கொரோனாவுக்கு பயந்து வீட்டுக்குள்ள இருந்தா.. கண்ணுல மரணபயம் காட்டிட்டாங்க பரமா.. கதறும் கணவர்கள்!
கொரோனா ஊரடங்கு காரணமாக வீட்டில் இருக்கும் கணவர் மற்றும் குழந்தைகளுக்கு விதவிதமாய் ஸ்நாக்ஸ் செய்து கொடுத்து அசத்தி வருகின்றனர் மனைவிமார்கள்.
சென்னை: கொரோனா ஊரடங்கில் ஏற்பட்ட நன்மை மற்றும் கொடுமைகளில் ஒன்று, வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட ஸ்நாக்ஸ் ஐட்டங்கள்.
கொரோனா ஊரடங்கால் 40 நாட்களுக்கு மேலாக வீட்டுக்குள்ளேயே அடைப்பட்டு கிடந்த ஆண்கள், இரு தினங்களாக தான் டீக்கடை, ஜூஸ் கடை என நண்பர்களை சந்தித்து வருகின்றனர். எப்படியும் வீட்டிற்குள் நண்பர்களை அனுமதிக்க மாட்டார்கள் என்பதால் கிடைத்த கேப்பில் சமூக இடைவெளியோடு 40 நாட்களில் தாங்கள் அனுபவித்த கஷ்டங்களை எல்லாம் ஒருவருக்கொருவர் புலம்பி தீர்த்து வருகின்றனர்.
அந்த புலம்பல்களில் முக்கியமாக இடம்பெற்ற விஷயம் மனைவிமார்கள் செய்துகொடுத்த ஸ்நாக்ஸ் ஐட்டங்கள் பற்றி தான். மார்ச் 24ம் தேதி முதல் ஊரடங்கு அமலுக்கு வந்துவிட்டதால், நினைத்த நேரத்துக்கு கடைக்கு போய் ஸ்நாக்ஸ் சாப்பிட வாய்ப்பில்லை. எனவே மனைவி செய்து தருவதை சாப்பிடுவதை தவிர கணவருக்கும், குழந்தைகளுக்கும் வேறு வழியே இல்லை.

விதவிதமாய் ஸ்நாக்ஸ்
இது தான் வாய்ப்பு என வீட்டு ஆண்களை எல்லாம் பரிசோதனை கூடத்துக்கு எலியாக மாற்றிவிட்டார்கள் மனைவிமார்கள். தினமும் விதவிதமாய் சமைத்து தருகிறேன் பேர்வழி என யூடியூபை பார்த்து, ரவா குளோப்ஜாமுன், மஸ்கோத் அல்வா, மைசூர்பாக்கு உள்ளிட்ட ஐட்டங்கள் எல்லாம் வீட்டு சமையலறையிலே தயாராகிவிட்டன.

இதுக்கு கடையிலயே வாங்கிருக்கலாம்
ரூ.50 கொடுத்த கடையில் கால் கிலோ அல்வா வாங்கி ஆசைத்தீர சாப்பிடலாம். ஆனா இவங்க பண்ற அந்த அல்வாவுக்கு, 40 ரூபாய்க்கு மாவு, 50 ரூபாய்க்கு முந்திரி, 100 ரூபாய்க்கு நெய்ன்னு பட்ஜெட் எக்குதப்பா எகிறிவிட்டது என ஆண்கள் புலம்பும் சத்தம் லேசாக காதில் விழுகிறது. இருந்தாலும் வீட்ல செய்யுற மாதிரி வருமான்னு சிலர் முட்டுக்கொடுக்கவும் தவறவில்லை.

வித்தியாசமான ஐட்டங்கள்
குழி பணியாரம், கேசரி, ரெடிமிக்ஸ் குளோப்ஜாமுன் என எப்போதும் வீட்டில் செய்யும் பலகாரங்களை செய்திருந்தாலே பிரமாதமா இருந்திருக்கும். ஆனா அதைவிட்டுட்டு வீட்டையே ஹோட்டலா மாத்துறோம் பேர்வழின்னு, யூடியூப் பார்த்து பிரெஞ்ச் ப்ரைஸ், காஜுகட்லி, ஹோம்மேட் டூநடஸ், பாணி பூரி முதல் தந்தூரி சிக்கன் என விதவிதமாய் செய்து, வயிற்றை ஒருவழி பண்ணிட்டாங்க இந்த மனைவிங்க.

இனி ஹோம்மேட் ஸ்நாக்ஸ்
கொரோனாவோடு வாழ பழகிவிட்ட மாதிரி, இப்ப மனைவி செஞ்ச ஸ்நாக்ஸ்கூடவும் வாழ பழகியாச்சு. இனி வெளியில போய் சாப்பிட மனசு வருமா என்ன.. இனி எல்லாம் ஹோம்மேட் தான்.












Click it and Unblock the Notifications