‛‛தமிழக வெற்றி கழகம்’’.. கட்சியின் பெயரில் தன்பெயரையும் மறைத்து வைத்துள்ள விஜய்! இது தெரியாம போச்சே
சென்னை:நடிகர் விஜய் ‛தமிழக வெற்றி கழகம்' என்ற பெயரில் புதிய கட்சியை தொடங்கி உள்ளார். இந்நிலையில் தான் கட்சியின் பெயரில் நடிகர் விஜய் தனது பெயரை மறைமுகமாக மறைத்து வைத்துள்ள தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ்நாட்டு அரசியலுக்கும் திரையுலகத்துக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர் திரைத்துறையில் இருந்து வந்து அதிமுகவில் முதல்வரான நிலையில் அதன்பிறகு ஒவ்வொரு காலக்கட்டத்திலும் நடிகர்கள் கட்சியை தொடங்கி உள்ளனர்.

குறிப்பாக கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக நடிகர் ரஜினி அரசியல் கட்சியை தொடங்குவார் என்ற பேச்சு இருந்தது. ஆனால் ரஜினி அரசியல் கட்சி தொடங்கும் முயற்சியை எடுத்த நிலையில் இறுதியில் அதில் இருந்து விலகினார். ரஜினியை தொடர்ந்து விஜய் மீதான எதிர்பார்ப்பு என்பது அதிகரித்தது.
நடிகர் விஜய் கடந்த ஆண்டு 10, 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் அதிக மதிப்பெண் எடுத்தவர்களை நேரில் அழைத்து பாராட்டியது, சட்டசபை தொகுதிகள் வாரியாக விஜய் மக்கள் இயக்கம் மூலம் தகவல்களை சேகரித்தது, திருநெல்வேலி, தூத்துக்குடியில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கியது உள்ளிட்டவை அவர் நிச்சயம் அரசியலுக்கு வருவார் என்பதை உறுதி செய்தது.
இந்நிலையில் தான் நடிகர் விஜய் நேற்று புதிய கட்சி தொடங்கி உள்ளதாக அறிவித்தார். ‛தமிழக வெற்றி கழகம்' (Tamilaga Vettri Kazhagam) என்பது தான் தனது கட்சியின் பெயர் என அவர் அறிவித்துள்ளார். மேலும் பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்பது கட்சியின் வாசகமாக இடம்பெற்றுள்ளது. அரசியல் கட்சியை தொடங்கி உள்ள விஜய் வரும் 2024 நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடப்போவது இல்லை. 2026ல் தமிழகத்தில் நடக்கும் சட்டசபை தேர்தலில் தான் களமிறங்க போவதாக அறிவித்துள்ளார்.
இந்நிலையில் தான் நடிகர் விஜய் தான் தொடங்கி உள்ள ‛தமிழக வெற்றி கழகம்' என்ற பெயரில் தனது பெயரையும் மறைமுகமாக மறைத்து வைத்துள்ள தகவல் வெளியாகி உள்ளது. அதாவது சில கட்சிகளின் பெயர்கள் மறைமுகமாக தலைவர்களின் பெயர்களில் தொடங்கப்படும். அந்த வகையில் தான் நடிகர் விஜய்யும் தமிழக வெற்றி கழகம் என தனது கட்சிக்கு பெயர் சூட்டி உள்ளாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
உதாரணமாக புதுச்சேரி முதல்வர் என். ரங்கசாமியை எடுத்து கொள்ளலாம். அவரது கட்சியின் பெயர் அகில இந்திய என்ஆர் காங்கிரஸ். ஆனால் கட்சியின் பெயரை அனைவரும் என்ஆர் காங்கிரஸ் என அழைக்கிறோம். என்ஆர் காங்கிரஸ் என்பதன் விரிவாக்கம் என்பது ‛‛நமது ராஜ்யம் காங்கிரஸ்'' (Namathu Rajiyam Congress) என்பதாகும். இதனை சுருக்கி தான் நாம் என்ஆர் காங்கிரஸ் என்கிறோம். இதில் என்ஆர் என்பது ரங்கசாமியின் இனிசியலான என் மற்றும் அவரது பெயரின் முதல் எழுத்தான ரங்கசாமியை குறிக்கும் வகையில் இருக்கும்.
2வதாக ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியை எடுத்து கொள்ளலாம். இந்த கட்சியின் முழுப்பெயர் என்பது யுவஜன ஸ்ராமிகா ரைஃது காங்கிரஸ் (Yuvajana Sramika Rythu Congress) என்பதாகும். இந்த கட்சியை ஜெகன் மோகன் ரெட்டி தான் நிறுவினார். இந்த கட்சி பெயரின் பின்னால் அவரது தந்தையும், ஒருங்கிணைந்த ஆந்திராவின் முன்னாள் முதல்வருமான ஒய்எஸ்ஆர் ராஜசேகர ரெட்டியின் (YS Rajasekhar Reddy) பெயர் மறைந்திருக்கும். அதாவது ஒய்எஸ்ஆர் காங்கிரஸில் முதல் மூன்று எழுத்து என்பது ஜெகன் மோகன் ரெட்டியின் தந்தையின் பெயரின் முதல் மூன்று எழுத்தான ஒய்எஸ்ஆர் என்பதை குறிக்கும் வகையில் இருக்கும்.
இவர்கள் பாணியில் தான் நடிகர் விஜயும் கட்சி தொடங்கி உள்ளதாக கூறப்படுகிறது. அதாவது நடிகர் விஜய் தொடங்கிய ‛தமிழக வெற்றி கழகம்' என்பதில் அவரது பெயர் மறைந்துள்ளது. புரியும்படி சொல்ல வேண்டும் என்றால் ‛தமிழக வெற்றி கழகம்' (Tamilaga Vettri Kazhagam) என்பதன் ஆங்கில சுருக்கம் TVK என்பதாகும். TVK Vijay என்ற பெயரில் தான் கட்சிக்கு வலைதளங்களில் பக்கங்கள் தொடங்கப்பட்டுள்ளன. இந்த ஆங்கில சுருக்கத்தில் தான் விஜய்யின் பெயர் மறைந்துள்ளது. விஜய்யை அவரது ரசிகர்கள் தளபதி விஜய் (Thalapathy Vijay) என அழைக்கின்றனர். இதன் சுருக்கம் என்பது TV எனவும் கழகம் என்பதன் முதல் ஆங்கில எழுத்தான Kவை சேர்த்து பார்த்தால் TVK எனவும் வரும். இதனால் தான் நடிகர் விஜய் இந்த பெயரை தேர்வு செய்திருக்கலாம் என கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications