சசிகலா, ஓபிஎஸ்.. இருவரையும் ஒரே அஸ்திரத்தில் வீழ்த்திய எடப்பாடி பழனிசாமி.. இதுதான் ராஜதந்திரம்
சசிகலா, ஓ பன்னீர்செல்வம் இரண்டு பேருக்குமே அதிமுகவில் இடம் இல்லை என்று தீர்ப்பு வர காரணமாக இருந்த முக்கியமான பாய்ண்ட்.. இருவரையும் ஒரே அஸ்திரத்தில் எடப்பாடி பழனிசாமி வீழ்த்தி உள்ளார்.
சென்னை: கடந்த 2022ம் ஆண்டு ஜூன் 23ல் நடந்த அந்த சம்பவம் தான் ஓ பன்னீர்செல்வத்திற்கு எதிராக தீர்ப்பு வர காரணம் என்கிறார்கள். சசிகலா, ஓ பன்னீர்செல்வம் இரண்டு பேருக்குமே அதிமுகவில் இடம் இல்லை என்று தீர்ப்பு வர காரணமாக இருந்த முக்கியமான பாய்ண்ட்.. இருவரையும் ஒரே அஸ்திரத்தில் எடப்பாடி பழனிசாமி வீழ்த்தி உள்ளார்.. என்ன என்பதை விரிவாக பார்ப்போம்.
ஜூன் 23ல் நடந்த பொதுக்குழுவில் ஓ பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோரை ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஆக தேர்வு செய்ததை ஆவேசத்துடன் எழுந்து சிவி சண்முகம் நிராகரித்தார். அன்றைக்கு மொத்தம் 23 தீர்மானங்கள் நிறைவேற்றுவதற்காக அனுப்பப்பட்டிருந்தது. அந்த தீர்மானங்கள் அனைத்தும் அன்றைக்கு நிராகரித்தனர்.
அதன் பின்னரே புதிதாக பொதுக்குழு ஜூலை 11ம் தேதி கூடி எடப்பாடி பழனிசாமியை அதிமுகவின் தற்காலிக பொதுச்செயலாளராக தேர்வு செய்தனர். ஓ பன்னீர்செல்வத்தையும் அவரது ஆதரவாளர்களையும் கட்சியில் இருந்து நீக்கினார்கள். எனவே பொதுக்குழுவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை நிராகரித்தது ஓ பன்னீர்செல்வத்திற்கும் எதிராகவும், எடப்பாடிக்கு ஆதரவாகவும் தீர்ப்பு வர காரணமாக இருந்ததாக கூறப்படுகிறது.

மெரினா கண்ணீர்
ஜுன் பொதுக்குழு கூட்டத்தில் என்ன நடந்தது என்பது குறித்தும் அதற்கு முன்பு என்ன நடந்தது என்பது குறித்தும் கொஞ்சம் விரிவாக பார்ப்போம். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பின்னர், தமிழக முதல்வராக தேர்வு செய்யப்பட்ட ஓ பன்னீர்செல்வத்தை சசிகலா பதவியை ராஜினாமா செய்ய கூறியதாக கூறப்படுகிறது. இதனால் பதவியை ராஜினாமா செய்த ஓ பன்னீர்செல்வம் 2017-ம் ஆண்டு பிப்ரவரி 7-ந் தேதி சென்னை மெரினாவில் உள்ள ஜெயலலிதாவின் நினைவிடத்துக்கு சென்றார் ஓ.பன்னீர்செல்வம். அங்கு நீண்டநேரம் தியானம் செய்தார்.

சசிகலா
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பன்னீர்செல்வம், முதல்வர் பதவியில் இருந்து விலக வேண்டும் என கட்டாயப்படுத்தியதால் ராஜினாமா செய்தேன் என கண்ணீர் மல்க கூறியதுடன் தாம் தர்ம யுத்தம் தொடங்கி உள்ளதாகவும் பிரகடனம் செய்தார். இது ஓபிஎஸ் நடத்திய முதல் தர்ம யுத்தம் ஆகும். அதன்பிறகு சசிகலா டிடிவி தினகரன் அதிமுகவில் இருந்து வெளியேற்றப்பட்ட பிறகு மீண்டும் அதிமுகவில் சேர்க்கப்பட்ட ஓ பன்னீர்செல்வம் கட்சியின் ஒருங்கிணைப்பாளராக இருந்தார்.

தீர்ப்பு எதிராக காரணம்
அப்போது சசிகலா அதிமுக கட்சிக்காக தொடர்ந்த வழக்கில் முக்கியமான பாய்ண்ட் அவருக்கு எதிராக தீர்ப்பு வர காரணமாக இருந்தது. அதாவது சசிகலாவை பொதுச்செயலாளராக தேர்வு செய்த தீர்மானத்தை பொதுக்குழு ஏற்கவில்லை. அவரை பொதுச்செயலாளராக தேர்வு செய்ததை திரும்ப பெற்றது எடப்பாடி பழனிசாமி தரப்பு. அப்போது சசிகலாவை பொதுச்செயலாளராக ஏற்று பொதுக்குழு தீர்மானம் நிறைவேற்றததால், சசிகலாவிற்கு பின்னடைவாக அமைந்தது. அதே நிலை தான் ஓ பன்னீர்செல்வத்திற்கும் ஏற்பட்டுள்ளது. ஓ பன்னீர்செல்வம் கட்சியின் ஒருங்கிணைப்பாளராக தேர்வு செய்யப்பட்டதையும், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டதையும் பொதுக்குழு ஏற்கவில்லை. மாறாக நிராகரித்தது. ஒருவேளை அன்று இருவரையும் தேர்வு செய்தது செல்லும் என பொதுக்குழு ஒப்புதல் அளித்திருந்தால், அடுத்த சில ஆண்டுகளுக்கு இருவரும் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவியில் இருந்திருப்பாரகள்.

ஜூன் 23ல் நடந்தது
ஆனால் ஒற்றை தலைமை கோரிக்கை அதிமுகவில் அதிகமாக எழுந்தது. குறிப்பாக எடப்பாடி பழனிசாமி அதிமுக பொதுச்செயலாளராக வர வேண்டும் என்று அவரது ஆதரவாளர்கள் விரும்பினர். இதற்கு கட்சிக்குள் பெரும்பான்மையாக ஆதரவு இருந்தது. இதனால் ஓ பன்னீர்செல்வம் கட்சியின் ஒருங்கிணைப்பாளராக தேர்வு செய்யப்பட்டதையும், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டதையும் ஜூன் 23ல் நடந்த பொதுக்குழுவில் நிராகரித்தனர்.

ஜெயக்குமார்
ஜூன் 23ல் பெரும் பரபரப்புக்கு மத்தியில் அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் நடந்தது. தமிழ்மகன் உசேன் புதிய அவைத்தலைவராகத் தேர்வு செய்யப்பட்டார். அதிமுக ஒருங்கிணைப்பாளராக இருந்த ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் மேடை ஏறி அமர்ந்தனர். வளர்மதி பேசுவதற்கு முன்பாக மைக்கைப் பிடித்த முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் அனைத்து தீர்மானங்களும் பொதுக்குழுவால் நிராகரிக்கப்படுவதாக சத்தமாக கூறினார். பிறகு பேசிய வளர்மதி, எடப்பாடி பெயரையும், அவரது பதவிகளையும் குறிப்பிட்டு வரவேற்றார். ஆனால் ஓ.பி.எஸ். பெயரைத் தவிர்க்கும் வகையில் ஒருங்கிணைப்பாளர், துணை ஒருங்கிணைப்பாளர்களே என்று ஒரு வரியில் கடந்து சென்றார். பிறகு, பேசிய கே.பி. முனுசாமி, அனைத்து தீர்மானங்களும் நிராகரிக்கப்படுவதாக கூறினார். அத்துடன் அனைத்து பொதுக்குழு உறுப்பினர்களும் ஒற்றைத் தலைமையை விரும்புவதாக கூறினார். அப்போது பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், எடப்பாடி பழனிசாமியை ஒற்றைத் தலைமை நாயகன் என்று குறிப்பிட்டார்.

எடப்பாடி அதிரடி
2190 பொதுக்குழு உறுப்பினர்கள் கையெழுத்திட்டதாக கூறி ஒரு கடிதத்தை சி.வி.சண்முகம் புதிதாகத் தேர்வு செய்யப்பட்ட அவைத் தலைவர் தமிழ் மகன் உசேனிடம் அளித்தார். ஒற்றைத் தலைமை தேவை என்பதை வலியுறுத்தியே இந்த கடிதம் அளிக்கப்படுகிறது என்று பேசிய சி.வி.சண்முகம், இரட்டைத் தலைமையோடு திமுக-வை வலுவாக எதிர்த்துப் போராட முடியவில்லை என்று குறிப்பிட்டார். அத்துடன் அடுத்த பொதுக்குழுவுக்கான தேதியை புதிய அவைத் தலைவர் முடிவு செய்யவேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார். அடுத்து பேச வந்த தமிழ்மகன் உசேன் ஜுலை 11ம் தேதி அடுத்த பொதுக்குழு நடக்கும் என்று தெரிவித்தார். அதன்படியே ஜூலை 11ம் தேதி பொதுக்குழு கூடி, அவைத் தலைவராக தமிழ மகன் உசேன் முறைப்படி தேர்வு செய்யப்பட்டார், அன்றைக்கு எடப்பாடி பழனிசாமி தற்காலிக பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். அத்துடன் ஓ பன்னீர்செல்வமும் அவரது ஆதரவாளர்களும் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர். இதை உச்சநீதிமன்றமும் ஏற்றுக்கொண்டுள்ளது. எனவே சசிகலா, ஓ பன்னீர்செல்வம் இருவருக்கும் தலைமை பொறுப்பு கிடைக்காமல் போக பொதுக்குழு நிராகரித்ததே காரணம் என்கிறார்கள் அரசியல் நிபுணர்கள், இதன் மூலம் சசிகலா, ஓ பன்னீர்செல்வம் இருவரையும் ஒரே அஸ்திரத்தில் வீழ்த்தி தனது ராஜதந்திரத்தை நிரூபித்துள்ளார் எடப்பாடி பழனிசாமி என்றும் அரசியல் நிபுணர்கள் கூறுகிறார்கள்.












Click it and Unblock the Notifications