சல்லி சல்லியா நொறுங்கும் பாஜக "கணக்கு".. சரிக்கட்ட துடிக்கும் எடப்பாடி.. இதுதான் சசிகலா ஆட்டம்
எடப்பாடி பழனிசாமி அதிருப்தியாளர்களை சரிக்கட்டும் முயற்சியில் இறங்கி உள்ளார்
சென்னை: அடுத்தக்கட்ட நடவடிக்கைக்கு சசிகலா தயாராகி வரும் நிலையில், அதையெல்லாம் தவிடுபொடியாக்கும் திட்டத்தை கையில் எடுத்துள்ளதாம் எடப்பாடி தரப்பு.. இதனால் கொங்கு அதிமுகவே கலகலத்து காணப்படுகிறது..!
சசிகலா இப்போது வரை கட்சிக்குள் வரவில்லை.. அவரை கட்சிக்குள் சேர்த்து கொள்ள போவதில்லை என்ற முடிவையும் எடப்பாடி பழனிசாமி தரப்பு கைவிடவில்லை.
ஆனால் சசிகலா மீதான தன்னுடைய ஆதரவை, ஒவ்வொருமுறையும் ஓபிஎஸ் வாயை விடுவதும், அது சர்ச்சையாவதும், அதற்கு பிறகு எடப்பாடி ஓபிஎஸ் மீது கோபம் கொள்வதும், இறுதியில் அந்த விஷயத்தை சரிக்கட்டுவதுமாக நடந்து கொண்டிருக்கிறது அதிமுகவின் அரசியல்.

எடப்பாடி கறார்
மற்றொரு பக்கம் சசிகலா, ஆன்மீக பயணம் என்ற போர்வையில் ஆதரவாளர்களை திரட்டி கொண்டு வருவதிலும், இந்த நிமிடம் வரை எடப்பாடி பழனிசாமியை சமாதானம் செய்ய வைக்கும் முயற்சியிலும் உறுதியாக இருக்கிறார்.. இந்நிலையில் சசிகலா கொங்குவை குறி வைத்து காய் நகர்த்த தொடங்கி உள்ளாராம்.. இதற்கு 2 காரணங்களை சொல்லலாம்.. ஒன்று, எடப்பாடி பழனிசாமிக்கு செக் வைப்பது, மற்றொன்று டெல்லிக்கு சிக்னல் தருவது...!

எடப்பாடி பழனிசாமி
"சசிகலா ஒருபோதும் அதிமுகவில் நுழைய முடியாது.. அவருக்கு மேற்கு மண்டலத்தில் ஒருத்தர் சப்போர்ட்கூட கிடையாது" என்பதே எடப்பாடி பழனிசாமியின் பேச்சாக உள்ளது.. இதைதான் சுக்குநூறாக நொறுக்க பார்க்கிறாராம் சசிகலா.. அதனாலேயே தென்மாவட்டத்தை தொடர்ந்து கொங்கு மண்டலத்தில், வரும் 7ம் தேதி சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.. நிறைய சாமி தரிசனங்கள் இந்த சுற்றுப்பயணத்தில் இருந்தாலும்கூட, அரசியல் காரணங்கள் இப்போதே வட்டமடிக்க ஆரம்பித்துவிட்டன.

கோவை கவுண்டம்பாளையம்
ஆனால் பயணம் தொடங்குவதற்கு முன்பேயே கொங்குவில் இருந்து ஆதரவு குரல் ஏற்கனவே வெடித்துவிட்டது.. கோவை கவுண்டம்பாளையம் ஆறுக்குட்டி கடந்த சில தினங்களுக்கு முன்பு செய்தியாளர்களிடம் பேசினார்.. அப்போது, நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக பெருவாரியாக வென்றுள்ளது.. இதற்கு ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் என்று இரட்டை தலைமை இருப்பதே காரணம்... இது சரியில்லை... தலைமை சரியில்லாததால்தான் அதிமுக தொடர் தோல்விகளை சந்திக்கிறது.. அனைவரும் இணைந்து செயல்பட்டால்தான் வெற்றி பெற முடியும் என்றார்.. கொங்குவில் இருந்து ஆறுக்குட்டி இப்படி பேசியது எடப்பாடிக்கு சற்று அதிர்ச்சிதான்..!

தில்லுமுல்லுகள்
அதுமட்டுமல்ல, சசிகலாவே கொங்கு மக்கள் கவனிக்கும் வகையில் ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தார்.. அதில், "வெள்ளளூர் பேரூராட்சி மறைமுகத் தேர்தலில் திமுகவினர் தில்லுமுல்லுகளை அரங்கேற்றி முறைகேடாகப் பேரூராட்சியை தாங்கள் அபகரித்து விடலாம் என்று எண்ணி, மறைமுகத் தேர்தலை நடத்த விடாமல் தொடர்ந்து இடையூறு செய்வதை யாருமே ஏற்றுக் கொள்ளமாட்டார்கள்... இது கண்டனத்திற்குரியது" என்று குரல் கொடுத்திருந்ததையும் மறுக்க முடியாது.. இதெல்லாம் சேர்ந்துதான் எடப்பாடிக்கு லேசான கலக்கத்தை தந்து வருகிறது.

எடப்பாடி பழனிசாமி
அதனால்தான், அதிருப்தியாளர்களின் மீது எடப்பாடி பழனிசாமிக்கு கவனம் திரும்பியதாம்.. தன்னுடைய நிர்வாகிகளை அழைத்து, அவர்களின் கோரிக்கைகளை எல்லா விரைவில் நிறைவேற்றி விடலாம், தைரியம் சொல்லுங்கள்.. அவர்களை சரிக்கட்டுங்கள்,.. சமாதானப்படுத்துங்கள்.. ஆனால், சசிகலா பயணம் தோல்வி அடைய வேண்டும்" என்று உத்தரவிட்டுள்ளார். அதன்படி, அதிமுகவின் அதிருப்திகளை தேடி தேடி பிடித்து சமாதானம் செய்யும் வேலையில் ஒரு டீம் இறங்கி உள்ளதாம்.

பாஜக மேலிடம்
ஆனால், இவைகளை முறியடிக்க சசிகலா வேறு விதமான அஸ்திரத்தை கையில் எடுக்க கூடும் என்கிறார்கள்.. அதுமட்டுமல்ல, பாஜகவை பொறுத்தவரை சசிகலா விஷயத்தில் மூக்கை நுழைக்காமல் ஒதுங்கியே உள்ளது.. அதிமுக மேலிடத்துக்கு ஆதரவு தருகிறதே தவிர, சசிகலா பற்றின பேச்சையே எடுக்கவில்லை.. காரணம், தென் மாவட்டங்களில் ஒரு சமூகத்தினரின் வாக்குகளை மட்டுமே சசிகலா பெற்றுள்ள நிலையில், இது அதிமுகவுக்கு பொருந்தாது என்றும், சாதி ரீதியான முத்திரை கட்சியின் மீது விழுந்துவிடும் என்றும் பாஜக மேலிடம் நம்புகிறது.. அதனால்தான் டிடிவி தினகரனுக்கு தரும் ஆதரவைகூட சசிகலாவுக்கு தருவதற்கு தயக்கம் காட்டுவதாக தகவல்கள் கூறின.

கொங்கு மண்டலம்
பாஜகவின் இந்த எண்ணத்தை முறியடிப்பதே சசிகலாவின் திட்டமாம்.. கொங்கு மண்டலத்திலும் தனக்கு செல்வாக்கு இருக்கிறது, ஆதரவு இருக்கிறது என்பதை வெளிப்படுத்தவும், நிரூபித்து காட்டவும் இந்த பயணத்தை மேற்கொள்வதாக கூறப்படுகிறது.. சுருக்கமாக சொல்லப்போனால் எடப்பாடிக்கும், பாஜகவுக்கும் சேர்த்து மெசேஜ் சொல்வதுபோல இந்த கொங்கு மண்டல சுற்றுப்பயணம் இருக்கும் என்று நம்பப்படுகிறது.. பார்ப்போம்..!












Click it and Unblock the Notifications