சென்னையில் ரூ.7000-லிருந்து ரூ.0 ஆக மாறிய புதிய மெத்தை.. குப்பைக்கு வந்த ரியல் கதை
சென்னை: அந்த வீட்டில் இருந்த 67 வயதில் ஓய்வு பெற்ற அரசு ஊழியர் ரொம்ப நாளாக, பையனிடம் "டேய்... இந்த பழைய மெத்தையை மாத்துடா, முதுகு வலிக்குது..." என்று சொல்லிக் கொண்டே இருந்திருக்கிறார். கடைசியாக மகனும் ஒரு வாரத்திற்கு முன்பு புதிய மெத்தையை வாங்கிக் கொடுத்திருக்கிறார். அன்று இரவு மெத்தையில் படுத்துப் பார்த்த பெரியவர், "பிரமாதம்! முதுகு வலி இனிமேல் வராது!" என்று மகிழ்ச்சியுடன் சொல்லியிருக்கிறார். அந்த மெத்தை ஒரேநாளில் பூஜ்ஜியமாக மதிப்பு மாறி குப்பைக்கு போயிருக்கிறது..

இந்த பதிவு எக்ஸ் தளத்தில் நெட்டிசன் ஒருவர் வெளியிட்ட பதிவு.. அவரது வார்த்தைகளில் அப்படியே பார்ப்போம்.
காலையில் குப்பையை நான் எடுத்து வருவதற்குள் உர்பாசெர் வண்டி போய்விட்டது. சரி, கோவிலுக்குப் போகும்போது, வழியில் இருக்கும் குப்பைத் தொட்டியில் போடலாம் என்று எடுத்துப் போனேன். நான் என்னுடைய கவரைப் போடும்போது, இரண்டு பசங்க, தூக்க முடியாமல் தூக்கியபடி, ஒரு மெத்தையை எடுத்து வந்து, குப்பைத் தொட்டியை அடுத்த சுவரில் சாய்த்து வைத்தனர். அது ஒரு புத்தம் புதிய பிரபல Company மெத்தை - குறைந்தது ரூ.7000 இருக்கவேண்டும் - மேல்புறத்தில் உள்ள கவர் கிழிக்கப்பட்டு இருந்தாலும், பின்புறம் கிழிக்கப்படவில்லை
எனக்கு படு ஆச்சரியம்..
மெத்தையை நிறுத்திய ஒரு பையனிடம் ஏன் இப்படி என்று விசாரித்தேன். அந்த மெத்தை அதே தெருவில் உள்ள ஒரு வீட்டில் உள்ளது தான் - இவர்கள் அந்த வீட்டு நபர்கள் இல்லை - பக்கத்து வீட்டு பசங்க.. அந்த வீட்டில் இருந்த 67 வயது பெரியவர் (Retired Govt. Officer) ரொம்ப நாளாக, பையனிடம் "டேய்... இந்த பழைய மெத்தையை மாத்துடா, முதுகு வலிக்குது..." என்று சொல்லிக் கொண்டே இருந்திருக்கிறார்.
கடைசியாக மகனும் ஒரு வாரத்திற்கு முன்பு புதிய மெத்தையை வாங்கிக் கொடுத்திருக்கிறார். அன்று இரவு மெத்தையில் படுத்துப் பார்த்த பெரியவர், "பிரமாதம்! முதுகு வலி இனிமேல் வராது!" என்று மகிழ்ச்சியுடன் சொல்லியிருக்கிறார்.
அடுத்த நாள் காலை... உண்மையிலேயே அவருக்கு முதுகு வலி வரவில்லை.
ஏனென்றால், அவர் எழவே இல்லை.
தூக்கத்திலேயே இறந்து விட்டார்.
அதற்குப் பிறகுதான் அந்த மெத்தையின் மார்க்கெட் மதிப்பு ரூ.7000-லிருந்து ரூ.0 ஆக மாறியது. வீட்டு வேலைக்கார அம்மாவிடம் கொடுக்க முயன்றிருக்கிறார்கள்.
அவர், "வேண்டாம் சார்... அதுல அவரோட ஆவி இருக்கும்..." என்று பின்வாங்கி விட்டாராம். வேறு யாருக்காவது கொடுக்க முயன்றாலும், மெத்தை பற்றிய வரலாற்றைக் கேட்டவுடன் எல்லோரும் வேகமாக பின் வாங்கியிருக்கிறார்கள். கடைசியில் அந்த மெத்தை, எந்தத் தவறும் செய்யாமல், குப்பைத் தொட்டியின் அருகில் வந்து நிற்கிறது.
இங்கே ஒரு விஷயம் எனக்குப் புரியவில்லை.
ஒரு வாரம் முன்பு "முதுகு வலியே வராது" என்று புகழப்பட்ட மெத்தை, ஒரு வாரத்திற்குள் "ஆவி வந்த மெத்தை" என்ற பட்டம் பெற்று விட்டது!
பயம், நம்பிக்கை, மூடநம்பிக்கை...

என்ன பெயர் வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளலாம். ஆனால், அந்த மெத்தை மட்டும் மனசுக்குள் ஒரே ஒரு கேள்வியைத்தான் கேட்டுக் கொண்டிருக்கும்:
"நான் என்னடா பாவம் பண்ணினேன், இங்க கொண்டு வந்து நிறுத்தியிருக்கீங்க - எப்படி இருக்க வேண்டிய நான்?" இவ்வாறு அந்த நெட்டிசன் கூறியிருந்தார்.
இதுபற்றி கருத்து தெரிவித்த நெட்டிசன் ஒருவர், பிணத்திற்கு புது வேட்டி ,புது பட்டுப்புடவை கதை தான் என்றார். இன்னொரு நெட்டிசன், ஆவி வந்த செயின் ஆவி வந்த மோதிரம் இதெல்லாம் தூக்கி போட மாட்டாங்க என்று பொட்டில் அறைந்தார் போல் உண்மையை கூறினார்.












Click it and Unblock the Notifications