வாக்கு எண்ணிக்கை எத்தனை சுற்று நடைபெறும்?.. இறுதி முடிவு எப்போது வெளியாகும் தெரியுமா?
சென்னை: தமிழகத்தில் 234 சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் கடந்த ஏப்ரல் 6-ம் தேதி நடைபெற்றது.
Recommended Video
இந்த ஆண்டு கொரோனா அச்சறுத்தி வந்ததால் மாஸ்க் அணிந்தும், சமூக இடைவெளி கடைபிடித்தும் என கொரோனா தடுப்பு விதிமுறைகளை கடைபிடித்து வாக்குப்பதிவு நடந்தது.

தமிழகத்தில் தேர்தல்
தமிழகத்தில் அ.தி.மு.க. கூட்டணி ஒரு அணியாகவும், தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் ஒரு அணியாகவும் மோதின. இது தவிர மக்கள் நீதி மய்யம் கூட்டணி, அ.ம.மு.க கூட்டணி களமிறங்கின. நாம் தமிழர் கட்சி தனியாக களம் கண்டது. தமிழகத்தை பாடாய்படுத்திய கொரோனாவுக்கு மத்தியில் இந்த கட்சிகளின் தலைவர்கள், வேட்பாளர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டனர்.

இன்று வாக்கு எண்ணிக்கை
இன்று தமிழகம் முழுவதும் 75 மையங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. ஒவ்வொரு மையத்திலும் 5 தொகுதிகளில் பதிவான வாக்குகள் எண்ணப்பட உள்ளன. பெரும்பாலான தொகுதிகளில் சராசரியாக 14 மேஜைகள் அமைக்கப்பட்டு வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. ஒவ்வொரு மேஜையிலும் தேர்தல் பணி மேற்கொள்ளும் ஒரு அலுவலர் இருப்பார். ஒவ்வொரு வேட்பாளர்களுக்கும் 14 முகவர்களும், ஒரு முதன்மை முகவரும் அனுமதிக்கப்படுவார்கள்.

43 சுற்றுகள்
சில பெரிய தொகுதிகளில் 28 மேஜைகள் வரை அமைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக காஞ்சிபுரம், சோழிங்கநல்லூர், உத்திரமேரூர் ,ஆலந்தூர், ஸ்ரீபெரும்புதூர் ஆகிய தொகுதிகளில் 28 மேஜைகள் போடப்பட்டுள்ளன.குறைந்தபட்சமாக அரவக்குறிச்சியில் 10 மேஜைகள் மட்டுமே அமைக்கப்பட்டுள்ளன. தமிழகம் முழுவதும் 13 சுற்றுகள் முதல் 43 சுற்றுகள் வரை வாக்கு எண்ணிக்கை நடைபெறவிருக்கிறது. செங்கல்பட்டு, பல்லாவரம் தொகுதிகளில் அதிகபட்சமாக 43 சுற்றுகளாக வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

இறுதி முடிவு எப்போது?
கொரோனா அச்சுறுத்தல் இருப்பதால், கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை கடைபிடித்து வாக்கு எண்ணிக்கை நடைபெறுவதால் இந்த முறை இறுதி முடிவுகள் தெரிய காலதாமதமாகும். அதிக சுற்றுக்களாக வாக்கு எண்ணிக்கை நடைபெறும் தொகுதிகளின் இறுதி முடிவு தெரிவதற்கு இரவு அல்லது நள்ளிரவாகலாம் எனக் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications