அர்ச்சகர்களுக்குப் பணி ஆணை; ஜல்லிக்கட்டு உரிமை மீட்பு..கருணாநிதி வழியில் ஸ்டாலின் சட்டப்போர்!
சென்னை: கருணாநிதி மறைந்து 5 வருடங்கள் கடந்துவிட்டது. அவருக்குப் பிறகு திமுக ஆட்சிக்கு வராது என்றார்கள் சில வலதுசாரிகள். 'ஸ்டாலினுக்கு கட்டம் சரியில்லை; ஆகவே அவர் முதலமைச்சராக ஆகவே முடியாது' என்றார்கள் சில ஜோதிடர்கள்.
அந்தக் கட்டத்தைப் பொய்யாக்கினார்கள் தமிழக வாக்காளர்கள். அதிக பெரும்பான்மையோடு அவர், தமிழ்நாடு முதலமைச்சராக ஆட்சிக் கட்டிலில் அமர்ந்தார்.

அன்று அவரிடம் தொடங்கியது முதல் மாற்றம். தனது இளமைக்காலம் முதல் மு.க.ஸ்டாலின் என்று அறியப்பட்டு வந்த அவர், தனது பதவிப்பிரமாணத்தின் போது 'முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்' என்றார்.
தனது கட்சியின் தலைவர் கருணாநிதி இல்லாமல் அமையப் போகும் முதல் அமைச்சரவை என்பதை உணர்ந்த அவர், தனது பதவியேற்பு விழாவில் அவரது பெயரும் ஒலிக்கவேண்டும் என்பதைத் திட்டமிட்டு, அந்த நிகழ்வை அமைத்தார்.

அத்துடன் ஸ்டாலின் நிற்கவில்லை; தனது ஆட்சிக் காலத்தை அடையாளப்படுத்தும் விதமாக 'இது திராவிட மாடல்' ஆட்சி என்று ஒரு கொள்கை முழக்கத்தை உருவாக்கினார்.
முதலமைச்சரானதும் அவரிடம் இதுகுறித்து ஒரு கேள்வி முன்வைக்கப்பட்டது. அதற்குப் பதிலளித்த ஸ்டாலின், "இது அண்ணாவின் ஆட்சி; கலைஞரின் ஆட்சி என்பதைப் போல் எனது ஆட்சியை ஸ்டாலின் ஆட்சி என மக்கள் குறிப்பிட வேண்டாம் என நினைத்தேன். ஆகவே எனது ஆட்சிக் காலத்தை 'திராவிட மாடல்' ஆட்சி என அடையாளப்படுத்த விரும்பி அதைச் செய்தேன்.' என்றார்.
திராவிட மாடல் என்பது 1914இல் தொடங்கியது. நீதிக் கட்சியின் நீட்சி என் ஆட்சி என அவர் ஒரு வரலாற்றுத் தொடர்ச்சியை முன்வைத்தார்.

இந்தக் கருத்தியல் களத்தில் ஸ்டாலின், மூத்த தலைவர்களைவிட ஒரு படி முன்னே சென்றார். அத்துடன் அவர் நின்றுவிடவில்லை. நீதிக்கட்சியில் முதன்முதலாக பள்ளிக் குழந்தைகளுக்கு உணவு வழங்கப்பட்டது.
அதை மனதில்வைத்து அதற்கான நூற்றாண்டு விழாவை ஒட்டி, அரசுப் பள்ளிக் குழந்தைகளுக்கு 'காலை உணவு' வழங்கும் புதிய திட்டத்தை மதுரை மாநகரில் தொடங்கி வைத்தார்.

சோதனை முயற்சியாகத் தொடங்கிய அத்திட்டம் மாபெரும் வெற்றி பெற்றது. பள்ளிக் குழந்தைகளின் வருகையை அது கூட்டியது. ஏறக்குறைய பல பள்ளிக் கூடங்களில் 100% என்ற அளவில் வருகைப் பதிவு கிடைத்தது. ஆகவே இத்திட்டம் தமிழ்நாடு முழுவதும் இந்தக் கல்வியாண்டு முதல் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதி ஆட்சிக்காலத்தில்தான் முதன்முதலாக, தொழில்நுட்ப உலகம் தமிழ்நாட்டில் கண்விழித்தது. 4.7.2000 அன்று தரமணியில் 'டைடல் பார்க்'கைத் திறந்துவைத்தார்.

அதுவரை சாஃப்ட்வேர் துறையின் 'ஹப்' ஆக ஹைதராபாத்தும் பெங்களூருவும் மட்டுமே இருந்துவந்தன. அதை மடைமாற்றி தமிழ்நாட்டுப் பக்கம் கொண்டுவந்தார் கருணாநிதி.
இன்றைக்கு உலக அளவில் சாஃப்ட்வேர் துறையில் தமிழர்கள் பெரிய வளர்ச்சியை எட்டி உள்ளனர். தமிழ்நாட்டைச் சேர்ந்த சுந்தர் பிச்சை கூகுள் நிறுவனத்தில் சி.இ.ஒ ஆக இருக்கிறார்.

இதற்கான முதல் விதையைப் போட்டவர் கருணாநிதி. அதன் தொடர்ச்சியாக இன்றைக்கு மதுரையில் ரூ.600 கோடி செலவிலும், வேலூரில் ரூ.30 கோடி செலவில் டைடல் பார்க் திட்டத்தை ஸ்டாலின் அறிவித்திருக்கிறார். மேலும் விழுப்புரம், திருப்பூர் மினி டைடல் பார்க்குகள் இந்த ஆட்சியில் வர உள்ளன.
சென்னையை மையமாக வைத்து நடந்த தொழில்நுட்ப புரட்சியை, இவர் தனது ஆட்சிக்காலத்தில் பிற மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்தி வருகிறார். சென்னையில் தொழில்நுட்ப நகரத்தையும் வரும் ஆண்டில் உருவாக்க உள்ளார்.
இந்தியாவிலேயே முதன்முறையாக 1990ஆம் ஆண்டு பம்பு செட் வைத்திருக்கும் அனைத்து விவசாயிகளுக்கும் இலவச மின்சாரம் திட்டத்தைக் கருணாநிதி அறிவித்தார். அதனால் பெரிய பலனை வேளாண் மக்கள் அடைந்தனர்.

அவரது ஆட்சியைப் பிரதிபலிக்கும் விதமாக, இரண்டு ஆண்டுகால ஸ்டாலினின் 'திராவிட மாடல்' ஆட்சியில் ஒரு இலட்சத்து 50 விவசாயிகளுக்கு இலவச மின்சார இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் வேறு எந்த ஆட்சிக்காலத்திலும் இவ்வளவு எண்ணிக்கையிலான இணைப்புகள் இதுவரை வழங்கப்பட்டதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சாதிபேதங்கள் அற்ற சமுதாயம், மூடநம்பிக்கை இல்லாத சமூகம் என்பது பெரியாரின் கனவு. ஆகவே 2.10.70 அன்று சட்டசபையில் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற சட்டம் ஒன்றை அன்றைய முதலமைச்சர் கருணாநிதி நிறைவேற்றினார்.

இத்திட்டத்தை ஆதரித்து 1972 மார்ச் 14-ம் நாள் உச்சநீதிமன்றம் தீர்ப்பும் வழங்கியது. ஆனாலும் அதைச் செயல்முறையில் வடிவம் பெறுவதில் தடைகள் இருந்தன. 2006ஆம் ஆண்டு மீண்டும் கருணாநிதி ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் 23.5.2006 அன்று அரசாணை பிறப்பிக்கப்பட்டது. மீண்டும் 2006இல் இவ்வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் தமிழக அரசின் அரசாணைக்கு இடைக்காலத் தடை விதித்தது.
பின்னர் நீதிபதிகள் ரஞ்சன் கோகாய்- என்.வி.ரமணா ஆகியோர் அமர்வு 16.12.2015இல் இந்த வழக்கில் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என தீர்ப்பு வழங்கியது.
பெரியாரின் கொள்கையை கருணாநிதி சட்டமாக்கினார். அதன் தொடர்ச்சியாக, கடந்த ஆகஸ்ட் மாதம் தனது ஆட்சியில் ஸ்டாலின் அனைத்து சாதிகளைச் சேர்ந்த 58 பேருக்குப் பணி நியமன ஆணையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். இவரது நடவடிக்கை கருணாநிதி ஆட்சியின் நீட்சியாக அடுத்தகட்ட வளர்ச்சியை நோக்கி முன்னேற்றம் கண்டுவருகிறது.
அதைப்போலவே கருணாநிதி ஆட்சிக்காலத்தில் தொடங்கிய ஜல்லிக்கட்டு சட்டப் போராட்டம் இன்று ஸ்டாலின் ஆட்சியில் முடிவை எட்டி இருக்கிறது. அரசியல்சாசன அமர்வு ஜல்லிக்கட்டுக்கு இருந்த தடையை உடைத்து சட்டரீதியாக அனுமதி வழங்கி இருக்கிறது.
ஆட்சிக்கு வந்ததும் இந்த அமர்வை ஸ்டாலின் தாமதிக்காமல் உடனடியாக அமைத்ததன் மூலமே இந்த வெற்றி சாத்தியமானது என்கிறார் கார்த்திகேய சிவசேனாதிபதி.
இப்படி கருணாநிதி என்றால், சட்டப் போராட்டம்தான் நினைவுக்கு வரும். அனைத்தையும் சட்டத்தின் மூலம் அவர் போராடி வாங்கித் தந்துள்ளார். இந்திய அரசியலமைப்புச் சட்டம் முதன்முறையாக திருத்துவதற்குக் காரணமாக இருந்ததே திராவிட இயக்கம்தான்.
அந்தச் சட்டப் போராட்டம் கருணாநிதியின் இறுதிக்கட்டத்திலும் நடந்தது. மெரினாவில் அண்ணாதுரை சமாதிக்குப் பக்கத்தில் இடம் கேட்டு அன்றைய தமிழக அரசை வலியுறுத்தியது திமுக. மு.க.ஸ்டாலினும் தனது கோரிக்கையை முன்வைத்தார்.
ஆனால், முகம் காட்டவில்லை அரசு. அப்படியே விட்டுவிடவில்லை ஸ்டாலின். திமுகவின் அடுத்த கட்ட தலைமையைத் தூக்கிச்செல்லும் துணிவோடு சட்டப்போராட்டத்தை நடத்தினார். இறுதியாக திமுகவின் மூன்றாவது தலைமுறை தலைவராக கருணாநிதிக்கு சட்டரீதியாக இடம் பெற்றுத் தந்தார் ஸ்டாலின்.
அந்தச் சட்டப்போராட்டம் முடிந்ததும் தனது பாசப் போராட்டத்தைத் தொடங்கினார் ஸ்டாலின். அப்போது அவர் ஒரு கவிதை எழுதினார். அது இன்றுவரை ஹைலட்!
அதில் அவர் சொன்னார்:
'அப்பா அப்பா' என்பதைவிட 'தலைவரே தலைவரே'
என நான் உச்சரித்ததுதான் என் வாழ்நாளில் அதிகம்
அதனால் ஒரே ஒருமுறை, இப்போது 'அப்பா'
என்று அழைத்துக் கொள்ளட்டுமா தலைவரே?












Click it and Unblock the Notifications