Tanishq: ஆம்னி பஸ் கிளீனரிடம் செல்போன் கேட்டு சிக்கிய நிஷாந்த்! பேருந்துக்குள் லாக் செய்த டிரைவர்!
சென்னை: மதுரை தனிஷ்க் நகைக் கடை கொள்ளையன் நிஷாந்த் பிடிபட்டது எப்படி என்பது குறித்து அவர் பயணித்த ஆம்னி பேருந்தின் கிளீனர் பரபரப்பு தகவல்களை கூறியுள்ளார். அவர்தான் கொள்ளையன் என்பதை அடையாளம் தெரிந்து கொண்டது எப்படி என்பது குறித்தும் அவர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஆம்னி பேருந்து கிளீனர் கூறியதாவது: பெங்களூரில் முகக்கவசம், தொப்பி அணிந்து கொண்டு பேருந்தில் ஏறிய நிஷாந்தை அவரது நண்பர்கள்தான் வழியனுப்பி வைத்தனர். ரூ 500 -ஐ என் கையில் கொடுத்து நிஷாந்தின் உணவு, தேநீர் செலவுகளை கவனித்துக் கொள்ளும்படி கூறினர்.

பின்னர் ராயக்கோட்டை பைபாஸ் சாலையில் வரும் போது, பயணிகள் இயற்கை உபாதை கழிப்பதற்காக வண்டியை நிறுத்தினோம். அப்போது அந்த தொப்பி அணிந்திருந்த நபர், என்னிடம் செல்போன் கேட்டார், நானும் கொடுத்தேன். அப்போது அவர் யாரிடமோ போன் செய்து "நான் நிஷாந்த்" என பேசினார்.
உடனே அந்த நபர், வண்டிக்குள்ளேயே தூரமாக போய்விட்டார். அப்போது எனக்கு லேசாக சந்தேகம் வந்தது. ஆனால் அவரிடம் போன் இருந்ததை நான் பார்த்துவிட்டேன். அவரிடம் போன் இருக்கும் போது ஏன் என்னிடம் போன் வாங்கினார் என்ற சந்தேகம் எழுந்தது. பிறகு மாஸ்க், குல்லாவை எல்லாம் கழற்றினார்.
உடனே நான் "நீங்கள் மதுரையா ப்ரோ" என கேட்டேன். இதனால் அதிர்ச்சி அடைந்த நிஷாந்த், என்னிடமும் டிரைவரிடமும் கெஞ்சினார், "ப்ரோ யாரிடமும் சொல்லிடாதீங்கன்னு" சொன்னார். உடனே நான், "காட்டிக் கொடுக்க மாட்டேன" என அவரிடம் சொல்லிவிட்டேன்.
ஆனால் பேருந்து டிரைவர் பயந்தார், "இவர்தான் நிஷாந்த் என தெரிந்தும் இவரை வண்டியில் வைத்திருந்தால் நாளை ஏதாவது சட்ட பிரச்சினை வந்தால் என்ன செய்வது" என பயந்தார். அந்த டிரைவர் தருமபுரியை சேர்ந்தவர். அவருக்கு அதியமான்கோட்டை காவல் நிலையத்தில் அவருடன் படித்தவர் காவலராக இருக்கிறாராம்.
இதனால் இந்த விஷயத்தை அவரிடம் தெரிவித்தார். அப்போது அந்த அதியமான்கோட்டை போலீஸார், போலீஸ் ஸ்டேஷனுக்கு நெருக்கமான இடத்தில் பேருந்து வரும் போது ஏதாவது ஒரு டீக்கடையில் நிறுத்துமாறு தெரிவித்தனர்.
நாங்களும் போலீஸார் சொன்னது போல் ஒரு டீக்கடையில் நிறுத்திவிட்டு, பேருந்தின் கதவுகளை லாக் செய்துவிட்டோம். நாங்கள் டீக் குடித்துக் கொண்டிருந்த போது சுதாரித்த நிஷாந்த் , "ப்ரோ ப்ரோ" என எங்களை அழைத்துக் கொண்டே கதவை தட்டிக் கொண்டிருந்தார். மாஸ்க், குல்லாவை கழற்றவே இல்லை.
அப்போது இவர்தான் தனிஷிக் நகை கொள்ளையில் ஈடுபட்டவர் என்பதை உறுதி செய்துவிட்டேன். பிறகு அவர் டிரைவர் சீட்டில் இருந்த ஜன்னல் வழியாக எகிறி குதித்துவிட்டார். உடனே போலீஸ் சுற்றி வளைத்து பிடித்துவிட்டனர். அவரது நண்பர்கள் கொடுத்த 500 ரூபாயை கூட நாங்கள் தர்மமாக கொடுத்துவிட்டோம். இந்த சம்பவத்தில் போலீஸார் எவ்வாறு செயல்பட கூறினார்களோ அதே போல் நாங்கள் செயல்பட்டோம். இவ்வாறு கிளீனர் தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications
