பொங்கல் வந்தாச்சு.. கம்மி ரேட்டில் விமானத்தில் ஊருக்கு போக ஆசையா? இதை மட்டும் பாலோ பண்ணுங்க
சென்னை: இன்னும் சில நாட்களில் தமிழர் திருநாளாம் பொங்கல் கொண்டாடப்பட இருக்கிறது. பொங்கல் என்றாலே நம்மில் அனைவருமே சொந்த ஊருக்குச் சென்று குடும்பத்துடன் பொங்கலைக் கொண்டாடுவது தான் வழக்கம். அதன்படி இந்தாண்டு பொங்கல் கொண்டாடச் சொந்த ஊர் செல்வோர் கம்மி விலையில் விமான டிக்கெட் எப்படி புக் செய்யலாம் என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
தமிழர் திருநாளாம் பொங்கல் அடுத்த வாரம் கொண்டாடப்பட உள்ளது. ஜனவரி 14, 15, 16ம் தேதிகளில் முறையே பொங்கல், மாட்டுப் பொங்கல் மற்றும் காணும் பொங்கல் கொண்டாடப்பட உள்ளது.

பொங்கல்:
இந்தாண்டு பொங்கல் விடுமுறை செவ்வாய் முதல் வெள்ளிக்கிழமை வரை வரும் சூழலில் வெள்ளிக்கிழமையும் விடுமுறை விடுக்கவேண்டும் எனப் பலரும் கோரிக்கை விடுத்தனர். அதை ஏற்று ஜனவரி 17ம் தேதியை விடுமுறை தினமாகத் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. அதன்படி வரும் ஜனவரி 14 முதல் ஜனவரி 19 வரை 6 நாட்கள் தொடர் விடுமுறை வரும்.
ஆறு நாட்கள் தொடர் விடுமுறை என்பதால் பொதுமக்கள் சொந்த ஊர் செல்வார்கள். சொந்த ஊர்களுக்குப் போக ரயில் தான் பிரதான சாய்ஸ் என்றாலும் கூட ரயிலில் டிக்கெட் கிடைப்பதெல்லாம் குதிரைக் கொம்பு தான். சரி, பேருந்தில் தான் போகலாம் என்று பார்த்தால் அதன் ரேட் விமான விலைக்கு இணையாக இருக்கிறது. இவ்வளவு ரேட் கொடுத்துப் போக விமானத்திலேயே போகலாம் என்று பலருக்கும் தோன்றும்.
கை கொடுக்கும்:
அப்படி விமானத்தில் செல்ல விரும்பினால் கம்மி விலைக்கு விமான டிக்கெட் புக் செய்வது என்பது குறித்து நாம் பார்க்கலாம். இந்த பொங்கல் சமயத்தில் நீங்கள் விமானத்தில் போகவில்லை என்றாலும் கூட மற்ற நேரங்களில் விமான டிக்கெட் புக் செய்யும் போது இது நமக்கு கை கொடுக்கும்.
முதலில் முன்கூட்டியே புக் செய்யும் போது நமக்கு டிக்கெட் விலை குறைவாகக் கிடைக்கும். பொங்கலுக்கு சில நாட்கள் மட்டுமே இருப்பதால் இதை நாம் தள்ளி வைத்துவிடலாம். அடுத்து விமான டிக்கெட் விலையை பல்வேறு தளங்களில் ஒப்பிட்டுப் பாருங்கள். ஒவ்வொரு தளத்திலும் ஒவ்வொருவிலை இருக்கும். எனவே, அதை ஒப்பிட்டு புக் செய்யுங்கள்.
ஒப்பிட்டுப் பாருங்கள்:
உதாரணத்திற்கு ஞாயிற்றுக்கிழமை சென்னை டு கோவை ரூட்டில் மதியம் ஏர் இந்தியா விமானம் டிக்கெட் விலை ஒரு தளத்தில் ரூ.4700ஆக இருக்கிறது. அதேநேரம் ஏர் இந்தியாவின் அதிகாரப்பூர்வ தளத்தில் ரேட் ரூ.5299ஆக இருக்கிறது. சில தளங்களில் இதை விட கூட அதிகமாக இருக்கிறது. எனவே, டிக்கெட் விலையை ஒப்பிட்டுப் பார்த்து புக் செய்யுங்கள். என்னால் இந்த தளங்களில் எல்லாம் போய் செக் செய்ய முடியாது என்றால் இதற்காகவே கூகுள் பிளைட்ஸ் உள்ளிட்ட சேவை மற்றும் சில தளங்களும் உள்ளன அதை நாம் பயன்படுத்திக் கொள்ளலாம்.
அதிகாலை பயணம்:
அதேபோல அதிகாலை செல்லும் விமானங்களை புக் செய்யும் போது விலை குறைவாக இருக்கும். அதாவது சென்னை டூ கோவை செல்கிறோம் என வைத்துக் கொள்ளுங்கள். ஒரே நாளில் பல நேரங்களில் விமானச் சேவை இருக்கும். அதில் அதிகாலை 4 அல்லது 5 மணிக்கு இயக்கப்படும் விமானங்களில் பொதுவாக விலை கம்மியாக இருக்கும். அதேபோல மதியம் மற்றும் நள்ளிரவு நேரத்தில் இயக்கப்படும் விமானங்களிலும் விலை கம்மியாக இருக்கும். காலை மற்றும் மாலை நேரங்களில் உள்ள விமானங்கள் விலை சற்று அதிகமாக இருக்கும்.
மதியம் ஆபீஸ் இருக்கும் அதில் போக முடியாது.. அதிகாலையில் எப்படிச் செல்வது.. விமானத்தை மிஸ் செய்துவிட்டால் என்ன செய்வது என்று நீங்கள் கேட்கலாம்.. அதற்கு நீங்கள் வீட்டில் இருந்து இரவு 11 மணிக்கே கிளம்பிடலாம்.. விமான நிலையத்திலேயே லவுஞ்ச் இருக்கும். இப்போது நம்மிடம் இருக்கும் பெரும்பாலான கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளை வைத்து அந்த சேவையைப் பயன்படுத்தி விமானம் புறப்படும் நேரம் வரை ரெஸ்ட் எடுக்கலாம். எனவே, இந்த டிரிக்கை கூட நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.












Click it and Unblock the Notifications