தமிழகத்தில் ஆளுங்கட்சி தோற்ற இடைத்தேர்தல் வரலாறு! தவெக அரசுக்கு செக்? ஹிஸ்டரி மீண்டும் வருது?
சென்னை: தமிழக அரசியல் களத்தில் "இடைத்தேர்தல் என்றால் அது எப்போதும் ஆளுங்கட்சிக்குத்தான் சாதகமாக இருக்கும்" என்பது பல ஆண்டுகளாகக் கூறப்பட்டு வரும் ஒரு பொதுவான நம்பிக்கையாகும். அரசு கையில் அதிகாரமும், எந்திர பலமும் இருப்பதால் ஆளுங்கட்சிதான் எளிதில் வெல்லும் என்று நம்பப்படுகிறது.
ஆனால், இந்த விதியைத் தகர்த்து, ஆளுங்கட்சியை எதிர்க்கட்சிகள் வீழ்த்திய வரலாற்றுச் சம்பவங்களும் தமிழக அரசியல் வரலாற்றில் பலமுறை நடந்துள்ளன. தற்போதைய ஆளுங்கட்சியான தவெக எதிர்கொள்ளவிருக்கும் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இடைத்தேர்தல் சூழலில், கடந்த காலத்தில் ஆளுங்கட்சிகள் தோல்வியடைந்த முக்கிய வரலாறுகளைத் திரும்பிப் பார்ப்பது மிகவும் அவசியமாகிறது.

கடந்த கால வரலாற்றை உற்று நோக்கினால், ஆளுங்கட்சிகள் பல நேரங்களில் இடைத்தேர்தல் தோல்விகளைச் சந்தித்துள்ளன. முதலாவதாக, கடந்த 1963-ஆம் ஆண்டு ஜூன் மாதம் அப்போதைய காங்கிரஸ் ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, திருவண்ணாமலை சட்டமன்றத் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. அப்போது காங்கிரஸ் ஆட்சியை எதிர்த்துப் போட்டியிட்ட திமுக வேட்பாளர் பி.யு. சண்முகம் வெற்றி பெற்று, ஆளுங்கட்சி வசம் இருந்த தொகுதியைக் கைப்பற்றினார். இது தமிழக அரசியலில் ஆளுங்கட்சிக்கு எதிராக விழுந்த முதல் பெரிய அரசியல் அடியாகப் பார்க்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, 1974-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் கருணாநிதி தலைமையிலான திமுக ஆட்சி நடந்துகொண்டிருந்த காலகட்டத்தில், கோயம்புத்தூர் மேற்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. அப்போது எம்.ஜி.ஆரால் புதிதாகத் தொடங்கப்பட்ட அதிமுக கட்சி, அந்தத் தேர்தலில் போட்டியிட்டு ஆளுங்கட்சியான திமுக வேட்பாளரைத் தோற்கடித்து வரலாற்று வெற்றியைப் பதிவு செய்தது. தேர்தலில் ஆளுங்கட்சி மூன்றாம் இடத்திற்குத் தள்ளப்பட்ட இந்த நிகழ்வு தமிழக அரசியலில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அதைத் தாண்டி, 1999-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் திமுக அரசு அதிகாரத்தில் இருந்தபோது, திண்டுக்கல் மாவட்டம் நத்தம் மற்றும் கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில் நத்தம் தொகுதியில் அதிமுக வேட்பாளரும், திருவட்டார் தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளரும் வெற்றி பெற்று ஆளுங்கட்சியின் அதிகார முகத்தை வீழ்த்திக் காட்டினர்.
மிக சமீபத்திய வரலாற்றில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது 2017-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நடந்த ஆர்.கே. நகர் இடைத்தேர்தலாகும். ஜெயலலிதாவின் மறைவைத் தொடர்ந்து நடைபெற்ற அந்தத் தேர்தலில், அப்போது ஆட்சியில் இருந்த எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசு தனது முழு அதிகாரத்தையும் பயன்படுத்தியும், சுயேச்சையாகக் களமிறங்கிய டி.டி.வி. தினகரனிடம் படுதோல்வியைச் சந்தித்தது. பல ஆண்டுகளுக்கு பிறகு ஆளுங்கட்சியின் அதிகாரத்தை எதிர்த்து ஒரு சுயேச்சை வேட்பாளர் வெற்றி பெற்றது தமிழக அரசியலில் புதிய வரலாறாக மாறியது.
தற்போது முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசு புதியதாகப் பொறுப்பேற்றுள்ள நிலையில், மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இடைத்தேர்தல்களை எதிர்கொள்கிறது. ஏற்கனவே கூட்டணிக் கட்சிகளான கம்யூனிஸ்ட்கள் தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்துள்ளதும், எதிர்க்கட்சிகள் பலமாகக் களம் காண்பதும் தவெகவுக்குப் பெரும் சவாலாக மாறியுள்ளது. வரலாற்றில் பலமுறை ஆளுங்கட்சிகள் இடைத்தேர்தல்களில் சறுக்கல்களைச் சந்தித்துள்ளதைப்போல, தற்போதைய ஆளுங்கட்சியான தவெகவும் இந்த இடைத்தேர்தலில் கவனமாக இருக்காவிட்டால் வரலாறு மீண்டும் திரும்ப வாய்ப்புள்ளது என்பதை அரசியல் நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.


Click it and Unblock the Notifications
