விறுவிறு விக்கிரவாண்டி தேர்தல்..களத்தில் இல்லாத அதிமுக! அசுர பலத்தில் திமுக.. பாமக செய்த சம்பவமே வேற
சென்னை: விக்கிரவாண்டி சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தல் ஜூலை 10ஆம் தேதி நடைபெற இருக்கும் நிலையில் திமுக - பாமக - நாம் தமிழர் என மும்மூனை போட்டி உருவாகி இருக்கிறது. அந்த தொகுதியில் கடந்த சட்டமன்றத் தேர்தல்களில் அரசியல் கட்சிகள் பெற்ற வாக்குகள் எவ்வளவு என்பது குறித்து பார்க்கலாம்..
மக்களவைத் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விழுப்புரம் மாவட்டத்தில் பிரச்சாரம் மேற்கொண்டார். அந்த கூட்டத்தில் பங்கேற்று இருந்தபோது தான் புகழேந்தி திடீரென மயங்கி விழுந்தார்.

இதையடுத்து அருகில் இருந்தவர்கள் உடனடியாக அவரை மருத்துவமனையில் அனுமதித்தனர். இருந்த போதும் சிகிச்சை பலனின்றி ஏப்ரல் 6ஆம் தேதி புகழேந்தி காலமானார். அவரது மரணத்தை தொடர்ந்து அந்த தகவலை தமிழ்நாடு சட்டசபை செயலகம் தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பியது. இதை அடுத்து விக்கிரவாண்டி தொகுதி காலியானதாக தேர்தல் ஆணையமும் அறிவித்திருந்தது
தேர்தல் ஆணையம்: ஏப்ரல் 19ஆம் தேதி முதல் ஜூன் ஒன்றாம் தேதி வரை மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு ஏழு கட்டங்களாக நடைபெற்ற நிலையில் ஏழாம் கட்ட தேர்தலோடு விக்கிரவாண்டி இடைத்தேர்தலும் நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தேர்தல் தேதி அப்போது அறிவிக்கப்படவில்லை. இந்த நிலையில் தற்போது நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் நிறைவடைந்திருக்கும் நிலையில் விக்கிரவாண்டி உள்ளிட்ட 13 தொகுதிகளில் இடைத் தேர்தலுக்கான தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது.
விக்கிரவாண்டி தொகுதி: அதன்படி விக்கிரவாண்டி தொகுதியில் ஜூலை 10ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் என்றும், ஜூலை 13ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஜூன் 14ஆம் தேதி இடைத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் தொடங்கும் என்றும், ஜூன் 21ஆம் தேதி வேட்பு மனுக்களை வாபஸ் பெறலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்று முன் தினம் வேட்புமனு தாக்கல் தொடங்கிய நிலையில், அரசியல் கட்சியினர் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை. அதே நேரத்தில் சுயேட்சைகள் வேட்புமனு தாக்கல் செய்து வருகின்றனர். அரசியல் கட்சிகள் தற்போது தான் தங்கள் வேட்பாளர்களை அறிவித்து வருகின்றன. அன்னியூர் சிவா விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடுவார் என நேற்று முன் தினம் அறிவிக்கப்பட்டது. மேலும் நாம் தமிழர் கட்சி சார்பில் அபிநயா போட்டியிடுவார் என அறிவித்துள்ளார் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான்.
கடந்த மக்களவை தேர்தலில் வெற்றி பெற்று மூன்றாவது முறையாக ஆட்சி அமைத்த என்.டி.ஏ கூட்டணி சார்பில் பாமக போட்டியிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அக்கட்சி சார்பில் சி.அன்புமணி போட்டியிடுவார் என அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் அறிவித்துள்ளார். இதனிடையே தமிழகத்தின் பிரதான எதிர்க் கட்சியான அதிமுக இந்த தேர்தலை புறக்கணித்துள்ளது தமிழக அளவில் பேசுபொருளாகியுள்ளது. இதன் காரணமாக விக்கிரவாண்டி சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தலில் திமுக - பாமக - நாம் தமிழர் என மும்மூனை போட்டி உருவாகி இருக்கிறது.
இதனிடையே கடந்த ஒரு சட்டமன்ற தேர்தல்களில் போட்டியிட்ட வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் குறித்து பார்க்கலாம்.. கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் அதிமுக எம்.எல்.ஏ.வாக இருந்த முத்தமிழ்ச் செல்வன் புகழேந்தி இடம் தோல்வி அடைந்தார். புகழேந்தி 93 ஆயிரத்து 730 வாக்குகளை பெற்றிருந்த நிலையில் அவரை எதிர்த்து போட்டியிட்ட முத்தமிழ்செல்வன் 84,157 ஓட்டுகளை பெற்றிருந்தார். வெறும் ஒன்பதாயிரம் வாக்கு வித்தியாசத்தில் புகழேந்தி எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அந்த தேர்தலில் தனித்தே களம் கண்டிருந்த நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஷீபா ஆஸ்மி 8,216 வாக்குகள் பெற்றிருந்தார்.
கடந்த 2016 சட்டமன்ற தேர்தலில் திமுக 63 ஆயிரத்து 757 வாக்குகளையும், அதிமுக 56 ஆயிரத்து 845 வாக்குகளையும் பெற்றிருந்தது. அப்போது தேர்தலில் தனித்து களம் கண்ட பாட்டாளி மக்கள் கட்சி 41,428 வாக்குகளை பெற்றிருந்தது. மக்கள் நல கூட்டணி என மூன்றாவது கூட்டணி அமைத்து போட்டியிட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 9,981 வாக்குகளை பெற்றிருந்தது.
வாக்கு சதவீதம் என்று பார்க்கும்போது அப்போதைய தேர்தலில் திமுக சுமார் 35 சதவீத வாக்குகளையும் அதிமுக 31 சதவீத வாக்குகளையும் பாமக 23 சதவீத வாக்குகளையும் சிபிஎம் 5 சதவீத வாக்குகளையும் பெற்றிருந்தது. இந்த தேர்தலில் திமுகவுடன் சிபிஎம் கூட்டணி இருக்கிறது. பாஜக பாமக உடன் கூட்டணி அமைத்திருக்கிறது. அதிமுக களத்தில் இல்லாத நிலையில் இந்த வாக்கு சதவீதங்கள் எப்படி மாறும் என்பது தேர்தல் முடிவில் தான் தெரிய வரும்..












Click it and Unblock the Notifications