லோக்சபாவை விடுங்க! சட்டசபை தேர்தலிலும் அடி! தமிழ்நாட்டில் 2வது இடத்தை இழக்கும் அதிமுக? பாஜக ஸ்கெட்ச்
சென்னை: சரியான கூட்டணி அமைக்க முடியாமல் அதிமுக திணறி வருவது.. லோக்சபா தேர்தலில் அந்த கட்சிக்கு எதிராக திரும்பி உள்ளது. 2026 சட்டசபை தேர்தலிலும் கூட அதிமுகவிற்கு இது எதிராக திரும்பலாம் என்று விவாதிகப்படுகிறது.
2024 லோக்சபா தேர்தலுக்காக பாஜக - பாமக கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. 10 தொகுதிகளில் பாமக போட்டியிடப்போவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. தைலாபுரம் தோட்டத்தில் நடந்த சந்திப்புக்கு பின்னர் ராமதாஸ், அண்ணாமலை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

அதிமுக - பாமக கூட்டணி உறுதியாகும் என்பது போல உருவான தோற்றம் சட்டென்று உடைந்து, பாஜகவுடன் கூட்டணியை இறுதி செய்துள்ளது பாமக. அதிமுக தீவிரமாக முயன்றும் கூட பாமக - அதிமுக கூட்டணி உருவாகாமல் பாஜக கூட்டணிக்கு பாமக சென்றுள்ளது.
இன்னொரு பக்கம் தேமுதிக அதிமுகவுடன் கூட்டணி வைக்க பேசி வருகிறது. 4 இடங்களில் அதிமுக கூட்டணியில் தேமுதிக போட்டியிட வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வருகின்றன. இப்போதைக்கு பார்த்தால் அதிமுக கூட்டணியில் உள்ள ஒரே பெரிய கட்சி தேமுதிக. ஆனால் அவர்களுக்கும் கூட 2-3 சதவிகிதம் வாக்கு சதவிகிதம் உள்ளது.
இந்த தேர்தலில் சரியாக கூட்டணி அமைக்க முடியாமல் அதிமுக திணறி வருகிறது. லோக்சபா தேர்தல் மட்டுமின்றி.. 2026 சட்டசபை தேர்தலிலும் கூட அதிமுகவிற்கு இது எதிராக திரும்பலாம் என்கிறார்கள் அரசியல் வல்லுனர்கள்.
பாமக முக்கியம்: பாமகவின் இந்த முடிவு கண்டிப்பாக அதிமுகவிற்கு அதிர்ச்சி அளிக்கும். வாக்கு சதவிகித ரீதியாக இது அதிமுகவிற்கு பெரிய பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது. முக்கியமாக அதிமுக வடமாவட்டங்களில் சில தொகுதிகளில் இரண்டாம் இடம் கூட பிடிக்க முடியாத நிலை ஏற்படலாம்.
பாமக 2021 சட்டசபை தேர்தலில் வாங்கிய வாக்கு சதவிகிதம் 3.80% தான். மொத்தமாக பார்த்தால் இது குறைவாக தோன்றினாலும் பாமக தொகுதி வாரியாக கணிசமான வாக்குகளை பெற்றது. 23 இடங்களில் பாமக போட்டியிட்ட நிலையில் அவர்களுக்கு 5 எம்.எல்.ஏக்கள் தான் கிடைத்தார்கள். அதே சமயம் 17 வேட்பாளர்கள் இரண்டாம் இடம் பிடித்தனர். ஒவ்வொரு தொகுதியிலும் வாக்கு சதவிகித அடிப்படையில் பார்த்தால் பாமக மிக அதிக அளவில் வாக்குகளை பெற்று உள்ளது.
இதில் கும்மிடிபூண்டி, பூந்தமல்லி (எஸ்சி), திருப்பூர், சோளிங்கர், காஞ்சிபுரம், ஆற்காட், திருப்பத்தூர், பென்னாகரம், தருமபுரி , கீழ்பென்னாத்தூர், வந்தவாசி (எஸ்சி), செஞ்சி, மயிலம், சங்கராபுரம், மேட்டூர் , சேலம் மேற்கு, ஆத்தூர் , ஜெயங்கொண்டம் , விருத்தாச்சலம் , நெய்வேலி, மயிலாடுதுறை, கீழ்வேளூர் (எஸ்சி) உள்ளிட்ட 22 தொகுதிகளில் 20 சதவிகிதத்திற்கும் மேல் பாமக வாக்கு சதவிகிதம் பெற்றது. இதில் 15 தொகுதிகளில் 30 சதவிகிதத்திற்கும் அதிகமான வாக்குகளை பாமக பெற்று உள்ளது.
சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, விழுப்புரம், அரியலூர் போன்ற வட மாவட்டங்களில் 2021ல் அதிமுக கூட்டணி, திமுக கூட்டணியை விட அதிக எம்எல்ஏக்களை பெற்றது. அதிலும் சேலம் (9/10), தர்மபுரி (5/5) இடங்களை வென்றது.
இதற்கு காரணம் பாமகவின் வாக்குகள். சேலம், தருமபுரியை தூக்க அதிமுகவிற்கு உதவியாக இருந்ததே பாமகதான். பாமக இப்படி பல தொகுதிகளில் இரண்டாம் இடம் பிடித்தது , 30+ வாக்குகளை பெற்றதே அதிமுகவின் வெற்றிக்கு காரணம். முக்கியமாக வன்னியர்கள் அதிகம் உள்ள வடக்கு மண்டலத்தில் பாமக தீவிர ஆதிக்கம் செலுத்தியது.
பாமக இல்லையெனில் சென்ற தேர்தலில் அதிமுக கூட்டணி 35 எம்எல்ஏக்களை தான் பெற்று இருக்கும். இப்போது பாமக, பாஜகவிற்கு போய்விட்டால் அதிமுகவிற்கு கொங்கு பெல்ட் மட்டும் தான் பலம் என்ற நிலை ஏற்படும். அதிலும் வடக்கு மாவட்டங்களில் இரண்டாம் இடம் கூட பிடிக்க முடியாத சூழல் பாமகவிற்கு ஏற்படலாம்.
சட்டசபை தேர்தல்: பாமக இல்லாமல் லோக்சபா தேர்தலில் மட்டுமல்ல சட்டசபை தேர்தலிலும் அது அதிமுகவிற்கு பின்னடைவாக மாறும். அதிமுகவிடம் எந்த மெகா கூட்டணியும் இல்லை. தேமுதிக தவிர வேறு யாரும் இல்லை.
காங்கிரஸ், விசிக, சிபிஎம், சிபிஐ ஆகியவற்றை தங்கள் பக்கம் இழுக்க அதிமுக தீவிரமாக முயன்றது. காங்கிரஸ், விசிக உடன் தொடர்ச்சியாக மறைமுக பேச்சுவார்த்தைகளை அதிமுக மேற்கொண்டது. ஆனாலும் அதிமுகவால் எந்த பெரிய கட்சியையும் தங்கள் கூட்டணியை நோக்கி இழுக்க முடியவில்லை.
அப்படி இருக்க அதிமுக மட்டும் தனியாக தேமுதிகவை வைத்துக்கொண்டு கடந்த சட்டசபை தேர்தலில் பெற்ற வாக்குகளை பெறவே முடியாது.
சட்டசபை தேர்தல் 2021 வாக்கு சதவிகிதம்:
திமுக 37.70 வாக்கு சதவிகிதம்
காங்கிரஸ் 4.27 வாக்கு சதவிகிதம்
அதிமுக 33.29 வாக்கு சதவிகிதம்
பாமக 3.80 வாக்கு சதவிகிதம்
பாஜக 2.62 வாக்கு சதவிகிதம்
இந்த அதிமுகவின் வாக்கு சதவிகிதத்திற்கு காரணம் அந்த கூட்டணியில் பாமக, பாஜக போன்ற கட்சிகள் இருந்ததுதான். ஆனால் அடுத்த சட்டசபை தேர்தலில் அதிமுக கூட்டணியில் இவர்கள் இல்லாத பட்சத்தில் 33 சதவிகித வாக்குகள் வருமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
மேலும் வடமாவட்டங்களில் பல இடங்களில் அதிமுக இரண்டாம் இடம் வர பாமக காரணம்.என்பதால்.. 2ம் இடத்தை கூட இழக்கும் அபாயம் அதிமுகவிற்கு ஏற்பட்டு உள்ளதோ என்று எண்ண தோன்றுகிறது.












Click it and Unblock the Notifications