆர்.ரமேஷ் தரப்பில், "இந்த கல்லூரிகள் தொடங்கப்பட்ட விவகாரத்தில் அறநிலையத்துறை சட்டவிதிகள் முறையாக பின்பற்றப்படவில்லை. பல விதிமீறல்கள் நடந்துள்ளன" என்று கூறினார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள், "கோவில் நிதியில் கல்லூரி நடத்துவதை விட சிறந்த அறப்பணி வேறு எதுவும் இல்லை. கல்விக்காக கோவில் நிதியை செலவு செய்வது சிறந்தது. மேலும், சைவ சித்தாந்த படிப்பை மட்டுமல்லாமல், வைணவம், ஆன்மிகம், இந்து மதம், ஜோதிடம், இந்த மத தத்துவவியல், சாஸ்திரங்கள் ஆகிய படிப்புகளையும் சொல்லிக் கொடுக்கவேண்டும்" என்று கருத்து தெரிவித்தனர்.
பின்னர், "கோவில் நிதியில் கல்லூரிகள் தொடங்கலாம். ஆனால், மனுதாரர் விதிமீறல் உள்ளதாக சில குற்றச்சாட்டுகளை சுமத்துகிறார். எனவே கோவில் உபரி நிதியை சட்டத்துக்கு உட்பட்டு கல்லூரியை தொடங்கலாம். இந்த கல்லூரிக்கு கோவில் வருமானத்தை மட்டுமே பயன்படுத்த வேண்டுமே தவிர, அறநிலையத்துறையின் பொது நிதியை பயன்படுத்தக்கூடாது. வேண்டுமென்றால், தமிழக அரசு நிதியை பெற்றுக்கொள்ளலாம். இதுதொடர்பாக கடந்த 2021-ம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட அரசாணையை எதிர்த்து தொடரப்பட்ட இந்த வழக்கை தள்ளுபடி செய்கிறோம்" இவ்வாறு உத்தரவிட்டனர்.


Click it and Unblock the Notifications
