தமிழக அரசு வங்கிக் கணக்கில் ரூ.22 கோடி மாயம்.. 24 கணக்குகளுக்கு மாற்றிய கும்பல்.. 7 பேர் கைது
சென்னை: அரசு பணம் என்றால் அதை பெறுவதற்கும், செலவு செய்வதற்கும் ஏகப்பட்ட கட்டுப்பாடுகள் இருக்கும்.. அப்படிப்பட்ட தமிழக அரசின் வங்கிக் கணக்கிலேயே ரூ.22.30 கோடி மோசடி செய்யப்பட்டுள்ளது. யாருக்கும் சந்தேகம் வராத வகையில் பணத்தை 24 வங்கிக் கணக்குகளுக்கு பிரித்து அனுப்பியிருக்கிறார்கள்.. இந்த அதிர்ச்சி சம்பவத்தில் இதுவரை 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் கிராமப்புற மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதற்காக நம்முடைய அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதற்காக ஒவ்வொரு மாவட்டம், ஊராட்சி ஒன்றியம் சார்பிலும் தனித்தனி வங்கிக் கணக்குகள் பராமரிக்கப்படுகின்றன. இந்த கணக்குகளில் அரசு ஒதுக்கும் பணம் வைக்கப்பட்டு, சம்பந்தப்பட்ட திட்டங்களுக்குச் செலவு செய்யப்படுகிறது.

அரசு வங்கி கணக்கில் மோசடி
அந்த வகையில், கிராமப்புறங்களில் உள்ள ஆரம்ப சுகாதார வசதிகளை மேம்படுத்துவதற்காக 15-வது நிதிக்குழு மூலம் நிதி ஒதுக்கப்பட்டு வந்தது. இந்தப் பணம் சென்னை நந்தனம் சி.ஐ.டி. நகரில் உள்ள எச்டிஎஃப்சி வங்கிக் கிளையில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை இயக்குநர் பெயரில் உள்ள கணக்கில் வைக்கப்பட்டிருந்தது.
இந்த கணக்கிலிருந்து பணம் எடுப்பதற்கு எல்லா அதிகாரிகளுக்கும் அனுமதி கிடையாது.. குறிப்பிட்ட வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு மட்டுமே தனித்தனி யூசர் பெயர், பாஸ்வேர்டு வழங்கப்பட்டிருந்தது. அவர்களால் மட்டுமே பணப் பரிவர்த்தனைகளை மேற்கொள்ள முடியும்.
இவ்வளவு கெடுபிடிகள் இருக்கும்போது, அத்தனையையும் மீறி கடந்த அக்டோபர் 12-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை வங்கிக் கணக்கில் முறைகேடு நடந்துள்ளது. அரசு அனுமதி இல்லாமல் மொத்தம் ரூ.22 கோடியே 30 லட்சத்து 4 ஆயிரத்து 879 பணம் பல்வேறு வங்கிக் கணக்குகளுக்கு மாற்றப்பட்டுள்ளது.
இதை கண்டுபிடித்து பதறிப்போன ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகள், உடனடியாக போலீசில் புகார் அளித்தனர். இதையடுத்து சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் விசாரணையைத் தொடங்கினர்.
24 வங்கிக் கணக்குகளுக்கு போன பணம்
முதலில் லோகநாதன், அண்ணாதுரை, செல்லப்பாண்டியன் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து நடத்திய விசாரணையில் சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த மேலும் 4 பேருக்குத் தொடர்பு இருப்பது தெரியவந்தது. அவர்களையும் போலீசார் கைது செய்தனர். அந்தவகையில் இப்போதைக்கு கைதானவர்களின் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது.
அதுமட்டுமல்ல, இந்த வழக்கில் போலீசாருக்கு ஒரு முக்கியமான துப்பு கிடைத்துள்ளது. மோசடி செய்யப்பட்ட ரூ.22 கோடிக்கும் அதிகமான பணத்தை ஒரே கணக்குக்கு அனுப்பாமல், 24 வெவ்வேறு வங்கிக் கணக்குகளுக்கு பிரித்து அனுப்பியிருக்கிறார்களாம்..
மணி மியூல் முறை
இதுக்காகவே "மணி மியூல்" (Money Mule) என்ற முறையை பயன்படுத்தியிருப்பதும் விசாரணையில் இப்போது அம்பலமாகி உள்ளது. அதாவது, ஒருவரிடம் பணம் அல்லது கமிஷன் தருவதாக ஆசை காட்டி அவரது வங்கிக் கணக்கை வாங்கி கொள்வார்கள். பிறகு மோசடி மூலம் கிடைக்கும் பணத்தை அந்த அக்கவுண்ட்டில் செலுத்தி, வேறு அக்கவுண்ட்களுக்கு மாற்றுவார்கள். இதனால் பணம் யாரிடமிருந்து வந்தது, கடைசியாக யாருக்கு போனது என்றெல்லாம் எளிதாக கண்டுபிடிக்க முடியாதாம்.
அதனால் இந்த முறையில் மற்றவர்களின் வங்கி கணக்குகளை பயன்படுத்தி மோசடி செய்தார்களா என்பது குறித்தும் போலீசார் விசாரித்து கொண்டிருக்கிறார்கள். அதேபோல வெளிநாடுகளிலிருந்து செயல்படும் சைபர் குற்றவாளிகள், இந்தியாவில் உள்ளவர்களிடம் பணம் கொடுத்து அவர்களது வங்கி கணக்குகளை பெற்று பயன்படுத்துகிறார்களா என்ற கோணத்திலும் விசாரணை நடக்கிறது.
24 வங்கி கணக்குகள்
மேலும், செப்டம்பர் மாதத்திலேயே ஊரக வளர்ச்சித் துறையின் வெப்சைட்டை ஆய்வு செய்து, கிட்டத்தட்ட 10 நாட்களுக்கும் மேலாக வெப்சைட்டை பார்த்து, போலியான ஒப்புதல் கடிதங்களையும் தயாரித்ததாகவும் செய்திகள் கசிந்துள்ளதால், அது தொடர்பாகவும் விசாரணை நடக்கிறது. மண்டபம் ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.14 கோடி, நாகப்பட்டினத்தில் ரூ.3 கோடி, தாராபுரத்தில் ரூ.5 கோடி எனப் பணம் கைமாற்றப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
தற்போது 7 பேர் கைதாகி உள்ளதால், இந்த 7 பேருக்கும் இந்த மோசடியில் என்ன தொடர்பு என்று தெரியவில்லை.. அதனால் 24 வங்கிக் கணக்குகளையும் ஏற்பாடு செய்தது யார்? அந்தக் கணக்குகளுக்கு வந்த பணம் எங்கே சென்றது? வெளிநாட்டிலிருந்து யாராவது இந்த மோசடியை இயக்கினார்களா? என்ற கேள்விகளுக்கெல்லாம் விடை கிடைத்தால்தான் ரூ.22.30 கோடி மோசடியின் பின்னணியில் இருப்பவர்கள் யார் என்பது முழுமையாக தெரியவரும்...!!!


Click it and Unblock the Notifications
