விஜய்க்கு சாதகமாக மாறிய அந்த வாதம்.. தவெக வழக்கு சிபிஐக்கு மாறியது எப்படி? இதுதான் முக்கிய காரணம்!
சென்னை: கரூர் கூட்ட நெரிசல் விவகாரத்தில் விசாரணையை சிபிஐக்கு மாற்றி உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. சிபிஐ விசாரணையை உச்ச நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையிலான குழு கண்காணிக்கும் என அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. நீதிபதிகள் ஜே.கே. மஹேஸ்வரி, என்.வி. அஞ்சாரியா அமர்வு மனுக்களை விசாரித்து தீர்ப்பு வழங்கி உள்ளது. இந்த தீர்ப்பிற்கு முன் வைக்கப்பட்ட வாதங்கள் என்னென்ன.. விஜய்க்கு சாதகமாக மாறிய விஷயம் என்னென்ன என்று இங்கே பார்க்கலாம்.

தமிழக அரசு வாதம்
இந்த வழக்கில் தமிழக அரசு வைத்த வாதத்தில், உயிரிழந்த சிறுவனுடைய தந்தையின் வலி எங்களுக்குப் புரிகிறது. அதே வேளையில் இந்த விவகாரத்தை பொருத்தவரைக்கும், தமிழ்நாடு அரசு சிறப்பு விசாரணைக் குழு அதிகாரியை நியமிக்கவில்லை. மாறாக உயர் நீதிமன்றம்தான் நியமித்தது.
அஸ்ரா கர்க் என்ற மூத்த அதிகாரிதான் சிறப்பு விசாரணைக் குழுவினுடைய அதிகாரியாக செயல்பட்டு வருகிறார். இந்த அதிகாரி சி.பி.ஐ போன்ற மத்திய விசாரணை அமைப்புகளில் பணியாற்றியவர். சிறந்த அதிகாரியாக இருந்து கொண்டிருக்கின்றார். எனவே இவருடைய விசாரணையே தொடரலாம்.
தன்னுடைய மகனை இழந்து இங்கு நிற்கக்கூடிய அந்த தந்தையினுடைய வலி மட்டுமல்ல, இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுடைய அனைவரின் வலியையும் நாங்கள் அறிந்துள்ளோம். அதேவேளையில், தான் பாதிக்கப்பட்டுள்ளேன் என்ற இந்த ஒரு காரணத்தின் அடிப்படைக் கொண்டு மட்டும் சிபிஐ விசாரணைக்கு மாற்ற அனுமதிக்க கூடாது. ஏனெனில் கள நிலவரங்கள் அனைத்தையும் அறிந்தவர்கள் தமிழ்நாடு அதிகாரிகள். எனவே ஒரு சிறந்த அதிகாரியின் தலைமையில் அமைக்கப்பட்ட அந்த சிறப்பு விசாரணைக் குழுவில் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை தொடர வேண்டும்.
இவ்வாறு பல வழக்குகளை தொடர்ச்சியாக சிபிஐ-க்கு மாற்றிக் கொண்டிருந்தால் சிபிஐ முன்பு அதிக அளவிலான வழக்குகள் குவிந்து கிடக்கும். ஆனால் சிபிஐக்கு இருப்பதோ Limited Resourceதான், என்று வாதம் வைத்தது.
உச்ச நீதிமன்றம் கோர்ட் கேள்வி
நான்கு மணி நேரத்தில் பிரேதப் பரிசோதனை செய்தீர்களா? பிரேதப் பரிசோதனைக்கு எத்தனை பேர் நியமிக்கப்பட்டார்கள்? என்று உச்ச நீதிமன்றம் தமிழக அரசிடம் கேள்வி எழுப்பி உள்ளது.
இதற்கு தமிழ்நாடு அரசு அளித்த பதிலில், இந்த சம்பவத்தை தொடர்ந்து பெரும் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக பிரேதப் பரிசோதனை செய்ய கலெக்டர் அனுமதி அளித்தார். முதல்வர் வந்ததும், அருகிலுள்ள மருத்துவமனைகளில் இருந்து மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டனர். அங்கே அதற்கான கட்டமைப்பு இருந்தது. இதனால் உடனே பிரேதப் பரிசோதனை மேற்கொண்டோம், அருகே உள்ள மருத்துவமனைகளில் போதிய கட்டமைப்பு இருந்தது, என்று தமிழக அரசு பதில் அளித்தது.
மாநில அரசின் ஒப்புதல் இல்லாமல் ஒரு விசாரணையை சிபிஐ-க்கு மாற்றுவது கூட்டாட்சிக்கு எதிரானது. வழிகாட்டு நெறிமுறைகள் கோரிய வழக்கில் மதுரை அமர்வு, எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை. சென்னை அமர்வு இதனை விசாரிப்பதை மேற்கோள் காட்டி, அங்கு முறையீடு செய்ய அறிவுறுத்தியது. அதன் அடிப்படையிலேயே உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன. உயர் நீதிமன்றம்தான் சிறப்பு விசாரணைக் குழுவை அமைத்துள்ளது. குழுவில் உள்ள அதிகாரிகளை சந்தேகப்பட எந்தக் காரணமும் இல்லை. கோர்ட்தான் அஸ்ரா கார்க் என்ற அதிகாரியை நியமித்ததது. தமிழக அரசு அதில் எந்த தலையீடும் செய்யவில்லை.
அஸ்ரா கார்க், சிபிஐயிலும் பணியாற்றியுள்ளார். அஸ்ரா கார்க் நேர்மையான அதிகாரி. உயர் நீதிமன்றம்தான் சிறப்பு விசாரணைக் குழுவை அமைத்துள்ளது என்பதை அதில் அரசின் தலையீடு இல்லை. அதை கேள்வி எழுப்ப முடியாது. முக்கியமாக குழுவில் உள்ள அதிகாரிகளை சந்தேகப்பட எந்தக் காரணமும் இல்லை என்று தமிழக அரசு வாதம் வைத்து உள்ளது.
த.வெ.க. தரப்பு வாதத்தில்
அதில், கரூர் சம்பவத்தில் விசாரணை நடத்தப்படுவதை நாங்கள் எதிர்க்கவில்லை. உச்ச நீதிமன்றமே சிறப்பு புலனாய்வுக் குழு அமைத்து விசாரணை நடக்கட்டும். முன்னாள் நீதிபதி விசாரணையை மேற்பார்வையிடட்டும் தமிழ்நாடு காவல்துறையின் சிறப்பு விசாரணைக்குழுவை நாங்கள் ஏற்கவில்லை.
தமிழ்நாடு அரசு அமைத்துள்ள சிறப்பு புலனாய்வுக் குழு (SIT) மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை. எங்கள் தரப்பில் விளக்கமே கேட்காமல், உயர் நீதிமன்றத்தின் கருத்துகள் முன்வைக்கப்பட்டுள்ளன. கரூரில் இருந்து போலீசாரின் கட்டாயத்தால் விஜய் வெளியேறினார்.
பரப்புரை பேருந்தின் அருகே நிறைய வாகனங்கள் வந்தபோது, ஒரு வாகனத்தில் மோதியுள்ளது. இதை பற்றி முறையாக விசாரிக்க நீதிபதி தலைமையிலான SIT தேவை. இதனால் ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி ஒருவரின் மேற்பார்வையில் ஒரு சிறப்பு விசாரணைக் குழுவை உச்சநீதிமன்றம் அமைக்க வேண்டும், என்று என்று வாதம் வைத்தனர். இதுவே தற்போது தமிழக வெற்றிக் கழகம் கட்சிக்கு சாதகமாக மாறி உள்ளது.












Click it and Unblock the Notifications