உலகில் வேறு எங்குமே இல்லை.. அட்வான்ஸ் ஹாக்கி ஸ்டேடியம்! - வியக்க வைத்த தமிழ்நாடு! - மேகநாத ரெட்டி ஐஏஎஸ் தடதட
சென்னை: மீண்டும் ஒரு சர்வதேச போட்டிக்குத் தயாராகிவிட்டது தமிழ்நாடு. செஸ் ஒலிம்பியாட் போட்டியை அடுத்து இப்போது 'ஆசிய ஆடவர் ஹாக்கி கோப்பை - 2023' தொடர் சென்னை எழும்பூரில் உள்ள மேயர் இராதாகிருஷ்ணன் விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ளது.
இதற்காக தமிழ்நாடு அரசு ரூ. 16 கோடி செலவில் பழைய ஸ்டேடியத்தை புதிய செயற்கை இழை மைதானமான தரம் உயர்த்தியுள்ளது. அதாவது Olympic Standard New Synthetic Turf போடப்பட்டுள்ளது. இதைத்தான் சமீபத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் திறந்துவைத்தார்.

அதில் சிறப்பு என்னவென்றால், சென்னை ஸ்டேடியத்தில் போடப்பட்டுள்ள New Synthetic Turf, உலக அளவில் தமிழ்நாட்டில்தான் உள்ளது. அதுவே இங்கு ஹைலைட் செய்தி.
விளையாட்டுத்துறைக்கு அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்ற உடன் ஒட்டுமொத்த விளையாட்டுத்துறைக்கே ஒரு விடிவுகாலம் கிடைத்திருக்கிறது. கடந்தகால ஆட்சியில் ஆமை நடைப்போட்டுக் கொண்டிருந்த விளையாட்டுத்துறை இப்போது குதிரை வேகத்தில் முன்னேறிக் கொண்டிருக்கிறது.
ஸ்டாலின் ஆட்சிக்கு வந்ததும் செஸ் ஒலிம்பியாட், அதே வேகத்தில் இப்போது ஆசிய ஆடவர் ஹாக்கி கோப்பை போட்டி என விளையாட்டுத்துறை ஜெட் வேகத்திலேறி பறப்பது பற்றி தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலரான மேகநாத ரெட்டி ஐஏஎஸ் உடன் பேசினோம். அவர் உலகத்தரத்தில் தமிழ்நாடு வெற்றிநடைப் போடுவது குறித்த பல்வேறு புள்ளிவிவரங்களை நம்முடன் பகிர்ந்து கொண்டார்.

"கடந்த 3 மாதங்களுக்கு முன்னதாகவே "ஆசிய ஆடவர் ஹாக்கி கோப்பை - 2023" போட்டியை சென்னையில் நடத்த உள்ளதாக 'ஹாக்கி இண்டியா' நமக்கு ஒரு கடிதம் அனுப்பி இருந்தார்கள். அதற்கு முன்னதாகவே பட்ஜெட் அறிவிப்பில் மிக முக்கியமான அறிவிப்பாக இதை தமிழ்நாடு அரசு அறிவித்திருந்தது.
ஆனால், நமக்கு இந்தப் போட்டி நடத்துவதற்கான முன்தயாரிப்பு பணிகளைத் தொடங்குவதற்கான கால அவகாசம் மூன்றரை மாதங்கள்தான் இருந்தன. பொதுவாக உலக தரத்திலான ஒரு Hockey turf ஆனாலும் சரி அல்லது Hockey Stadium ஆனாலும் சரி, எதை நாம் தயார் செய்ய வேண்டுமானாலும் குறைந்தது நமக்கு 6 மாதங்கள் வரையான அவகாசம் தேவை.

வரப்போகின்ற 2024 ஆண்டு பாரீசில் நடைபெற உள்ள போட்டிக்கு இப்போதே ஒரு Hockey turf தயார்நிலையில் உள்ளது. அந்தளவுக்கு கால அவகாசம் அவர்களுக்கு கிடைத்திருக்கிறது. ஆனால், நமக்கு அப்படி அமையவில்லை.
இந்த இடர்பாடுகள் இருந்தாலும் அரசு அசுரத்தனமாக தனது பணிகளை செய்து முடித்திருக்கிறது. வீரர்கள் விளையாடுவதற்காக Olympic Standard New Synthetic Turf ஐ நாம் மிகச் சிறப்பாக அமைத்துகொடுத்துள்ளோம்.

நமது இராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் இப்போது நாம் போட்டுள்ள Hockey Blue Turf உலகத்திலேயே இதுதான் அட்வான்ஸ் தரத்திலானது. அதிலும் ஒரு கூடுதல் சிறப்பு என்னவென்றால், carbon-neutral synthetic turf. அதாவது இயற்கையாகக் கிடைக்கும் கரும்புச்சக்கையிலிருந்து தயாரிக்கப்பட்டது.
ஆக, என்ன சொல்ல வருகிறேன் என்றால், உலகத்திலேயே லேட்டஸ்ட் Turf எங்கு உள்ளது என்றால்? அது நம்ம சென்னையிலிருக்கும் இராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில்தான் உள்ளது" என்றவர் மீண்டும் தொடர்ந்தார்.

"கடைசியாக நம்ம சென்னையில் 2007இல்தான் இண்டர்நேஷனல் ஹாக்கி போட்டி நடந்தது. அப்படிப் பார்த்தால் 16 வருடங்களை நாம் கடந்துவிட்டோம். அதற்குப் பிறகு ஆசிய கண்டத்திலுள்ள 16 நாடுகளுக்கு மேலான வீரர்கள் இப்போது இதற்காக வருகை தர உள்ளனர்.
ஆகவே அதிக எதிர்பார்ப்பு உருவாகும். இந்தப் போட்டி சென்னையில் நடப்பதால், ஹாக்கி விளையாட்டு மீதான, ஆர்வம் இளைஞர்கள் மத்தியில் கட்டாயம் அதிகரிக்கும். ஏற்கெனவே உள்ள வீரர்கள் புதிய நம்பிக்கையையும் உற்சாகத்தையும் பெறுவார்கள் என்பது உறுதி.

இந்த உலகத்தரத்திலான Hockey turf போட்டதன் நோக்கம், இந்தப் போட்டிகளை நடத்துவதற்காக மட்டுமே இல்லை. அதன் பயனை நாங்கள் பரவலாக்கத் திட்டமிட்டுள்ளோம். இந்த ஸ்டேடியம் ரெடி ஆனது 'முருகப்பா குரூப்' வழக்கமாக நடத்துகின்ற போட்டியை நடத்துவதற்காக எங்களை அணுகினார்கள். அதற்கு உடனே அனுமதி அளித்தோம். இதைப் போலவே 'லீக்' போட்டிகளை நடத்தவும் திட்டமிட்டு வருகிறோம்.
தமிழ்நாடு அரசு உலகிலுள்ள அதிசிறந்த 3 விளையாட்டுப் பயிற்சியாளர்களை நியமித்திருக்கிறது. அந்தப் பயிற்சியாளர்களில் ஒருவர் ஹாக்கி விளையாட்டுக்கானவர். அவரை வைத்து நமது மாணவர்களையும் பயிற்றுவித்து, அவர்களை இங்கே ஆட வைப்பதற்கான முயற்சிகளும் தொடர்ந்து நடந்துவருகின்றன.
இப்போதுதான் சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டியை தமிழ்நாடு அரசு மிகச் சிறப்பாக நடத்தி சாதனை செய்தது. அதற்குப் பிறகு வேல்ர்ட் கப் ஸ்குவாஷ் போட்டியை முடித்தோம். அதற்கடுத்து மாநில அளவிலான முதலமைச்சர் கோப்பைப் போட்டி. அது முடிந்த அதன் சுவடுகள் கூட இன்னும் மறையவில்லை. அதற்குள் ஹாக்கி போட்டிக்குத் தயாராகி விட்டோம்.

அடுத்து cyclathon போட்டிக்கான திட்டப் பணிகள் நடந்துவருகின்றன. இப்படி தொடர்ந்து சர்வதேச விளையாட்டுக் களமாக தமிழ்நாடு மாறி வருகிறது. எங்கள் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அடிக்கடி சொல்வது என்னவென்றால், இந்தியாவிலேயே தமிழ்நாடு சர்வதேச விளையாட்டுப் போட்டிகளுக்கான களமாக மாற வேண்டும் என்பார்.
அதைத்தான் நாங்கள் கொஞ்சம் கொஞ்சமாக நிறைவேற்றி கொண்டிருக்கிறோம். அதற்கு அரசும் அதிக ஆர்வத்தைக் காட்டுகிறது. எங்களை ஊக்கப்படுத்துகிறது.
இந்த ஹாக்கி போட்டி முடிந்த ஒன்றரை மாதங்களிலேயே ஏஷியன்ஸ் கேம்ஸ் வரப்போகிறது. ஹாக்கி போட்டியில் பங்கேற்கப் போகும் நாடுகள்தான் திரும்ப ஏஷியன்ஸ் போட்டிக்கும் வருவார்கள். இது முடித்த உடன் அடுத்த ஆண்டு பாரிஸ் ஒலிம்பிக்ஸ் வந்துவிடும்.

ஆக, தொடர்ந்து நம் வீரர்கள் பயிற்சியிலேயே இருப்பார்கள். அது ஒரு நல்ல அம்சம். இடைவெளி விட்டால், போட்டியின் போது ஒரு வேகம் இருக்காது. அதைக் குறைக்கும்படியாக இந்தத் திட்டமிடல், விளையாட்டுத் துறைக்கும் வீரர்களுக்கும் மிகப் பெரிய வரபிரசாதமாக மாறியுள்ளது" என்கிறார்
கிட்டத்தட்ட 16 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னையில் சர்வதேச ஹாக்கி தொடர் இந்த 'திராவிட மாடல்' ஆட்சியில் நடக்கப் போகிறது. வாழ்த்துகள்!












Click it and Unblock the Notifications