தீபாவளிக்கு முன் ஒரு பேச்சு! பொங்கல் கழித்து ஒரு பேச்சு! என்னாச்சு காயத்ரி ரகுராமுக்கு! அப்போ திமுக?
சென்னை: அதிமுகவில் இணைவது குறித்து மாற்றி மாற்றி பேசியுள்ளாரே தீபாவளிக்கும் பொங்கலுக்கும் இடையே நடந்தது என்ன?
அரசியலில் எல்லாமே சாதாரணமப்பா என சொல்லும் அளவுக்கு உள்ளது. யாரும் நிரந்தர நண்பனும் இல்லை, நிரந்தர எதிரியும் இல்லை என சொல்லலாம். அந்த வகையில் பாஜகவில் 2014 ஆம் ஆண்டு இணைந்தார்.

இவர் அமித்ஷா முன்பு இணைந்த நிலையில் அடுத்த ஆண்ட தமிழ்நாடு பாஜக கலை பிரிவு செயலாளராக நியமிக்கப்பட்டார். இதையடுத்து 2020 ஆம் ஆண்டு கலை மற்றும் கலாச்சார பிரிவு தலைவராக நியமிக்கப்பட்டிருந்தார்.
தொடர்ந்து பாஜகவுக்காக கடுமையாக உழைத்தார். மோடியை யார் விமர்சித்தாலும் பதிலடி கொடுத்துவிடுவார். அவருடைய திட்டங்களை மக்களிடம் கொண்டு போய் சேர்ப்பதில் காயத்ரியின் சுறுசுறுப்பு இருக்கே அப்பப்பா! தமிழக பாஜக தலைவர் பட்டியலில் இவருடைய பெயர் இருந்தது. அந்த அளவுக்கு கட்சியில் அவருக்கு நற்பெயர் இருந்தது.
ஆனால் அதற்குள் அண்ணாமலை முந்திக் கொண்டுவிட்டார். காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சிக்கு தன்னை அழைத்து செல்லவில்லை என அண்ணாமலை மீது ஆதங்கத்தை வெளிப்படையாக கொட்டினார். அது போல் டெய்சிக்கும் திருச்சி சூர்யா சிவாவுக்கும் இடையே வெளியான ஆபாசமான உரையாடலை கேள்வி எழுப்பினார்.
இதையடுத்து காயத்ரி பாஜகவிலிருந்து 6 மாதங்களுக்கு சஸ்பெண்ட் செய்யப்படுவதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அறிவித்தார். இதையடுத்து காயத்ரி வேறு கட்சியின் முக்கிய நிர்வாகியுடன் துபாயில் ஒரு நிகழ்ச்சியில் பேசியதாக அண்ணாமலை , காயத்ரி இல்லாத போது குறை கூறியதாக தெரிகிறது.
இதுகுறித்து தகவலறிந்த காயத்ரி கோபமடைந்து, மரியாதை நிமித்தமாக நான் பேசியதை கொச்சைப்படுத்தி பேசுவதா என கேட்டு அக்கட்சியிலிருந்து விலகினார். அவர் மீது அண்ணாமலை வார் ரூமிலிருந்து அவதூறு கிளப்பி வருவதாகவும் அவர் புகார் கூறியிருந்தார். இந்த நிலையில் காயத்ரி கடந்த 2022 ஆம் ஆண்டு செய்தியாளர்களை சந்தித்த நிலையில் தான் எந்த கட்சியிலு்ம இணைய தயார் என்றார்.
மக்களுக்கு சேவையாற்ற வேண்டும், அதனால் அதிமுக, விடுதலைச் சிறுத்தைகள், நாம் தமிழர், திமுக உள்ளிட்ட கட்சிகளில் இணைய தயார் என்றார். இந்த நிலையில் அவர் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவனை திடீரென மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினார். இதனால் அவர் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் இணைவார் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்த நிலையில் தமிழக பாஜக தலைமையில் செயல்பாடுகள் பிடிக்காததால் நடிகை கவுதமியும் பாஜகவிலிருந்து விலகினார். இதனால் காயத்ரியும் கவுதமியும் அதிமுகவில் இணைவார்கள் என பேச்சு அடிப்பட்டது. இதையடுத்து தீபாவளி பண்டிகைக்குள் அவர்கள் இணைவது உறுதி என்றெல்லாம் செய்திகள் வந்தன. ஆனால் அவற்றிற்கு மறைமுகமாக காயத்ரி மறுப்பு தெரிவித்தார்.
"நானும் அண்ணாமலையும்தான் அதிமுகவில் இணைய போகிறோம். போடும் செய்தியை சரியாக போடுங்கள்" என காயத்ரி ட்வீட் போட்டிருந்தார். இதனால் அவர் அதிமுகவில் இணையவில்லை என தெரியவந்தது. இந்த நிலையில் இன்றைய தினம் திடுதிடுப்பென அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து காயத்ரி அதிமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார்.
தீபாவளிக்கு முன்னர் மறுத்த காயத்ரி பொங்கல் கழித்து அதிமுகவில் இணைந்ததற்கான காரணம் என்ன? இந்த இடைப்பட்ட காலத்தில் அவரின் மனமாற்றத்திற்கு என்ன காரணம் என்பதெல்லாம் கேள்விக்குறியாக இருக்கிறது. மேலும் அதிமுகவில் இருப்பதால் திமுகவை கண்டிப்பாக விமர்சிக்க வேண்டும். அதிலும் அதிமுகவின் அரசியல் எதிரி திமுக என முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவே கூறியிருந்தார்.
அண்மைக்காலமாக திமுக மீது காயத்ரி மென்மையான போக்கையே கடைப்பிடித்திருந்தார். பாஜகவை கடுமையாக விமர்சித்து வந்த அவர், திமுக, அதிமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளை விமர்சிக்காமல் இருந்தார். இதனால் அவர் திமுகவில் இணைய போகிறார் என்றெல்லாம் சொல்லப்பட்டது. இப்போது அதிமுகவின் எதிரியான திமுகவை விமர்சிப்பாரா இல்லை வழக்கம் போல் மென்மையான போக்கையே கடைப்பிடிப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications