ரீல்ஸ் எடுக்க குவிந்த 2கே கிட்ஸ்.. திணறும் போலீஸ்.. நேப்பியர் "செஸ்" அலங்காரத்தால் புது பிரச்சனை!
சென்னை: செஸ் ஒலிம்பியாட்டை முன்னிட்டு சென்னை நேப்பியர் பாலத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக செய்யப்பட்ட ஏற்பாடுகள் தற்போது போலீசுக்கே சிக்கலாக முடிந்துள்ளது.
44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அடுத்த பூஞ்சேரியில் நடக்க உள்ளது. அங்கு இருக்கும் போர் பாயிண்ட் நட்சத்திர விடுதியில் இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெறும் இடத்தில் அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக செய்யப்பட்டு வருகின்றன.
வரும் ஜூலை மாதம் 28-ஆம் தேதி முதல் ஆகஸ்டு மாதம் 10-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. மாமல்லபுரத்தில் மட்டுமின்றி சென்னை முழுக்க இதற்காக அலங்காரம் செய்யப்பட உள்ளது.

அலங்காரம்
இப்போட்டியில் ஏறத்தாழ 187 நாடுகளிலிருந்து 2500-க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்க உள்ளனர். போட்டி நடைபெறும் இடத்தையும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் வளர்ச்சிப் பணிகள் செய்யப்பட்டு வருகின்றன. சென்னையில் சாலைகள் பல இடங்கள் புனரமைக்கப்பட்டு, அலங்காரங்கள் செய்யப்பட்டு வருகின்றன. அங்கு நடைபெறும் ஆயத்த பணிகள் மற்றும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்தும் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான குழுவும் சமீபத்தில் கூடஆய்வு செய்தது.

சென்னை அலங்காரம்
இந்த நிலையில் சென்னையில் பல இடங்களில் செஸ் ஒலிம்பியாட் போட்டிக்காக புதிதாக பல்வேறு அலங்காரங்கள் செய்யப்பட்டு வருகின்றன. பல இடங்களில் செஸ் ஒலிம்பியாட் தொடருக்கான லோகோவான "தம்பி" குதிரை பொம்மை வைக்கப்பட்டு உள்ளது. சென்னை மெரினா தொடங்கி பல இடங்களில் இந்த பொம்மை வைக்கப்பட்டு உள்ளது. அதோடு சென்னையை மொத்தமாக சுத்தம் செய்யும் மாஸ் கிளீனிங் பணிகளும் செய்யப்பட்டு வருகின்றன.

நேப்பியர்
நேப்பியர் தொடங்கி ஈசிஆர் வரை பல இடங்களை அலங்காரம் செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன. முக்கியமாக நேப்பியர் பாலம் செஸ் போர்ட் போல மாற்றப்பட்டு உள்ளது. அங்கு பாலத்தின் வளைவுகள் செஸ் போர்ட் போல வரையப்பட்டு இருக்கிறது. மேலும் சாலைகளும் செஸ் போர்ட் போல கருப்பு வெள்ளையில் வடிவமைக்கப்பட்டு உள்ளன. இங்குதான் செஸ் ஒலிம்பியாட் தொடருக்கான ப்ரோமோ வீடியோ எடுக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

பிரச்சனை
இந்த நிலையில்தான் இந்த அலங்காரம் காரணமாக போலீசார் கடுமையாக திணறி வருகின்றனர். அங்கு செஸ் போர்ட் போல செய்யப்பட்டுள்ள அலங்காரம் காரணமாக மக்கள் பல கூட்டம் கூட்டமாக வந்து அங்கு போட்டோ எடுக்க குவிகிறார்கள். அதிலும் சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை இரண்டு நாட்களும் மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து அந்த பாலத்தில் போட்டோ எடுக்க குவிந்தனர். இதனால் அங்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

போலீஸ்
இதுதான் தற்போது போலீசுக்கு பெரிய சிக்கலாக மாறி உள்ளது. அங்கு மக்கள் தொடர்ந்து குவிந்து, போட்டோ எடுப்பதால், போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திணறி வருகிறார்கள். பலர் நடுரோட்டில் நின்று போட்டோ எடுப்பதால் வாகனங்கள் செல்ல முடியாமல் திணறும் நிலை ஏற்பட்டுள்ளது. சிலர் டான்ஸ் ஆடுவதாலும்.. பல 2கே கிட்ஸ் அங்கேயே நின்று ரீல்ஸ் செய்வதாலும் போலீசார் இங்கு போக்குவரத்தை சரி செய்ய முடியாமல் கடுமையாக திணறி வருகின்றனர். விழிப்புணர்வை ஏற்படுவதுவதற்காக இங்கு செய்யப்பட ஏற்பாடுகள் தற்போது போலீசுக்கே சிக்கலாக முடிந்துள்ளது.












Click it and Unblock the Notifications