ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கின் "மூளை"! ரவுடி திருவேங்கடம் என்கவுன்ட்டரில் கொல்லப்பட்டது எப்படி?
சென்னை: பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு குற்றவாளி ரவுடி திருவேங்கடத்தை போலீஸார் என்கவுன்ட்டரில் சுட்டது ஏன் என்பது குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த என்கவுன்ட்டர் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பகுஜன் சமாஜ் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த 5ஆம் தேதி பெரம்பூர் வேணுகோபால் சுவாமி கோயில் தெருவில் உள்ள அவரது வீட்டின் முன் மர்ம கும்பலால் வெட்டிக் கொல்லப்பட்டார்.

இந்த கொலை தொடர்பாக ஏற்கெனவே கொலை செய்யப்பட்ட பிரபல ரவுடி ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு உள்ளிட்ட 11 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த 11 பேரிடமும் போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். அந்த 11 பேரில் கைது செய்யப்பட்ட திருவேங்கடத்தின் வங்கிக் கணக்குகளில் இந்த கொலைக்கான பணம் செலுத்தப்பட்டது தெரியவந்தது.
இதையடுத்து ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்வதற்காக பயன்படுத்தப்பட்ட ஆயுதங்களும் திருவேங்கடத்தின் வீட்டருகே புதைக்கப்பட்டதாக தெரியவந்தது. இது குறித்து விசாரிப்பதற்காக திருவேங்கடத்தை புழல் சிறையில் இருந்து அதிகாலை 5.30 மணி அளவில் மாதவரத்தில் உள்ள வெஜிடேரியன் வில்லேஜ் என்ற பகுதியில் போலீஸார் கவனத்தை திசை திருப்பி திருவேங்கடம் தப்பித்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து போலீஸார் துரத்திய போது அந்த பகுதியில் பதுக்கி வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து காவலர்களை சுட முயன்றுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் தற்காப்புக்காக அவரை நோக்கி போலீஸார் துப்பாக்கியால் இரு முறை சுட்டுள்ளனர். இதையடுத்து அவரது இடது பக்க நெஞ்சு பகுதியிலும் வயிற்று பகுதியிலும் குண்டுகள் பாய்ந்ததில் அவர் படுகாயமடைந்தார்.
பின்னர் அவரை அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் திருவேங்கடம் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து அவரது உடலை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டது.
இந்த என்கவுன்ட்டர் சம்பவம் எப்படி நடந்தது என்பது குறித்து ஒரு தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து போலீஸார் கூறுகையில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் பயன்படுத்தப்பட்ட ஆயுதங்களை தனது வீட்டருகே மறைத்து வைத்திருப்பதாக திருவேங்கடம் தெரிவித்தார். அதன் பேரில் மாதவரம் ஆடுதொட்டி அருகே சென்ற போது திருவேங்கடம் போலீஸாரின் பிடியிலிருந்து நழுவி தப்பி ஓடினார்.
இதையடுத்து அவர் துரத்திய போது மாதவரத்தில் வெஜிடேரியன் வில்லேஜ் என்ற ஒரு காலி இடத்தில் பயன்படுத்தப்படாத தகர கொட்டகைக்குள் சென்று அவர் பதுங்கி கொண்டார். அந்த பகுதி புதர் மண்டி கிடக்கும் பகுதியாக இருந்தது. இதனால் போலீஸார் அந்த தகர கொட்டகையை சுற்றி வளைத்தனர். அப்போது போலீஸார், அவரை சரணடையுமாறு கூறினர். ஆனால் அந்த இடத்தில் திருவேங்கடம் துப்பாக்கியை மறைத்து வைத்திருந்ததை பார்த்த போலீஸாருக்கு அதிர்ச்சி ஏற்பட்டது.
இதையடுத்து வெளியே வந்த திருவேங்கடம் காவல் ஆய்வாளர் முகமது புகாரியை நோக்கி சுட்டார். அப்போது குண்டு தவறியதை அடுத்து அங்கிருந்த இன்னொரு போலீஸார் மீது சுட்டார். துப்பாக்கியை கீழே போட்டுவிட்டு சரணடையுமாறு போலீஸார் எச்சரிக்கை கொடுத்த நிலையில் அவர் அவ்வாறு செய்யாததால் போலீஸார் என்கவுன்ட்டர் செய்தனர். இதில் அந்த ரவுடி இறந்துவிட்டார். ரவுடி திருவேங்கடத்தின் மீது 2015 ஆம் ஆண்டு பகுஜன் சமாஜ் கட்சி மாவட்டச் செயலாளர் தென்னரசு கொலை வழக்கு உள்பட 3 கொலை வழக்குகள் இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த என்கவுன்ட்டர் சம்பவத்திற்கு அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications