500 சீட்டுகளில் ஒன்றுகூடத் தமிழனுக்கு இல்லை! ‘நீட்’ தேர்வு இல்லை; அநீதி! கொந்தளிக்கும் கல்வியாளர்கள்!
சென்னை: நீட் தேர்வு கொண்டுவரப்பட்ட பிறகு தனியார் மருத்துவக் கல்லூரிகள் எப்படி வசூல் வேட்டை நடத்துகின்றன? நீட் தேர்வு நடைமுறை செய்யப்பட்ட பிறகு தமிழ்நாடு எந்தளவுக்கு வஞ்சிக்கப்பட்டுள்ளது? நமது வரிப்பணத்தில் உருவான மருத்துவக் கல்லூரிகள் எப்படி நம் கையைவிட்டு மத்திய அரசின் கட்டுப்பாட்டுக்குச் சென்றது என்பதைக் கல்வியாளர்கள் புட்டு புட்டு வைத்துள்ளார்கள்.
இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு, உதவிப் பேராசிரியர் பணி இடங்களுக்கான யுஜிசி நெட் தேர்வுகளில் முறைகேடுகள் நடந்துள்ள விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாடு முழுவதும் மாணவர்கள் மத்தியிலும் கல்வியாளர்கள் மத்தியிலும் கொந்தளிப்பை உண்டாக்கியுள்ளது. வினாத்தாள் கள்ளச்சந்தை மூலம் விற்பனை, தேர்வுகளில் ஆள் மாறாட்டம், கருணை மதிப்பெண்கள் வழங்கியதில் முறைகேடு என விதம் விதமான புகார் நெட் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டும் உள்ளன. நீட் நுழைவுத் தேர்வில் கருணை மதிப்பெண் பெற்ற 1563 மாணவர்களுக்கு நீதிமன்ற உத்தரவின்படி மறுதேர்வு நடத்தப்பட்டது. ஆனால், நடந்த மறுதேர்வில் 48% மாணவர்கள் பங்கேற்கவில்லை. சத்தீஸ்கர் மாநிலத்தில் ஒரு மாணவர் கூட நீட் மறுதேர்வு எழுத வரவில்லை.
நீட், நெட் முறைகேடுகள் தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள். நெட் முறைகேடு தொடர்பாக விசாரணை நடத்தச் சென்ற சிபிஐ அதிகாரிகள் பீகாரில் தாக்குதல் நடைபெற்றுள்ளது. நீட் தேர்வைப் பொறுத்த அளவில் ஆரம்பத்திலிருந்தே அதை எதிர்த்த முதல் மாநிலம் தமிழ்நாடுதான். இப்போது அந்தப் போராட்டம் நாடு முழுவதும் பரவி உள்ளது.
தமிழ்நாட்டுக்கு இழைக்கப்படும் அநீதி: இந்நிலையில் தமிழ்நாட்டில் உள்ள கல்வியாளர்கள் மற்றும் மருத்துவர்கள் நீட் தேர்வின் மோசடிகள் குறித்துப் பல விசயங்களை அம்பலப்படுத்தி வருகின்றனர். மருத்துவர் சாந்தி பல்வேறு உண்மைகளை உடைத்துப் பேசியிருக்கிறார். அவர், “நீட் தேர்வு பற்றிய விவாதங்களில் பாஜகவைச் சேர்ந்த பலர் என்ன சொல்கிறார்கள் என்றால், அதைக் காங்கிரசும் திமுகவும் கூட்டணியிலிருந்தபோதுதான் கொண்டு வந்தார்கள் என்கிறார்கள்.
அவர்களின் திட்டம் என்பதால் அது தொடர்ந்து நீடிக்க வேண்டுமா என்ன? உண்மையில் சொல்லப் போனால் உச்சநீதிமன்றத்தின் வழக்கின் அடிப்படையில் அரசு சட்டப்பூர்வமாக நீட் தேர்வை மாற்றியதே பாஜகதான். ஆகவே, ஒரு கட்சியினர் மற்றொரு கட்சியின் மீது புகார் போட்டுக் கொண்டே காலத்தைக் கடத்துவதை முதலில் நிறுத்த வேண்டும்.
புகார் வந்தால் அது பற்றி விசாரணை செய்வது அரசின் கடமை. நீட் தேர்வை தமிழ்நாட்டில் மட்டும் ஒரு லட்சம் பேர் எழுதுகிறார்கள் என வைத்துக் கொள்வோம். அப்படித் தேர்வு எழுதுகின்ற மாணவர்கள் யார்? அவர்கள் பெயர், ஊர் என்ன என்ற அடிப்படைத் தகவல்களைத் தெரிந்து கொள்ள வேண்டும் என மாநில அரசுக்கு ஒரு தேவை இருக்குமா? இல்லையா? எத்தனை மாணவர்கள் ஒபிசி, எஸ்.சி., எஸ்.டி? பெண்கள் எத்தனைப் பேர்? ஆண்கள் எத்தனைப் பேர் என்ற தரவுகள் வெளிப்படையாக உள்ளனவா? இல்லையே? விண்ணப்பங்கள் நேரடியாகத் தேசிய தேர்வு முகமைக்குப் போகிறது. ஆகவே மாநில அரசுக்கு அது பற்றிய தரவுகள் தெரியாது. தரவுகளைக் கேட்டால் கொடுக்க மறுக்கிறார்கள்.
இது என்ன தேர்வு முறை? இன்னொரு விசயத்தையும் சொல்கிறேன். உயர் மருத்துவ படிப்புகளுக்கான அதிக மருத்துவ சீட்டுகள் தமிழ்நாட்டில்தான் உள்ளன. ஆனால், ஒரே ஒரு சீட்டு கூட தமிழ்நாட்டுக்காக ஒதுக்கவில்லை. நம் மாநிலத்தில், நமது மக்கள் வரிப்பணத்தில் கட்டப்பட்டுள்ள 35க்கும் மேற்பட்ட மருத்துவக் கல்லூரிகளில் உயர்படிப்பு மருத்துவச் சிகிச்சைக்கான மருத்துவப் படிப்புகளில் 500க்கும் மேற்பட்ட இடங்கள் உள்ளன. ஆனால், நமக்கு என்று ஒரு சீட்டும் கிடைக்கப்படவில்லை. இப்படித்தான் நமது மாநில உரிமை பறிக்கப்பட்டு வருகின்றன.
தேர்வு முகமையே முறைகேடுகள் நடந்துள்ளது என்பதை ஏற்றுக் கொண்டுள்ளது. வினாத்தாள் கசிந்துள்ளதை ஏற்றுக் கொண்டுள்ளார்கள். இப்படி நடக்கும் ஒரு தேர்வு முறை எப்படி நல்ல மருத்துவர்களை உருவாக்கும்? வினாத்தாள் என்பது வெறும் 5 ஆயிரத்திற்கு கள்ளச்சந்தையில் வெளியாகி உள்ளது. நீட் தேர்வின் தரமும் லட்சணமும் இதுதான். மருத்துவ சங்கம் மூலம் தனியார் மருத்துவக் கல்லூரி மாணவர்களின் கட்டணத்தை நிர்ணயம் செய்யுங்கள் எனப் பல முறை கோரிக்கை வைத்துள்ளோம். இதுவரை ஏன் அதை நிர்ணயம் செய்யவில்லை? மாநில அரசு கட்டுப்பாட்டிலிருந்த போது தனியார் கல்லூரிகளின் கட்டணம் என்பது நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது. மேலும் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான மருத்துவ இடங்களை அரசுக்குத் தனியார் கல்லூரிகள் வழங்க வேண்டும் என்ற விதி இருந்தது.
இப்போது பாஜக அரசு என்ன சொல்லி இருக்கிறது? 50% இடங்களுக்கு நீங்கள் எவ்வளவு வேண்டுமானாலும் கட்டணத்தை நிர்ணயித்துக் கொள்ளலாம் என்று சொல்லிவிட்டது. ஆகவே, தனியார் கல்லூரிகள் 20 அல்லது 30 லட்சம் வரை நேரடியாக சட்டப்படி வசூலிக்கிறார்கள். இப்படித்தான் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் கட்டணமும் இதுவரை நிர்ணயம் செய்ய பாஜக அரசு தயாராக இல்லை. கோச்சிங் சென்டர்களின் கட்டணத்தைக் கூட இதுவரை நிர்ணயம் செய்யவில்லை இந்த அரசு. இவ்வளவு குழப்பத்தைச் செய்தது யார் காங்கிரஸ் அரசா? செய்தது எல்லாம் பாஜக. கேட்டால் நீட் காங்கிரஸ் ஆட்சியிலேயே கொண்டுவரப்பட்டது என்று சமாளிக்கிறார்கள். இது எந்த ஊர் நியாயம் சொல்லுங்கள்?” என்று கொந்தளிக்கிறார்.
கல்வியாளர் ஜெயப்பிரகாஷ் காந்தி, "முறைகேடு நடந்திருந்தால்தான் இந்த மாதிரியான கமிட்டியை அமைப்பார்கள். இப்போது விசாரணைக் குழு அமைத்துள்ள நிலையில் நீட் தேர்வை ஏன் நடத்த வேண்டும்? இப்படி எழும் பல புகார்களால் நீட் தேர்வு என்பது தேவையா? என்ற கேள்வி கூட எழுந்துள்ளது. கடந்த ஆண்டு, தகுதிக்கான அமைக்கப்பட்டிருந்த மதிப்பெண் அளவைக் கூட குறைத்துவிட்டார்கள். தேர்வில் முட்டை மதிப்பெண் பெற்றவருக்கு கூட முதுநிலை படிப்புக்கு அனுமதி அளித்தார்கள். நாம் முன்பே நீட் தேர்வின் தரம் பற்றிப் பல கேள்விகளை எழுப்பி வருகிறோம். பல புகார்களை முன்வைத்து வருகிறோம். பலர் நீட் தேர்வே தேவையில்லாதது என்று சொல்லி வருகிறார்கள். என்னுடைய கருத்து என்னவென்றால் 2024இல் நடைபெற்ற தேர்வை முழுமையாக ரத்து செய்துவிட்டு, புதிய தேர்வை நடத்த வேண்டும்” என்கிறார்.
மருத்துவர்கள் சங்கத்தைச் சேர்ந்த ரவீந்திரநாத், “தேசிய தேர்வு முகமைக்கு நாடு தழுவிய அளவில் நீட் தேவை நடத்துவதற்கான ஆற்றல் இல்லை. அதேபோல மோடி அரசுக்கு நீட் தேர்வை முறையாக நடத்துவதற்குத் திறமை இல்லை. ஆகவே, ஒரு நாடு, ஒரு தேர்வு என்ற திட்டத்தைக் கைவிட வேண்டும். அந்த அதிகாரத்தை மாநில அரசுக்கு வழங்க வேண்டும். இளநிலை, முதுநிலை மேலும் உயர் மருத்துவ படிப்புகளுக்கு அந்தந்த மாநில அரசுகளே தேர்வுகளை நடத்துவதற்கான அதிகாரத்தை அளிக்க வேண்டும்” என்ற கருத்தை முன்வைத்துள்ளார் இவர்
தேசிய தேர்வு முகமை அமைப்புக்குத் திறமை இல்லை. அதன் விளைவாகவே முதுநிலை நீட் தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நீட் முறைகேடு புகாரின் பேரில் தேர்வு முகமை தலைவர் மட்டுமே மாற்றப்பட்டுள்ளார். ஆனால், அனைத்து அதிகாரிகளையும் பணியிடை நீக்கம் செய்ய வேண்டும்.












Click it and Unblock the Notifications