தகுதியிருந்தும் நீக்கப்பட்ட வாக்காளர்கள்! மிகப்பெரிய தேர்தல் முறைகேடு அரங்கேறியது எப்படி? ஷாக் தகவல்

Subscribe to Oneindia Tamil

கோவா: இந்தியாவில் 90 கோடிக்கும் அதிகமான வாக்காளர்கள் இருக்கும் போது, வெறும் 97 வாக்காளர்களின் பெயர் விடுபட்டது பெரிய விஷயமா என்று பலருக்கும் தோன்றலாம். ஆனால், கோவாவில் நடந்த இந்த ஒரு சம்பவம், ஒட்டுமொத்த இந்தியத் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள், ஜனநாயக நடைமுறைகள் மற்றும் வாக்காளர் பட்டியலின் நம்பகத்தன்மை மீது மிகப்பெரிய கேள்வியை எழுப்பியுள்ளது.

இந்திய அரசியல் வரலாற்றில் முதல்முறையாக இந்திய தேர்தல் ஆணையத்திற்கு உள்ளேயே கடுமையான மோதல் ஏற்பட்டு உள்ளது. SIR குறித்து தங்களுக்குத் தெரியாமல் முடிவுகள் எடுக்கப்பட்டதாக, தேர்தல் ஆணையர்கள் சுக்பீர் சிங் சந்து, விவேக் ஜோஷி ஆகியோர் தெரிவித்துள்ளனர். இவர்கள் இருவரும் கடந்த 10 மாதங்களில் 14 முறை இதற்கான எதிர்ப்பை பதிவு செய்ததாக பரபரப்புத் தகவல் வெளியாகி உள்ளது.

How ECINet Software Left 97 Eligible Goa Voters Off the Final Roll Inside the Election Commission Rift

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார், கேபினட் செயலாளருக்கு இவர்கள் அனுப்பிய 14 கடிதங்களை ஆய்வு செய்ததில் இந்த மோதல் அம்பலமாகி உள்ளதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டு உள்ளது. புதிய வாக்காளர்கள் சேர்க்கை, பெயர் நீக்கம் மற்றும் FORM 6-ல் செய்த மாற்றங்கள் ஆகியவை தங்களுக்குத் தெரிவிக்கப்படாமல் தன்னிச்சையாக, சட்டவிரோதமாக எடுக்கப்பட்டவை என இவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

'தி இந்தியன் எக்ஸ்பிரஸ்' நாளிதழ் நடத்திய புலனாய்வு விசாரணையில், கடந்த 10 மாதங்களில் தேர்தல் ஆணையத்தின் இரண்டு தேர்தல் ஆணையர்களான சுக்பீர் சிங் சாந்து மற்றும் விவேக் ஜோஷி ஆகிய இருவரும் அதிகாரப்பூர்வமாக குறைந்தபட்சம் 14 முறை தங்கள் எதிர்ப்பு கடிதங்களை பதிவு செய்திருப்பது அம்பலமாகியுள்ளது. ஒரே நாளில் மட்டும் 4 முறை ஆட்சேபனை கடிதங்கள் அனுப்பப்பட்ட சம்பவங்களும் இதில் அடங்கும்.

வாக்காளர் பட்டியலைச் சீரமைக்கும் நோக்கில் கொண்டுவரப்பட்ட 'தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி' (Special Intensive Revision - SIR) நடவடிக்கைகளில் தங்களுக்குத் தெரியாமல் முடிவுகள் எடுக்கப்படுவதாகவும், தங்கள் ஆலோசனைகளை மீறி சட்டவிரோதமான நடைமுறைகள் புகுத்தப்படுவதாகவும் இருவரும் குற்றம் சாட்டியுள்ளனர்.

கோவா சம்பவம்

இந்த புகாருக்கு இடையே கோவாவில் 97 வாக்காளர்கள் நீக்கப்பட்ட சம்பவம் கவனம் பெற்றுள்ளது. SIR தொடர்பான வழக்கில் வாக்காளர் பட்டியலில் உள்ள பிழைகளை சரிசெய்ய வாக்காளர்களுக்கு போதிய ஆவணங்களை சமர்ப்பிக்கவும், விசாரணைக்கு ஆஜராகவும் வாய்ப்பளிக்க வேண்டும் என்று ஜனவரி 29 அன்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி, கோவாவில் கள அதிகாரிகள் நடத்திய விசாரணையில், ஆவணங்கள் சரியாக இருந்த 97 வாக்காளர்களை இறுதிப் பட்டியலில் சேர்க்கத் தகுதியானவர்கள் என முடிவு செய்தனர்.

ஆனால், ஏற்கனவே நீக்கப்பட்ட பெயர்களை மென்பொருளில் மீண்டும் அனுமதிப்பதற்கான 'ரோல்பேக்' வசதி அந்தத் தளத்தில் கள அதிகாரிகளுக்கு வழங்கப்படவில்லை. பிப்ரவரி 11 முதல் 17 வரை, கோவா தலைமைத் தேர்தல் அதிகாரி அலுவலகம், பொறுப்பு துணை தேர்தல் ஆணையர் ஞானேஷ் பாரதி மற்றும் தகவல் தொழில்நுட்ப இயக்குநர் சீமா கன்னா ஆகியோருக்கு 8 முறை மின்னஞ்சல் அனுப்பி இந்த வசதியை இயக்கித் தருமாறு கோரியது.

ஆனால் இறுதிப் பட்டியல் வெளியாகும் வரை தலைமை அலுவலகத்திலிருந்து எந்தப் பதிலும் வரவில்லை; அந்தத் தொழில்நுட்ப வசதியும் வழங்கப்படவில்லை. உச்ச நீதிமன்ற உத்தரவு இருந்தும், கள அதிகாரிகள் தகுதி என உறுதி செய்தும், அந்த 97 வாக்காளர்களின் பெயர்கள் இறுதிப் பட்டியலில் சேர்க்கப்படாமல் புறக்கணிக்கப்பட்டன. எண்ணிக்கை 97 மட்டுமே என்றாலும், ஒரு தகுதியான வாக்காளரின் வாக்குரிமை கூட மறுக்கப்படக் கூடாது என்ற தேர்தல் ஆணையத்தின் அடிப்படைக் கடமை இங்கே கேள்விக்குள்ளானது.

நடந்தது என்ன?

தேர்தல் ஆணையம் கொண்டு வந்த புதிய கம்ப்யூட்டர் மென்பொருளான ECINet காரணமாக, களத்தில் இருக்கும் அதிகாரிகள் ஆய்வு செய்து "இவர்கள் சரியான வாக்காளர்கள்தான்" என்று உறுதி செய்த பிறகும், 97 பேரின் பெயர்களை இறுதிப் பட்டியலில் சேர்க்க முடியாமல் போனது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

வாக்காளர் பட்டியலை தீவிரமாகத் திருத்தும் பணிகளின் போது (Special Intensive Revision - SIR), பெயர்களில் எழுத்துப்பிழை, பெற்றோரின் பெயருடன் பொருந்தாமை அல்லது குடும்ப உறுப்பினர்களுடனான வயது வித்தியாசம் போன்ற காரணங்களுக்காகப் பலருடைய பெயர்கள் கணினியால் சந்தேகப் பட்டியலில் வைக்கப்பட்டன.

இதையடுத்து உச்ச நீதிமன்றம் ஒரு தெளிவான உத்தரவைப் பிறப்பித்தது. சந்தேகப் பட்டியலில் உள்ளவர்களின் விவரங்களை கிராமப் பஞ்சாயத்து அலுவலகங்கள் மற்றும் தாலுகா அலுவலகங்களில் பொதுமக்களின் பார்வைக்கு வைக்க வேண்டும்; அவர்களுக்கு 10 நாட்கள் அவகாசம் கொடுத்து, உரிய ஆவணங்களை சமர்ப்பித்து விளக்கம் அளிக்க வாய்ப்பளிக்க வேண்டும் என உத்தரவிட்டது.

கோவாவில் தேர்தல் அதிகாரிகள் இந்த உத்தரவைச் செயல்படுத்தினர். அவ்வாறு அறிவிப்பு வெளியானதும், 649 வாக்காளர்கள் நேரில் வந்து தங்கள் ஆவணங்களைச் சமர்ப்பித்தனர். தேர்தல் பதிவு அதிகாரிகள் (EROs) அந்த ஆவணங்களை ஒவ்வொன்றாகச் சரிபார்த்தனர். அதில் 97 பேர் உண்மையான வாக்காளர்கள் என்பதும், அவர்களின் பெயர்களைப் பட்டியலில் மீண்டும் சேர்க்க வேண்டும் என்பதும் உறுதி செய்யப்பட்டது.

கைகொடுக்காத மென்பொருள்: டெல்லியிடம் சிக்கிய அதிகாரம்

அதிகாரிகள் முடிவெடுத்துவிட்டாலும், அதை ECINet கணினி மென்பொருளில் பதிவு செய்ய முடியவில்லை. ஏனெனில், ஒரு வாக்காளரின் பெயர் நீக்கப்பட்டாலோ அல்லது சந்தேகப் பட்டியலில் வைக்கப்பட்டாலோ, அதைத் திரும்பப் பெறுவதற்கான (Rollback) வசதி கள அதிகாரிகளுக்கு வழங்கப்படவில்லை. அந்த அனுமதி முழுவதுமாக டெல்லியில் உள்ள தேர்தல் ஆணையத்தின் தகவல் தொழில்நுட்பப் பிரிவின் கட்டுப்பாட்டில் மட்டுமே இருந்தது.

இதனால், கோவா தலைமைத் தேர்தல் அதிகாரி அலுவலகம் பிப்ரவரி 11 முதல் பிப்ரவரி 17 வரை டெல்லிக்குத் தொடர்ந்து 8 முறை மின்னஞ்சல்கள் மற்றும் கடிதங்களை அனுப்பியது.

"உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி 97 வாக்காளர்கள் தகுதியானவர்கள் என முடிவெடுக்கப்பட்டுள்ளது. எனவே அவர்கள் பெயரைச் சேர்க்கும் வகையில் மென்பொருளில் மாற்றங்களைச் செய்ய அனுமதி தாருங்கள்" என்று கோவா அதிகாரிகள் தொடர்ந்து கோரினர்.

தேர்தல் ஆணையத்தின் துணை ஆணையரே தலையிட்டு, "உச்ச நீதிமன்ற உத்தரவுக்குத் தடையாக தகவல் தொழில்நுட்ப அமைப்பு இருக்கக் கூடாது, அதிகாரிகள் எடுத்த முடிவை உடனே மென்பொருளில் செயல்படுத்த உதவுங்கள்" என்று ஐடி இயக்குநருக்கு அறிவுறுத்தினார். ஆனாலும், டெல்லியிலிருந்து இறுதி வரை எந்த பதிலும் வரவில்லை; அனுமதியும் வழங்கப்படவில்லை. இறுதியாக பிப்ரவரி 21 அன்று கோவாவின் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியானது. கள அதிகாரிகள் அனுமதித்தும், அந்த 97 பேரின் பெயர்கள் பட்டியலில் இடம்பெறவே இல்லை.

தேர்தல் ஆணையத்திற்குள் வெடித்த மோதல்

இந்தச் சம்பவம் தற்செயலாக நடந்தது அல்ல; மாறாக தேர்தல் ஆணையத்திற்குள் கடந்த பல மாதங்களாக நடந்து வரும் அதிகார மோதலின் நேரடி விளைவு என்பது இப்போது தெரியவந்துள்ளது.

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் எடுக்கும் முடிவுகள் குறித்து, தேர்தல் ஆணையர்களான சுக்பீர் சிங் சாந்து மற்றும் விவேக் ஜோஷி ஆகியோர் கடந்த 10 மாதங்களில் 14 முறை தங்களின் கடுமையான எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளனர்.

சட்டப்படி, ஒவ்வொரு தொகுதிக்கும் வாக்காளர் பட்டியலை உருவாக்கும் முழு அதிகாரம் அந்தந்த பகுதி தேர்தல் அதிகாரிகளுக்கே (ERO) உள்ளது. ஆனால், அனைத்து அதிகாரங்களையும் டெல்லியில் மையப்படுத்தி, கள அதிகாரிகளின் கைகளைக் கட்டுப்படுத்துவது சட்டத்திற்கு எதிரானது என்றும், இது ஜனநாயகத்தின் அடிப்படைக் கட்டமைப்பைப் பாதிக்கும் என்றும் இரு ஆணையர்களும் தொடர்ந்து எச்சரித்து வந்தனர். அந்த எச்சரிக்கை கோவாவில் நிஜமாகிவிட்டது.

பாதிக்கப்பட்ட மக்களின் நிலை

பெயர் நீக்கப்பட்ட 97 பேரில் 65 பேர் தலேகாவ் தொகுதியைச் சேர்ந்தவர்கள்; மற்றவர்கள் சாண்டா குரூஸ், மர்காவ் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்தவர்கள். கோவாவைப் பொறுத்தவரை வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லை என்றால், வாக்குரிமை மட்டும் பறிபோவதில்லை; அரசின் உயர் மருத்துவக் காப்பீட்டுத் திட்டங்களான 'மெடிகிளைம்' உள்ளிட்ட பல அரசு நலத்திட்டங்களைப் பெறுவதற்கும் வாக்காளர் அட்டை கட்டாயமாகும். தகுதியிருந்தும் மென்பொருள் குளறுபடியால் விடுபட்ட இந்த வாக்காளர்களை, தற்போது மீண்டும் புதிய வாக்காளர்களைப் போல படிவம் 6-ஐப் பூர்த்தி செய்து விண்ணப்பிக்குமாறு அதிகாரிகள் கூறி வருவது பொதுமக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+