வீட்டுக்கு போடும் கேஸ் சிலிண்டர் விலையில் வரிகள்.. விநியோகிஸ்தருக்கு எவ்வளவு.. எக்ஸ்ட்ரா 50 ஏன்?
சென்னை: வீட்டுக்கு போடப்படும் கேஸ் சிலிண்டருக்கு தட்டுப்பாடு ஏற்படும் என பயந்து மக்கள் இப்போது அதிக அளவில் புக்கிங் செய்வதாக எண்ணெய் நிறுவனங்கள் கூறுகின்றன. இந்த காரணத்தை கூறி 15 நாட்கள் என இருந்த கட்டுப்பாட்டை 25 நாட்களாக அதிகரித்துள்ளன. இதனால் சிலிண்டர் தேவைக்கு கிடைக்குமா என்று சந்தேகத்தில் மக்கள் உள்ளார்கள். சிலிண்டர் விலை ஏற்றம் ஒரு புறம் எனில், சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டால் பொதுமக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தும் நிலை உள்ளது. இந்த பதிவில் வீட்டுக்கு போடும் கேஸ் சிலிண்டர் விலையில் வரிகள் எவ்வளவு, விநியோகிஸ்தர் கமிஷன் எவ்வளவு, எக்ஸ்ட்ரா 50 ரூபாய் ஏன் வாங்குகிறார்கள் என்பதை பார்ப்போம்.
சிலிண்டர்களுக்கு நாடு முழுவதும் கடுமையான கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. சமைக்க சிலிண்டர் கிடைக்காமல் போகுமோ என்ற அச்சத்தில் இருக்கிறார்கள் மக்கள். ஓட்டல்களுக்கு சிலிண்டர்கள் விநியோகத்தில் கடும் தட்டுப்பாடு நிலவுவதால் உணவங்கள் கட்டாயமாக மூட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. சென்னை, பெங்களூரில் இதுதான் தற்போதைய நிலையாக இருக்கிறது. மற்ற ஊர்களிலும் தட்டுப்பாடும், கட்டுப்பாடும் இல்லாமல், மற்ற ஊர்களிலும் நிலைமை இப்படித்தான் மாறி வருவதாக கூறப்படுகிறது.

சமையல் எரிவாயு சிலிண்டரை பொறுத்தவரை இந்தியா வெளிநாடுகளில் இருந்துதான் இறக்குமதி செய்கிறது. சமையல் கேஸ்க்கு வளைகுடா நாடுகளை தான் பெரிதும் நம்பி இருக்கிறது. அமெரிக்கா ஈரான் மீது தொடுத்த போரால் இந்தியா தற்போது கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஏனெனில் எண்ணெய் விநியோகம், கேஸ் விநியோகம் தடை பட்டுள்ளது. இந்தநிலை காரணமாகவே கச்சா எண்ணெய் விலை சர்வதேச சந்தையில் கடுமையாக உயர்ந்தது. இதையடுத்து மார்ச் 7ம் தேதி வீட்டு உபயோக சிலிண்டர் ₹60 உயர்த்தப்பட்டது. இதனையடுத்து இன்றைக்கு சென்னையில் வீட்டு உபயோக சிலிண்டர் (14.2 kg) ₹928.50 ஆக உள்ளது. வணிக பயன்பாட்டு சிலிண்டர் (19 kg) விலை ₹2,043.50 ஆக உள்ளது.
சமையல் எரிவாயு சிலிண்டர்கள் ஜிஎஸ்டி வரம்பிற்குள் வருவதால், நாடு முழுவதும் ஒரே சீரான வரி விகிதமே பின்பற்றப்படுகிறது. மத்திய அரசு வரி (CGST) 2.5% விதிக்கப்படுகிறது.. மாநில அரசு வரி 2.5 சதவீதம் விதிக்கப்படுகிறது. ஒட்டுமொத்தமாக வீட்டு உபயோக சிலிண்டருக்கு மட்டும் 5 சதவீதம் வரி விதிக்கப்படுகிறது. அதாவது ₹44.36 ரூபாய் வரியாகும். விநியோகஸ்தர் கமிஷன் ₹61.84 ரூபாய் ஆகும். வரி, விநியோகிஸ்தர் கமிஷன் இல்லாமல் ₹822.30 ஆகும். ஒட்டுமொத்தமாக ₹928.50 ஆக உள்ளது.
இது தவிர டெலிவரி செய்பவருக்கு தனியாக 30 முதல் 50 ரூபாய் வரை தர வேண்டியுள்ளது. விநியோகஸ்தர் கமிஷனில் (₹61.84), சிலிண்டரை உங்கள் வீட்டிற்கு வந்து டெலிவரி செய்வதற்கான கட்டணமும் (சுமார் ₹27.60) இருக்கிறது. இதற்கு மேல் தனியாக டிப்ஸ் வழங்க வேண்டிய கட்டாயம் இல்லை. நாமாக பார்த்து தருவது தான். ஆனால் சில இடங்களில் கட்டாயப்படுத்தி வாங்குவதும் நடக்கிறது. சில இடங்களில் 3 மாடி ஏறவேண்டியதிருக்கும். அங்கு மக்கள் தாங்களாக முன் வந்து தருவதும் இருக்கிறது.












Click it and Unblock the Notifications