மனைவியை அபகரித்த இந்து மறுமலர்ச்சி முன்னணி தலைவர்..கோபத்திலும் காங்.பிரமுகரின் பக்கா கிரிமினல் வேலை
சென்னை: காங்கிரஸ் பிரமுகர் தனது மனைவியை அபகரித்து கொண்டதாக ஆத்திரம் அடைந்து 'இந்து மறுமலர்ச்சி முன்னேற்ற முன்னணி கட்சியின் மாநில தலைவரை ஸ்கெட்ச் போட்டு தூக்கியிருக்கிறார். இந்த வழக்கில் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னையை அடுத்த மாங்காடு பகுதியை சேர்ந்த 45 வயதாகும் ராஜாஜி, இந்து மறுமலர்ச்சி முன்னேற்ற முன்னணி கட்சியின் மாநில தலைவராக இருந்தார். இவர் கடந்த புதன்கிழமை அன்று பூந்தமல்லி அடுத்த குமணன்சாவடியில் உள்ள டீ கடையில் அமர்ந்து டீ குடித்து கொண்டிருந்தார்.

அப்போது லுங்கி மற்றும் பனியன் அணிந்தபடி வந்த மர்ம நபர் ராஜாஜியை அரிவாளால் சரமாரியாக வெட்டிக்கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பிவிட்டார். இதுபற்றி வழக்குப்பதிவு செய்த பூந்தமல்லி போலீசார், உயிரிழந்த ராஜாஜி உடலை பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார், அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
முதற்கட்ட விசாரணையில் இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்டது, காட்டுப்பாக்கத்தை சேர்ந்த கிருஷ்ணகுமார் (34) என்பது தெரியவந்தது. தலைமறைவாக இருந்த கிருஷ்ணகுமாரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். அவர் கொடுத்த தகவலின்பேரில் இந்த கொலை தொடர்பாக பூந்தமல்லியை சேர்ந்த காங்கிரஸ் பிரமுகரான கோபால் (55) மற்றும் கொலைக்கு உடந்தையாக இருந்த சம்பத், சந்தோஷ், ராஜேஷ் உள்பட 6 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர்.
தொடர்ந்து அவர்களிடம் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியது. போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ள காங்கிரஸ் பிரமுகர் கோபாலின் மனைவி கௌரி. கௌரி கடந்த சில ஆண்டுகளாக காங்கிரஸ் பிரமுகர் கோபாலை விட்டு பிரிந்து கொலையான ராஜாஜியுடன் வசித்து வந்துள்ளார். மேலும் ராஜாஜி கௌரியை தனது மனைவி எனக்கூறி சமூக வலைதளங்களில் இருவரும் ஒன்றாக இருக்கும் புகைப்படங்களை பதிவிட்டு வந்திருக்கிறார். சில மாதங்களுக்கு முன்பு சாலை விபத்தில் கௌரி இறந்து போனார்.
அதன்பிறகு தனது மனைவி கவுரி பெயரில் கல்வி அறக்கட்டளை தொடங்கி உள்ளதாக ராஜாஜி, பூந்தமல்லி மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் போஸ்டர் ஒட்டியதுடன், சமூக வலைதளங்களிலும் வீடியோ வௌியிட்டிருந்தார். இதை பார்த்த கோபாலுக்கு ஆத்திரத்தையும், பெரும் அவமானத்தையும் ஏற்படுத்தி உள்ளது. கோபால் சம்பாதித்த சொத்துகளில் பாதி கௌரியின் பெயரில் இருப்பதால் அந்த சொத்துகளை கேட்டும் கோபாலிடம் ராஜாஜி தகராறில் ஈடுபட்டு வந்தாராம்.
தனது மனைவியை அபகரித்து கொண்டதுடன், சொத்தையும் கேட்டதால் ராஜாஜி மீது கோபால் கடும் கோபம் அடைந்தாராம். இதனிடையே ராஜாஜியின் தம்பியான ஆட்டோ டிரைவர் கண்ணனுக்கும், கிருஷ்ணகுமார் என்பவருக்கும் ஏற்கனவே மது அருந்துவதில் எற்பட்ட தகராறில் கல்லை தூக்கி போட்டதில் கண்ணனின் காலில் எலும்பு முறிந்தது. இதனால் ராஜாஜியும், அவரது தம்பியும் கிருஷ்ணகுமாரை பழிவாங்க சந்தர்ப்பம் பார்த்து வந்தார்களாம்.
இதனை அறிந்த கோபால், எதிரிக்கு எதிரி நண்பன் என்பதுபோல் கிருஷ்ணகுமாரை தொடர்பு கொண்டிருக்கிறார். "உன்னை தீர்த்து கட்ட ராஜாஜி திட்டமிட்டு உள்ளார். அதற்குள் நீ முந்திக்கொள்" என்று தூண்டி விட்டாராம். இதனால் ஆத்திரமடைந்த கிருஷ்ணகுமார், டீ கடைக்குள் புகுந்து ராஜாஜியை வெட்டிக் கொன்றுள்ளாராம். விசாரணையில் வெளிவந்த தகவல்களை போலீசார் தெரிவித்தனர். கைதான 6 பேரிடமும் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications
