சாலையில் சுற்றித்திரியும் மனநலம் பாதித்தவர்கள் எத்தனை பேர்..? அறிக்கை தாக்கல் செய்ய ஹைகோர்ட் உத்தரவு
சென்னை: சாலைகளில் சுற்றித்திரியும் மனநலம் பாதித்தவர்கள் எத்தனை பேர் என்ற விவரத்தை அறிக்கையாக தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும், மன நலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்ட விவரத்தையும் தெரிவிக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.
தொண்டு நிறுவனம் ஒன்று தொடர்ந்த பொதுநல வழக்கை விசாரித்த நீதிமன்றம், இந்த தீர்ப்பை அளித்துள்ளது.

அதன் விவரம் பின்வருமாறு;
சாலையில் திரியும் மனநலம் பாதித்தவர்கள் எத்தனை பேர், தடுப்புசி செலுத்தியவர்கள் எத்தனை பேர் என விரிவான அறிக்கைதாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மாநில மனநல கொள்கையை அமல்படுத்தக் கோரியும், மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போட சிறப்பு முகாம் அமைக்கக் கோரியும் சீர் என்ற தொண்டு நிறுவனத்தின் சார்பில் வழக்கு தொடரப்பட்டிருந்தது.
இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், தமிழகம் முழுவதும் மனநலம் பாதிக்கப்பட்டு சாலையில் திரிந்த 396 பேர் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
இந்த அறிக்கையில், அரசால் மீட்கப்பட்டவர்களில் சென்னையில் ஒருவர் கூட இல்லை எனத் தெரிவித்துள்ளதைச் சுட்டிக்காட்டிய நீதிபதிகள், சென்னையில் இருப்பவர்களை கண்டறிய தொண்டு நிறுவனத்தை சேர்ந்தவர்களுடன் இணைந்து செயல்பட வேண்டுமெனவும், அவ்வாறு மீட்கப்படுபவர்களை முகாம்களில் வைத்து கொரோனா தடுப்பூசி செலுத்தி, உரிய சிகிச்சை அளிக்க வேண்டுமெனவும் உத்தரவிட்டுள்ளனர்.
மேல்பாக்கத்தில் உள்ள அரசு காப்பகத்தை சீரமைக்கவும், புதிய கட்டிடம் கூட கட்டலாம் எனவும் ஆலோசனை தெரிவித்த நீதிபதிகள், சாலையில் திரியும் மனநலம் பாதித்தவர்கள் எத்தனை பேர், தடுப்புசி செலுத்தியவர்கள் எத்தனை பேர் என விரிவான அறிக்கை தாக்கல் செய்ய அரசுக்கு உத்தரவிட்டு, விசாரணையை இரண்டு வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்.
இதனிடையே கடந்த 2017-ம் ஆண்டு வெளியிடப்பட்டுள்ள மாநில மனநல கொள்கையில், சமூகம் எதிர்கொள்ளும் மனநலம் தொடர்பான பிரச்சனைகள், குழந்தை பருவ மனநலப் பாதிப்புகள், தற்கொலைகள், வீடற்ற நபர்கள், ஆகியவைகள் குறித்து விவரிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications