சுப்புலட்சுமி டூ தெய்வானை வரை அறநிலையத் துறையின் தோல்வி! அதான் பொன்முடியே சொல்லிட்டாரே! காடேஸ்வரா
சென்னை: அறநிலையத் துறையின் கீழ் செயல்படும் கோயில்களில் எந்த வித பணிகளும் செய்யப்படாமல் உள்ளதாக இந்து முன்னணி காடேஸ்வரா சுப்பிரமணியம் குற்றம்சாட்டியுள்ளார்.
இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் ஹிந்து அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் ஆயிரக்கணக்கான கோவில்கள் உள்ளன. அந்த கோவில்களை முறையாக பராமரிப்பது, சரியான காலத்தில் கும்பாபிஷேகம் செய்வது உட்பட அடிப்படை பணிகள் எதையும் செய்யாமல் அறநிலையத் துறை தோல்வியடைந்து விட்டது.

செங்கல்பட்டு மாவட்டத்தில், பாபுராஜன்பேட்டை, விஜயவரதராஜர் கோவிலை சீரமைக்க, 2020ம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்ட பின்னும்கூட அதை செய்யவில்லை. இதையடுத்து, நீதிமன்றம், அறநிலையத் துறையை கண்டித்தது. உடனே சீரமைப்பு பணியை தொடங்கவும் உத்தரவிட்டுள்ளது. அதேபோல், சோளிங்கர் யோக நரசிம்மர் மலைக் கோவிலில் அடிப்படை வசதிகள் இல்லை என்று மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
குன்றக்குடி கோவில் யானை இறப்பு, பழனி கோவில் யானை இறப்பு, திருச்செந்தூர் யானை தாக்கி பாகன்கள் இறப்பு என்று தொடர்ந்து, அறநிலையத் துறையின் இயலாமை வெளிப்பட்டுக் கொண்டே இருக்கிறது.
இந்நிலையில்தான், அமைச்சர் சேகர்பாபுவுடன் அமைச்சரவையில் இணைந்து பணியாற்றும் வனத்துறை அமைச்சர் பொன்முடி, அறநிலையத் துறையின் குளறுபடிகளை பொதுவெளியில் விமர்சித்துள்ளார்.
ஆனால், அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, துறை மீது சிலர் திட்டமிட்டு பொய் பரப்புவதாகக் கூறுகிறார். அமைச்சர் தன் தவறை மறைக்க, அடுத்தவர் மீது குற்றங்களை சுமத்துகிறார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
திருச்செந்தூர் தெய்வானை யானை, அதன் பாகனையும் அவரது உறவினரையும் மிதித்து கொன்றது. இந்த நிலையில் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த வனத்துறை அமைச்சர் பொன்முடி, "தெய்வானை யானையை வனத்துறை அனுமதி இல்லாமலேயே திருச்செந்தூர் கோயிலில் வளர்த்து வந்தனர்.
அந்த யானை அஸ்ஸாமில் இருந்து கொண்டு வரப்பட்டது. அனுமதி பெறவில்லை என்றாலும் கூட யானையை பாதுகாக்க வேண்டிய பொறுப்பும் எங்களுக்கு உள்ளது என்ற அடிப்படையில் வரும் காலங்களில் நடவடிக்கை எடுக்கப்படும்.
அறநிலையத் துறை மற்றும் கோயில் நிர்வாகத்தின் முறையான பராமரிப்பு இல்லாத காரணத்தால் இது போன்ற நிகழ்வுகள் நடந்துள்ளன. பல கோயில்களில் வனத்துறையின் அனுமதி பெற்று யானையை வைத்துள்ளனர்.
சில கோயில்களில் மட்டும் அனுமதி வாங்காமல் யானை வளர்க்கிறார்கள். அந்த யானைகளுக்கு அனுமதி வாங்க வேண்டும் என அறநிலையத் துறையிடம் அறிவுறுத்தியுள்ளோம். திருச்செந்தூர் தெய்வானையை கால்நடைத் துறை மருத்துவர்கள் ஆய்வு செய்து அறிக்கை கொடுத்த பிறகு புத்துணர்வு முகாமுக்கு அனுப்புவது குறித்து முடிவு எடுக்கப்படும் என தெரிவித்திருந்தார். பொன்முடியின் இந்த பதில் அறநிலையத் துறையை குற்றம்சாட்டியதாகவே பார்க்கப்பட்டது.












Click it and Unblock the Notifications