சாப்பிட்டதற்கு பணம் கேட்ட ஹோட்டல் ஊழியர்.. பட்டாகத்தியால் தலையில் விழுந்த வெட்டு.. அதிர்ந்த சென்னை!
சென்னை: அம்பத்தூர் தொழிற்பேட்டையில் உள்ள ஹோட்டலில் சாப்பிட்டதற்கு பணம் கேட்ட ஹோட்டல் ஊழியரை கொடூரமாக தலையில் வெட்டி தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக சிசிடிவி காட்சிகள் வெளியாகி இருக்கும் நிலையில், சம்பவத்தில் ஈடுபட்ட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அந்த சிசிடிவி காட்சியில், சாதாரணமாக ஹோட்டலுக்குள் கத்தியை கொண்டு வரும் நபர், ஹோட்டல் உரிமையாளரை கண் இமைக்கும் நேரத்தில் தலையில் வெட்டிவிட்டு செல்கிறார். இதனைத் தொடர்ந்து இரத்த வெள்ளத்தில் சரியும் ஹோட்டல் ஊழியரை அங்கிருந்தவர்கள் உடனடியாக அழைத்து செல்கின்றனர். இந்த காட்சியை பார்த்த பொதுமக்கள் பலரும் அதிர்ச்சியையும், அச்சத்தையும் வெளிப்படுத்தி வருகின்றனர்.

இந்த விவகாரம் சென்னை மக்களிடையே பேசுபொருளாகியுள்ளது. அம்பத்தூர் தொழிற்பேட்டை பகுதியில் ஹோட்டல் நடத்தி வருபவர் இளவரசு. இந்த ஹோட்டலில் நேற்றிரவு போதையில் வந்த 3 பேர் உணவு சாப்பிட்டுள்ளனர். இதன்பின் சாப்பிட்ட உணவுக்கு ஹோட்டல் ஊழியர் ரூ.150 பணம் கேட்டுள்ளார். அதற்கு ரூ.50 மட்டுமே கொடுத்ததால் தகராறு ஏற்பட்டுள்ளது.
தொடர்ந்து பணம் கொடுத்த மறுத்ததால், ஹோட்டல் உரிமையாளருக்கும் போதை ஆசாமிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் திடீரென மறைத்திருந்த கத்தியை எடுத்து ஹோட்டல் ஊழியரை தாக்கிய சம்பவம் அரங்கேறியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக உடனடியாக நசரத்பேட்டை போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது.
இதன்பின் பாதிக்கப்பட்ட ஹோட்டல் ஊழியர் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக சிசிடிவி காட்சிகளை கொண்டு விசாரணை நடத்திய போலீசார், இந்த செயல்களில் ஈடுபட்டது செம்பரம்பாக்கத்தைச் சேர்ந்த சசிக்குமார், மணிகண்டன் மற்றும் முத்து என்று தெரிய வந்தது.
இதன்பின் செம்பரம்பாக்கம் சுடுகாட்டு பகுதியில் பதுங்கியிருந்த மூவரையும் போலீசார் மடக்கி பிடித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து அவர்களிடம் நடத்திய விசாரணையில், சில அதிர்ச்சியூட்டும் தகவல் தெரிய வந்துள்ளது. அவர்கள் மீது ஏற்கனவே சில குற்ற வழக்குகள் இருக்கும் நிலையில், நேற்றிரவு மட்டும் 3 வெவ்வேறு இடங்களில் கத்தியால் வெட்டி வழிப்பறியில் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது. இவர்களிடம் இருந்து பணம், செல்ஃபோன் மற்றும் இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications