என்னை கொலை செய்ய தேடிய தம்பி சீமான் இன்று பெரியாரை எதிர்ப்பது மகிழ்ச்சி.. அர்ஜூன் சம்பத் நெகிழ்ச்சி
சென்னை: திருச்சி மாவட்டம் ஶ்ரீரங்கம் பெரியார் சிலை விவகாரத்தில் தம்மை கொலை செய்ய தேடிய தம்பி சீமான் இன்று அதே பெரியாரை எதிர்த்துப் பேசி வருவது மகிழ்ச்சி அளிக்கிறது என்று இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜூன் சம்பத் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.
இது தொடர்பாக அர்ஜூன் சம்பத் தமது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: ஸ்ரீரங்க ஈவேரா சிலையை அகற்றியபோது என்னை கொல்ல வேண்டும் என சூளுரைத்து தேடிய தம்பி சீமான் இன்று தீவிரமாக ஈவேராவை எதிர்ப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது

தேடி, வாசித்து தூயவர் சாயத்தை ஊடுருவி ஈவேராவின் மெய் நிறத்தை கண்டுகொண்ட தம்பி உண்மை என்றால் தன் நிலையை மாற்றிக் கொள்வது தவறில்லை என்பது சத்தியமென்றால் மாட்டிறைச்சி ஏன் தமிழர்களுக்கு எதிரானது என்று தேடி வாசிக்க வேண்டும்
அப்பா பாட்ஷா கோவை மக்களுக்கு செய்த பச்சை துரோகத்தை அவர் சமூக முட்டுகளை தாண்டி அலச வேண்டும்; தமிழகத்திற்கு மராத்தா, சௌராஷ்ட்ரா, நாயக்கர், நாயுடு இன மக்கள் புரிந்த தொண்டுகளை தேடி வாசிக்க வேண்டும்
மேற்கண்ட விஷயங்களில் உண்மைகளை கடந்து மீண்டும் அதே நிலையில் நின்றால்... தம்பியும் ஒரு சராசரி அரசியல்வாதியே -இப்படிக்கு ஈவேராயிஸ குடும்பத்திலிருந்து உண்மையை நோக்கி புறப்பட்டவன். இவ்வாறு அர்ஜூன் சம்பத் தெரிவித்துள்ளார்.
சீமானை விழுந்து விழுந்து ஆதரிக்கும் இந்துத்துவா ஆதரவாளர்கள்
தந்தை பெரியாரையும் திராவிடத்தையும் ஒழிப்பதுதான் தமது வேலை என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தொடர்ந்து பேசி வருவது குறித்து இந்துத்துவா அமைப்பினர் மிகுந்த மகிழ்ச்சியை வெளிப்படுத்தி கொண்டாடி வருகின்றனர். தமிழ்நாட்டின் பாஜக தலைவர்களான அண்ணாமலை, எச்.ராஜா, தமிழிசை சவுந்தரராஜன் உள்ளிட்டோர் சீமானுக்கு வெளிப்படையாகவே பகிரங்கமாகவும் ஆதரவு தெரிவித்துள்ளனர். சீமான் தங்களது கருத்தியலைத்தான் பேசுகிறார் என்கின்றனர் தமிழக பாஜக தலைவர்கள். இதேபோல இந்து மக்கள் கட்சியும் தற்போது சீமானின் தந்தை பெரியார் எதிர்ப்பு பேச்சுக்கு வரவேற்பு தெரிவித்துள்ளது. இந்துத்துவா சக்திகள் அனைவரும் சீமானை முழுமையாக ஆதரிக்கின்றனர்.












Click it and Unblock the Notifications