சபாஷ்! வீடில்லாத 500 தூய்மைப் பணியாளர்களுக்கு வீடு.. ரூ.55 கோடி மானியம் வழங்கி அரசு ஆணை!
சென்னை: தூய்மைப் பணியாளர்கள் நலவாரியத்தில் பதிவு செய்தவர்களில் வீடற்ற 500 உறுப்பினர்களுக்கு தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தில் ரூ.55 கோடியில் பயனாளிகள் பங்களிப்புடன் கூடிய வீடுகள் வழங்க மானியம் வழங்கி ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலவாரிய செயலர் வெளியிட்ட செய்திக்குறிப்பில், "சட்டப்பேரவையில், இந்த ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடரில் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ், 'தூய்மைப் பணியாளர்கள் நலவாரியத்தில் பதிவு செய்துள்ள வீடற்ற 500 உறுப்பினர்களுக்கு தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு திட்டத்தின் வீடுகள் தூய்மைப் பணியாளர் நலவாரிய மானியத்துடன் ரூ.55 கோடி மதிப்பில் வழங்கப்படும்'' என அறிவித்தார்.

இந்த அறிவிப்பை செயல்படுத்தும் வகையில், தமிழ்நாடு தூய்மைப் பணியாளர்கள் நலவாரியத்தில் பதிவு செய்துள்ள வீடற்ற 500 உறுப்பினர்களுக்கு தகுதியின் அடிப்படையில் ரூ.55 கோடி மதிப்பில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலம் கட்டப்படும் பயனாளிகள் பங்களிப்புடன் கூடிய வீடுகள் வாங்க மானியம் வழங்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது." எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வீடற்ற 500 தூய்மைப் பணியாளர் நல வாரிய உறுப்பினர்களுக்கு ரூ.55 கோடி மதிப்பீட்டில் தமிழ்நாடு நகழ்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலம் கட்டப்பட்டுள்ள வீடுகளை வாங்க அவர்களுக்கு மானியம் வழங்குவதற்கான ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக முதற்கட்டமாக 7 தூய்மைப் பணியாளர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் கடந்த மே மாதம் ஆணைகளை வழங்கி தொடங்கி வைத்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் தூய்மை பணியாளர்கள் நலவாரியத்தின் கீழ் பதிவு செய்து அடையாள அட்டை பெற்றுள்ள உறுப்பினர்களை சார்ந்தவர்களுக்கு கல்வி உதவித் தொகை, திருமண உதவித் தொகை, முதியோர் ஓய்வூதியம், மகப்பேறு உதவித் தொகை, இயற்கை மரண உதவித் தொகை மற்றும் ஈமச்சடங்கு உதவித் தொகை போன்ற நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications